ஒரு மனிதனின் ஆரோக்கியம் என்பது உடல் மற்றும் மனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நல்வாழ்வு நிலையாகும்.
தனிமனிதனின் ஆரோக்கியம் மேம்பட்டால் சமூக நலமும் மேம்படும். ஆகையால், அதனைப் பேணிக் காப்பது மிகவும் அவசியமாகிறது.
பலவித காரணிகளால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்றாலும் அவற்றுள் முக்கியமானது நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாகும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பைவிட அதிகமாக இருப்பதையே இது குறிக்கிறது.
கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் போதுமான அளவு சுரக்காத நிலையிலோ அல்லது நமது உடலானது இதனை சரிவர பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ அதை நீரிழிவு நோய் என்கிறோம்.
நாம் உண்ணும் உணவில் வைட்டமின்கள், மினரல்கள், கார்போ-ஹைட்ரேடுகள், தாது உப்புகள் போன்ற பல வகை ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இன்சுலின் ஆனது, சத்துக்களினால் பெறப்படும் சர்க்கரையை, செல்களுக்குள் அனுப்பி ஆற்றலாக பயன்படுத்த உதவுகிறது.
இந்த இயக்கம் தடைபடும்போது, அதிகப்படியான சர்க்கரை ஆனது ரத்தத்தில் கலந்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.
நீரிழிவு நோயானது
Type 1 மற்றும் Type 2 என இரண்டு வகைப்படும்.
Type 1: இது auto immune disease எனப்படும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பானது ஆரோக்கியமான செல்களை தாக்குவதால் ஏற்படுகிறது.
இதனால் கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்க முடியாத நிலை ஏற்படும்.
Type 2: உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத நிலையால் ஏற்படுவதாகும்.
அதீத தாகம், அளவற்ற பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீர் எடை இழப்பு சோர்வு மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
இந்நோய் கட்டுப்பாடு இன்றி சென்றால், அது இதயம், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம் மற்றும் கண்கள் போன்ற பல பாகங்களை பாதிக்கக்கூடும்.
இந்நோயைக் கண்டறிதல் மற்றும் இதற்கான சிகிச்சை முறைகளில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.
பொதுவாக இந்நோயைக் கண்டறிவதற்கு குளுக்கோஸ் டாலரென்ஸ் டெஸ்ட் (GTT) என்னும் எளிய சோதனை நடைபெறுகிறது.
இதில், ரத்த சர்க்கரை அளவு சரிபார்க்கப்பட்டு நோய் கண்டறியப்படுகிறது. இதைவிட மேம்பட்ட சோதனை கிளைகோசிலேட் ஹீமோகுளோபின் (HbA1c) என்பதாகும்.
இந்த பரிசோதனையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், எப்பொழுது வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்பதே.
கடந்த மூன்று மாதங்களுக்கான சராசரி ரத்த சர்க்கரை அளவினை இதன் மூலம் துல்லியமாக கண்டறிய முடியும்.
HbA1c அளவுகள் 5.7 க்கு குறைவாக இருந்தால் சர்க்கரையின் அளவு சரியாக உள்ளது என்றும் 5.7 முதல் 6.4 வரை இருந்தால் சர்க்கரை நோயின் ஆரம்ப நிலை எனவும் கருதப்படும்.
6.5-க்கு மேல் இருந்தால் நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்படும். தற்போது இந்நோய் கண்டறிதலில் மேலும் ஒரு புதிய முறை பயன்படுத்தப்படுகிறது.
இதுதான் கண்டினியூஸ் குளுக்கோஸ் மானிட்டரிங் ஸ்டடிஸ் (CGMS) என்பதாகும். இதில் பயன்படுத்தப்படும் பொருளை கையில் ஸ்டிக்கர் போல ஒட்டிக் கொள்ளலாம்.
இதில் உள்ள சென்சார், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிமிடத்திற்கு ஒருமுறை கணக்கிட்டு ப்ளூடூத் வழியாக நோயாளியின் செல்போனிற்கு அனுப்பும்.
இதற்கென தனிப்பட்ட செயலி இருப்பதால் அதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை எப்போது வேண்டுமென்றாலும் தெரிந்து கொள்ளலாம்.
நோயாளி வீட்டில் இருக்கும் போது அவரது ரத்தச் சர்க்கரை அளவினை செயலி மூலம் கண்டறிந்து மருத்துவர்கள் அலுவலகத்தில் இருந்தே சரிபார்த்து சர்க்கரை அளவு எப்போது குறைகிறது, எப்போது உயர்கிறது என்பதை கண்டறிந்து,
அதற்கான மருந்துகளையும் பரிந்துரைக்க முடியும். ரத்த சர்க்கரை அளவினை துல்லியமாக கணிக்க இம்முறை உதவுகிறது.
அதிகப்படியான சர்க்கரை உள்ளவர்கள், அளவில் ஏற்ற இறக்கம் உள்ளவர்கள், இன்சுலின் உபயோகிப்பவர்கள் மற்றும் கர்ப்பகால நீரிழிவு உள்ளவர்களுக்கு இது நல்ல பயனை அளிக்கும்.
சென்சார் ஒரு சிறிய ஸ்டிக்கர் போன்று இருப்பதால், அதனை அணிந்து கொண்டு குளிப்பது, விளையாடுவது, தூங்குவது என நம்முடைய அன்றாட வேலைகளில் ஈடுபடலாம்.
இந்த தொழில்நுட்பம் நோயாளி மற்றும் மருத்துவர் இருவருக்குமே நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது.
சிகிச்சை முறைகள் மட்டுமல்லாது வாழ்வியல் மாற்றங்களான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இந்நோயை முற்றிலுமாக களைந்து நலம் பெற்று வாழ்வோம்.
– எஸ். வாணி