பாஜகவுடன் மல்லுக் கட்டும் காங்கிரஸ்: அசாம் நிலவரம்!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நம்பி இருக்கும் மாநிலங்களில் ஒன்று –அசாம்.

மேற்குவங்கத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இந்த முறையும் முடிவு அப்படித்தான்  இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தமிழகத்தில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தயவில் 15 முதல் 18 இடங்களில் வெற்றி பெறக்கூடும்.

ஆரம்பத்தில் திமுகவிடம் ‘ஆட்சியில் பங்கு வேண்டும்‘ என காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் முழங்கினர். பின்னர் அந்த கோஷம் அடங்கிப்போனது.

திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைக்கலாம்.

புதுச்சேரியில் கடந்த தேர்தலில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் வென்றது. இந்த முறை பல தொகுதிகளில், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.

அந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாககூட காங்கிரஸ் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பது கள நிலவரம்.

கேரள மாநிலத்தில் இடதுசாரிகளும், காங்கிரசும் சம பலத்தில் உள்ளன.

இப்போது அசாம் நிலவரத்தை பார்க்கலாம்.

பாஜக ‘ஹாட்ரிக்‘ அடிக்குமா?

அசாமில் மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன.

ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கன பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் உள்ளன.

2016 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக 3–வது முறையாக ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க முனைப்பு காட்டுகிறது.

ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சராக இருக்கிறார். உள்கட்சி பூசலால், அசாம் பாஜக கலகலத்து காணப்படுகிறது.

தோழமையான கட்சியான அசாம் கனபரிஷத். சில இடங்களில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுகிறது.

ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசுவதையும் காண முடிகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ‘அசோம் சோன்காமிலிட்டோ மோர்ச்சா’ கூட்டணியில் அசாம் ஜதியா பரிஷத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்து கட்சி மலையக தலைவர்கள் கவுன்சில் ஆகிய கட்சிகள் உள்ளன.

2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பதுருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்த முறை ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கை கோர்த்துள்ளது.

இந்த தேர்தலை கவுரவ் கோகாய் தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்கிறது. இவர் அசாம் முன்னாள் முதலமைச்சர் அருண் கோகாயின் மகன்.

பாஜக, காங்கிரஸ் கூட்டணி தவிர அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ராய் ஜோர் தளம் ஆகிய சிறு கட்சிகள் எந்த கூட்டனியிலும் சேராமல் தனித்து களம் காண்கின்றன.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை இந்த கட்சிகள் பிரிக்கும் என்பதால் பாஜக கொஞ்சம் தெம்பாக உள்ளது.

கடந்த தேர்தலில், பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

அசாமில் இந்த முறை போட்டி கடுமையாக உள்ளது.

யார் வெல்வார்கள் என்பதை கணிக்க முடியவில்லை.

– பாப்பாங்குளம் பாரதி

You might also like