என் பத்திரிகையாளர் பணியைச் செறிவாக்கிய ஆளுமைகள்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 10

பொதுவாக நேர்காணல், பேட்டி என்கின்ற இரு ஊடகச் சொற்களுக்கு இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பலர் நினைக்கலாம்.

நேர்காணல் என்பது சாதாரண சந்திப்பு மாதிரி இல்லாமல், ஒருவருடைய வாழ்வின் பயணம் சார்ந்தது. ஓரளவுக்கு முழுமைக்கான முயற்சி என்றும் சொல்லலாம்.

ஆனால், பேட்டி என்பது அப்படிப்பட்டதல்ல, குறிப்பிட்ட அரசியல் மற்றும் சமூகச் சூழலில் அந்த நேரத்திய தேவைக் கருதி ஒருவரை சந்திப்பதைப் பேட்டி என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

மேலே சொன்ன இரண்டு விதமாகவும் பல்வேறு தலைவர்கள், ஆய்வாளர்கள், திரைக் கலைஞர்கள், ஓவியர்கள், இசை மற்றும் நாட்டியக் கலைஞர்கள் என்று பலரையும் பல்வேறு ஊடகங்களுக்காகச் சந்தித்திருக்கிறேன். 

அத்தகைய சந்திப்புகளில்தான் எவ்வளவு நிறைவான அனுபவங்கள்?

கலைஞர் கருணாநிதி அவர்களை பலமுறை பேட்டிக்காகச் சந்தித்திருக்கிறேன் என்றாலும், தேசிய அளவில் ஒரு தீவிரமான பிரச்சனை எழுந்திருந்த நேரத்தில், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன்.

அப்போது அவர் தமிழக முதல்வர். சட்டமன்றத் தொடர் நடந்து கொண்டிருந்த நேரம். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட பேட்டியின்போது, வழக்கம்போல அந்த உரையாடலை டேப்பில் பதிவு செய்து கொண்டிருந்தேன்.

தேசிய அரசியல் பற்றிய ஒரு கேள்விக்கு சற்று உணர்வு வயப்பட்டு பதில் சொன்னவர் கொஞ்ச நேரத்திலேயே,

“நான் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. தவறிப்போய் உங்கக் கிட்ட பேசிட்டேன். இந்த கேள்வியும் பதிலும் வெளிவரக்கூடாது. வந்தால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அதானல, இத மட்டும் தவிர்த்துட்டு இந்தப் பேட்டியை எழுதி எடுத்துக்கிட்டு நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறைக்கு வந்துருங்க.

சட்டமன்றத்துக்குள்ளேயே நான் இருந்தாலும், நீங்க வந்த தகவல் தெரிஞ்சா நான் உடனே என்னுடைய அறைக்கு வந்து, நீங்க எழுதிட்டு வந்தத ஒரு பார்வை பார்த்துட்டுப் போயிருவேன்” என்று புன்னகைத்தபடி சொன்னார்.

மறுநாள் அவர் சொன்னபடியே காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறைக்குப் போனபோது அவரது உதவியாளர் சண்முகநாதன் அங்கு இருந்தார்.

நான் அங்கு போனதும் என்னை அமரச் சொல்லிவிட்டு சட்டமன்றத்திற்குள் இருந்த கலைஞருக்கு தகவலைச் சொன்னார்.

சிறிதுநேரம் கழிந்திருக்கும். சட்டமன்றத்திலிருந்து நேரே அவரது அறைக்கு வந்து “எழுதினத கொடுங்க” என்றவர், கையில் வைத்திருந்த பேனாவினால் சில ஃபுரூப் திருத்தங்களையும் செய்தார்.

10 நிமிடங்கள்தான் இருக்கும். அதற்குள் அந்தப் பேட்டியை திருத்தி முடித்துவிட்டு, புன்முறவலுடன் என்னிடம்,

“நான் சொன்னபடியே நான் தவிர்க்கச் சொன்ன பகுதியைத் தவிர்த்திருக்கீங்க நன்றி. வரட்டுமா?” என்றபடியே மறுபடியும் சட்டமன்றத்திற்குள் சென்றுவிட்டார்.

சில நாட்களுக்குள் அந்தப் பேட்டி கவர் ஸ்டோரியாக வெளியானபோது, காலை நேரத்தில் வீட்டுத் தொலைபேசி வழியாக அழைத்து, மென்மையானபடி நன்றியைச் சொன்னார் கலைஞர்.

‘தீராநதி’ இலக்கிய இதழுக்காக அவரை வித்தியாசமான முறையில், நேர்காணல் எடுக்க வேண்டும் என்று நான் சொன்னபோது, ஒப்புக்கொண்டு வரச் சொன்னார்.

