நவீன இலக்கியப் பிரதிகளின் வழியாக தமிழ்நாட்டில் நடந்த ஒரு நூற்றாண்டு சமூகப் பொருளாதார மாற்றங்களை அளவிடமுடியுமா? முடியும் என்றே தோன்றுகிறது. .
1970-கள் வரை தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகள், நாவல்களில் பசியும் பட்டினியும் மிக முக்கிய இடம் பிடிக்கிறது.
ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் உள்ளிட்ட தமிழின் முதன்மையான படைப்பாளிகள் அனைவரும் பட்டினியின் குரூரத்தை எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் 70 களுக்குப் பிறகு சாதிய தாழ்வுகள், வறுமை போன்றவை தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டாலும் மனிதர்கள் பட்டினி கிடப்பது பற்றிய கதைகள் குறைந்துவிட்டன.
இதற்குக் காரணம் என்ன என்று அண்மையில் திருச்சி புத்தகக் கண்காட்சியில் உரையாற்றும்போது பார்வையாளர்களை நோக்கிக் கேட்டேன்.
பலரும் ஒருமித்த குரலில் சொன்ன பதில்: ‘தமிழ்நாட்டில், முக்கியமாக கிராமப்புறங்களில் பட்டினி என்ற துயரம் பெரும்பாலும் குறைந்து விட்டது’ என்பது தான்.
தமிழ்நாட்டில் நடந்த பல சமூக, பொருளாதார மாற்றங்களும் சமூக நலத்திட்டங்களும் இதை நிகழ்த்தியிருக்கின்றன.
நவீன இலக்கியப் பிரதிகளின் வழியாகவே இந்த மாற்றங்களை நாம் உணரமுடியும்.
புத்தகங்கள் எவ்வாறு மனிதர்களை ஜனநாயகப்படுத்துகிறது என்ற என்னுடைய உரையில், மனிதர்கள் ‘மாறுவதை’க் காட்டிலும் உள்ளூர ‘மலர்வது’தான் மிகவும் முக்கியமானது என்பதை விவரித்தேன்.
இந்த மலர்தல் என்பது சகவாழ்வு. சகிப்புத் தன்மை. பிறருடைய உரிமைகளை அங்கீகரிப்பது.
இவற்றின் வழியாகவே மனித மனம் மலர்ச்சி அடைகிறது. எனவே, இந்த மலர்ச்சியின் மூலமாகத்தான் நாம் ஜனநாயகம் மிக்க மனிதர்களாக மாற முடியும் என்பதைச் சுட்டி காட்டினேன்.
மேடையில் இருந்து இறங்கி வந்தததும் பலரும் உணர்ச்சிப் பெருக்குடன் கைகளைப் பற்றிக் கொண்டார்கள்.
சிந்தனையையும் இதயத்தையும் தொடும் ஒரு உரையை ஆற்றுவது வாழ்வோடு கொள்ளும் பிணைப்புகளிலிருந்தே சாத்தியம்.
ஒவ்வொரு முறையும் அதைச் செய்யும்போது பொருள் உள்ள ஒரு பணியைச் செய்கிறோம் என்ற மன நிறைவு ஏற்படுகிறது.
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பெண்மணி வந்து சொன்னார். “நீங்கள் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. தற்செயலாகக் கண்காட்சிக்குள் வந்தேன். மிகத் தொலைவில் உங்கள் குரல் கேட்டது.
அந்தக் குரல் உங்களுடையது என்று எனக்கு தெரியாது. ஆனால், அந்தக் குரலில் இருந்த நெகழ்ச்சியும் இதமும் ஒரு ஆழமான அழைப்பாக இருந்தது.
ஒரு சர்ச்சில் நிகழ்த்தப்படும் பிரார்த்தனையின் கனிவுமிக்க வசியக் குரலாக தோன்றியது. யாருடைய குரல் என்று பார்க்கவே வந்தேன். மனதிற்குள் இருந்த ஏதோ ஒன்று கரைந்து லேசானது போல இருக்கிறது” என்றார்.
நான் என்பது என் சொற்கள் மட்டுமல்ல. எனது குரலும்தான். கேலியும் வன்மமும் வெறுப்பும் சூழ்ந்த இந்தச் சூழலில் மிகுந்த தயக்கத்துடனேயே இதையெல்லாம் எழுதுகிறேன்.
நன்றி: முகநூல் பதிவு