விண்டேஜ் பஸ்ஸில் மெட்ராஸ சுத்தலாம்…!

பயணங்கள் எப்பொழுதும் இனிமையானவை.

இவை வாழ்க்கையின் சலிப்பைத் தீர்த்துப் புத்துணர்ச்சியை தரவல்ல ஓர் அற்புத அனுபவம். கற்றல் அறிவைக் காட்டிலும் நேரடிப் பயணங்கள் மூலம் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நன்கு உணர முடியும்.

இத்தகைய ஒரு குதூகல அனுபவத்தை நமக்கு வழங்குகிறது ‘சென்னை உலா பேருந்து’.

சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப் பார்க்க, சென்ற மாதம் முதல், இந்த சிறப்புப் பேருந்து சேவை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் இது செயல்படுகிறது.

இந்தப் பேருந்து, சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பூங்கா ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், லஸ் கார்னர்,

சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், பல்லவன் இல்லம் ஆகிய முக்கிய இடங்களில் பயணம் மேற்கொள்கிறது.

இது ஒரு வின்டேஜ் வகை சுற்றுலா பேருந்து. இதன் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றமானது 1980-களில் நடைமுறையில் இருந்த பேருந்தைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாள் முழுவதுற்குமான பயணச்சீட்டின் விலையாக ரூபாய் 50 மட்டுமே பெறப்படுகிறது.

எந்த நிறுத்தத்திலும் ஏறி இறங்கி மீண்டும் அடுத்த பேருந்தில் பயணத்தைத் தொடரக்கூடிய Hop-on Hop-off வசதியும் தரப்பட்டுள்ளது.

அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் எவ்வித பதட்டமும் இன்றி எல்லா இடங்களையும் கண்டு களிக்க முடியும்.

வார நாட்களில் (திங்கள் – வெள்ளி) மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இந்தப் பேருந்து சேவை உள்ளது.

அனைத்துத் தரப்பு மக்களையும் இந்தப் பேருந்து சேவை கவருவதாக இருந்தாலும் பெரும்பாலும் இளைஞர்களே இதன் மீது ஆர்வம் கொண்டுள்ளனர்.

விதவிதமான உடை அணிந்து பேருந்தில் பயணித்தவாறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.

2 மணி நேரம் பயணம் செய்து 16 வழி தடங்களையும் கடந்து வரும் உலா பேருந்து மீண்டும் சென்னை சென்ட்ரலில் வந்து முடிகிறது.

இதற்கான பயணச் சீட்டுகளை பேருந்தில் நடத்துனரிடம் நேரடியாகவோ அல்லது Chennai One App செயலி மூலமாகவோ வாங்கலாம்.

மாலை நேரப் பயணத்திற்கு ஏற்றதாக இருப்பதால் எல்லோருக்கும் பயனளிக்கக் கூடியதாக உள்ளது.

இந்த சேவைக்கு, மக்கள் பெரும் வரவேற்பு அளிப்பதால் பிற ஊர்களிலும் இதனை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்து வந்த பாதையின் காட்சிகள், அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை அசைபோடும் தருணங்களாக பயணங்கள் அமைகின்றன.

அந்த வகையில் இந்த சென்னை உலா பயணம், மனதிற்கு உற்சாகத்தையும் குதூகலத்தையும் தந்து அனைவரையும் மகிழ்விக்கின்றது.

–  எஸ்.வாணி

You might also like