அந்த நேர்காணலுக்காக சுமார் இரண்டரை மணி நேரத்தை ஒதுக்கியிருந்தார்.

அந்த நேர்காணலுக்காக அவருடைய வீட்டிற்கு மாலை நேரத்தில் போனபோது, சிரித்தபடி வரவேற்றார். நான் கையில் வைத்திருந்த குறிப்பேட்டை பார்த்தவர்,

”என்ன கேள்விகளைத் தயார் பண்ணி எடுத்துட்டு வந்துடீங்களா?” என்று கேட்டவர், அந்தக் குறிப்பேட்டை வாங்கி, கேள்விகளை நிதானமாக வாசித்துப் பார்த்தார்.

பிறகு, என்னைப் பார்த்து இளஞ்சிரிப்புடன் “ஆரம்பிக்கலாம்” என்று சொன்னவர், எல்லா கேள்விகளுக்கும் சற்றே சிக்கலான அரசியல் சார்ந்த கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்தார். 

நேர்காணல் ஒருவழியாக முடிந்ததும் எங்கள் இருவருக்கும் காஃபி கொண்டுவரச் சொன்னார். காஃபி வந்தது.

அதை குடித்தபடியே என்னைப் பார்த்தவர், “எப்படியாவது என்னை சிக்க வைக்கணும்னு கேள்விகளைத் தயார் பண்ணிட்டு வந்திருக்கீங்க. எப்படியும் சிக்கிடக் கூடாதுங்கிற மாதிரி நான் பதில் சொல்லியிருக்கிறேன்” என்று சொன்னபடி அன்னாந்து சிரித்தார்.

இதேபோல் அண்மையில் மறைந்த முதுபெரும் அரசியல் தலைவரான ஆர்.நல்லகண்ணு அவர்களை, கடந்த 35 ஆண்டுகளில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

பல சந்தர்ப்பங்களில் அவரை பேட்டி எடுத்திருக்கிறேன் என்றாலும் கூட அவருடைய மனைவி திருமதி ரஞ்சிதம் அவர்கள் மறைந்த சில தினங்களுக்குள் சந்தித்தபோது, ஆசிரியர் பணியில் அவரது மனைவி இருந்தவாறே, தனக்கு எந்தெந்த விதத்தில், நம்பிக்கை ஊட்டுகிறபடி இருந்தார் என்பதை நெகிழ்வாகச் சொல்லிக்கொண்டு போனார்.

அப்போது, வழக்கமாக அவரது முகத்தில் தென்படும் புன்னகைக் கீற்று காணாமல் போய், கண்ணில் நீர் நிறைந்திருந்தது. அவருடனான அந்தப் பேட்டி பிரபல வார இதழில் வெளியானது. 

‘புதிய பார்வை’ இதழுக்காக விரிவான நேர்காணலை அவரிடம் சொன்னபோது, இரண்டு அமர்வுகளாக அதை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.

எங்கோ பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த காலத்திய டைரிகளை எடுத்துவந்து அவர் எழுதியிருந்த கவிதைகளை வாசித்துக் காண்பித்தார்.

அவருக்கு மிகவும் பிடித்தமான மேற்கோள்களையும் அதை எழுதியிருந்தார்.

அதை இரண்டு அமர்வுகளில் ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்த பால்ய காலத்து வாழ்க்கைத் துவங்கி, பள்ளிக் காலத்து தோழமை, பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து முனைப்புடன் செயல்பட்ட ஆரம்ப நாட்கள், மடத்தின் கையிருப்பிலிருந்த நிலங்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த அனுபவம்,

மதுரை சிறையில் சக தோழரான தூக்குமேடை பாலு, மதுரை சிறையில் அதிகாலை நேரத்தில் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, உணர்ச்சிவசப்பட்ட குரலில் தாங்கள் புரட்சிகரமாக முழங்கிய அனுபவம்,

சிறைக் கொட்டடியில் கடுமையான சித்ரவதைக்கிடையில் தனது மீசை காவலரின் சிகரெட்டால் பொசுக்கப்பட்ட அனுபவத்தையும் நிறைவாக பொதுவுடமைக் கட்சியில் தான் தலைமைப் பொறுப்பிலிருந்தபோது,

பாலன் இல்லத்தில் கழித்த எளிமையான நாட்களையும் பற்றி மிக விரிவாகப் பேசியதை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து வீட்டிற்குச் சென்ற கையோடு, உடனே அந்த நேர்காணலை எழுதி முடித்தபோது, அது பல பக்கங்களுக்கு நீண்டிருந்தது. 

சில நாட்களுக்குள் அவரை வீட்டில் சந்தித்து அந்த நேர்காணல் பிரதியை அவரிடம் அளித்தபோது, கையில் ஒரு பேனாவை வைத்தபடி நிதானமாக ஃப்ரூப் பார்த்துக் கொடுத்தார்.

அந்த நேர்காணல், நிறைவாக வந்திருப்பதாக சிக்கனமான வார்த்தைகளில் பாராட்டினார்.

‘வெடிகுண்டுகளுடன் கைதானேன்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த நேர்காணல் பெரும் வரவேற்பைப் பெற்று நூல் வடிவமும் பெற்றிருக்கிறது.

முதுமையான வயதிலும் கூட தான் சம்பந்தப்பட்ட விஷயத்தில், குறிப்பாக ஃப்ரூப் பார்ப்பதில் கூட அவர் காட்டிய பெர்பெக்ஷனை மறக்க முடியாது.

இதேமாதிரி அனுபவம்தான் தற்போதைய மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல்ஹாசனுடனும் நடந்தது.

ஏற்கனவே அவரை சில முறை சந்தித்திருந்தாலும், ‘தீராநதி’ இதழுக்கான நேர்காணலுக்காக இரண்டு அமர்வுகளாக ஏறத்தாழ ஐந்தரை மணி நேரம் அளவுக்கு அவர் நேரத்தை ஒதுக்கி மிக விரிவாக தன்னைப் பற்றி பதிவு செய்தார்.

“நேர்காணலை எழுதி எடுத்துட்டு வாங்க” என்று சொன்னவர், அதற்கான நேரத்தையும் குறிப்பிட்டுச் சொன்னார்.

அவர் சொன்னபடியே அதைத் தட்டச்சு செய்து நான் எடுத்துச் சென்றபோது, அந்தப் பிரதியை வாங்கி கவனமாக ஃப்ரூப் பார்த்து நிறைந்த முகத்துடன் கொடுத்தார்.

எந்தவிதமான வீணான சர்ச்சைகளுக்கும் இடமளிக்காமல், இந்த நேர்காணல் வெளிவந்திருப்பதாகவும் சொன்னார்.

அடுத்த மாதத்திய ‘தீராநதி’ இதழில், கவர் ஸ்டோரியாக அவரது நேர்காணல் வெளிவந்தபோது, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த அவர், குமுதம் ஸ்டாலுக்கு வந்து அங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 தீராநதி இதழ்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டுபோனது, நல்ல அனுபவம்.

அதைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய சிந்தனை கொண்டவரான மூத்தத் தலைவரான கோவை ஞானி அவர்களை அவரது வீட்டில் சந்தித்தபோது பார்வையை இழந்திருந்தார்.

அவர் பார்வையை இழக்கும்முன்பே நான் ஏற்கனவே சந்தித்திருந்ததால், எனது குரலை அடையாளம் வைத்திருந்தார்.

மிகவும் உற்சாகமான மனநிலையில், அவருடனான நேர்காணல் 5 மணி நேர அளவுக்கு மேல் நீண்டிருந்தது.

இடையிடையே சிறு கால இடைவெளியில் அமைந்தாலும் அந்த நேர்காணலுக்காக அவர் நெருக்கமான நட்புணர்வுடன் அவர் காட்டிய அன்பையும் சிறிதும் சலிப்பேறாத அவரது இயல்பான குரலையும் எப்போதும் நினைவிலிருந்து சுலபமாக அகற்ற முடியாது.

அடுத்து தோழர் தொ.பரமசிவன் அவர்களுடனான நேர்காணல். அப்போது, மதுரைக்கு வந்திருந்து அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தபோது நடந்த நேர்காணலும் இரண்டு அமர்வுகளாக நீடித்தது.

தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாடு தொடர்பான பல்வேறு விஷயங்களை கடகடவென்று ஒப்பிப்பதைப் போல, பேசிக் கொண்டே போனார்.

நேர்காணல் நிறைவடைந்ததும், “ஃப்ரூப் பார்க்கிறீங்களா” என்று நான் கேட்டபோது, “தேவையில்லை மணா, நீங்களே பார்த்துக்கோங்க…” என்று மிருதுவாகச் சொன்னார்.

‘தீராநதி’ முதல் இதழில் வெளிவந்த அவருடைய நேர்காணல் பெரும் கவனத்தைப் பெற்றது.

இன்னொரு சுவாரஸ்ய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

“என் இனிய தமிழ் மக்களே” என்று அடிக்கடி தமிழ் மக்களை விளிக்கும் தமிழ்த் திரை இயக்குநரான பாரதிராஜா அவர்களை அவரது வீட்டில், சந்திக்கப் போனபோது வித்தியாசமான நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது.

தேனி அல்லிநகரம் துவங்கி, மயில் என்கிற திரைப்படத்தை முதலில் எடுக்க முயற்சித்து நீண்ட தன்னுடைய வாழ்வைப் பற்றி சுமார் 4 மணி நேரம் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்துவிட்டு,

வீட்டிற்கு வந்த கையோடு, அதை எழுத உட்கார்ந்தபோதுதான் தெரிந்தது, அந்த டேப் ரிக்கார்டரில் முழு நேர்காணலும் பதிவாகவில்லை என்பது. மிகவும் அதிர்ந்துபோனேன்.

அந்த மாதத்திய ‘தீராநதி’ இதழில் அவருடைய நேர்காணலைத்தான் கவர் ஸ்டோரியாக வெளியிட இருந்த நிலையில், இப்படியொரு தொழில்நுட்பச் சிக்கல். 

என்ன செய்வது? மறுபடியும் இயக்குநர் பாரதிராஜாவை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டபோது, அவரது வழக்கமான குரலை இன்னும் சற்றே உயர்த்தி கொந்தளித்துவிட்டார். 

“நான் பல பேர்கிட்ட ரீ டேக் எடுத்து நடிக்க வைச்சிருக்கேன். நீ என்ன பண்ணித் தொலைஞ்சியோ… இப்ப என் கிட்டயே ரீ டேக் எடுக்கப் பாக்குற…” என்று உணர்ச்சிவசப்பட்ட அவரை சாந்தப்படுத்தவே சில நிமிடங்களானது.

“சரி வந்து தொலைய்யா.. நாளைக்கு காலையில வா… ஆனா, நேத்து கேட்ட அதே கேள்விய இன்னைக்கு கேட்கக் கூடாது. கேள்விகள் எல்லாத்தையும் மாத்தி எடுத்துட்டு நாளைக்கு கரெக்டா… நா சொன்ன நேரத்துக்கு வந்து சேரு…”

– என்று அவர் சொல்லி அடங்கிய பிறகு மறுநாள் அவருடைய வீட்டிற்கு அவர் சொன்னபடியே கேள்விகளை வேறு விதமாக தயாரித்து, திரும்பவும் 4 மணி நேர அளவுக்கு நேர்காணல் போய், அது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன்பிறகு, என்னை போனில் கூப்பிட்ட இயக்குநர் பாரதிராஜாவின் குரலில் சாந்தமும் அன்பும் கூடியிருந்தது.

அவர் வழக்கமாக அழைக்கும், இனிய தமிழ் மக்களில் நானும் ஒருவனாகிப் போயிருந்தேன்.

அதைப்போலத்தான் திராவிடக் கழகப் பொதுச் செயலாளரான ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடனான நேர்காணலும், இரு அமர்வுகளாக அமர்ந்து பதிவு செய்யப்பட்டு, பரவலான கவனத்தைப் பெற்றது.

இந்தவிதமான நேர்காணல்களில் நவீன ஓவியரான ஆதிமூலம் அவர்களுடனான நேர்காணல் தனித்துவமானது.

தென் மாவட்டத்தில், ஓர் எளிய கிராமப் பின்னணியிலிருந்து சென்னையில் ஓவியக் கல்லூரியில் படித்து தன்னுடைய தனித்துவமான ஓவியக் கோடுகளால், சர்வதேச மதிப்பைப் பெற்ற அவரது வாழ்வை சென்னை புறநகர் பகுதியில் இயற்கையோடு ஒன்றிய அவருடைய வீட்டில் எடுத்தபோது, அலாதியான உற்சாகம் அவரிடம் வெளிப்பட்டது.

அந்த நேர்காணல் வெளிவந்த பிறகும் எங்களுக்கிடையிலான நட்பும் அதிகரித்தது.

அதன் தொடர்ச்சியாக ஒருநாள் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்து தான் வரைந்திருந்த ஒரு கூத்துக் கலைஞனைப் பற்றிய ஓவியத்தை ஃப்ரேம் செய்து,

“எதிர்காலத்தில் இந்த ஓவியம் உங்களுக்கு தகுந்த நேரத்தில் உதவினால், எனக்கு மகிழ்வாக இருக்கும்” என்று அவர் கொடுத்த அந்த கணம் இப்போதும் நெகிழ்வான ஓவிய நிகழ்வாக மனதில் நிற்கிறது.

இப்படி 30 வெவ்வேறு ஆளுமைகளுடன் நான் எடுத்துத் தொகுத்த ‘ஆளுமைகள் – சந்திப்புகள் – உரையாடல்கள்’ என்கின்ற 500 பக்க அளவிலான தொகுப்பு நூல், பெரும் பாராட்டைப் பெற்ற நிலையில், பி.ராமமூர்த்தி நினைவுப் பரிசையும் பெற்றுத் தந்தது. 

பத்திரிகை மற்றும் ஊடக வாழ்வில் நான் பெற்ற மகத்தான அனுபவங்கள் என்று இந்த நேர்காணல் மூலமாக கிடைத்த அனுபவங்களைச் சொல்லலாம்.

– மணா

You might also like