மலைவாழ் மக்களின் அற்புதமான மனம்!

கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு – 8

“எந்த எழுத்தை விடவும், உயரம் கூடியவர்கள் சாமானிய மக்கள்”

– இது என்னுடைய முகநூல் முகப்புப் பக்கத்தில் நுழைவதற்கு முன் நான் குறிப்பிட்டிருக்கும் வாசகம். 

இந்த வாசகம் எந்தளவுக்கு உண்மையானது என்பதை பல அனுபவங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.

ஊடகவிலயாளராக தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்கள் பற்றிய என்னுடைய நேரடி அனுபவங்களை மட்டும் இங்கே பகிர்கின்றேன். 

திரைப்படங்களில் பழங்குடி மக்கள் பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பங்களுக்கும் உண்மையில் அவர்கள் வாழும் விதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என் மாணவப் பருவத்தில் எனக்கு பிடித்தமான பல நூல்களை எழுதியவர் மானுடவியல் அறிஞராக புகழப்பட்ட எழுத்தாளரான பிலோ இருதயநாத்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பழங்குடியின மக்களை சைக்கிளிலேயே பயணப்பட்டு சந்தித்த பல்வேறு வாழ்வியல் அனுபவங்களை அவர் பல நூல்களாகத் தந்திருக்கிறார். இருந்தும் பொதுவெளியில் அவரது நூல்களும் அவரும் பெரும் கவனிப்புக்கு ஆளானதில்லை. 

சென்னையில் இருந்த அவருடைய வீட்டிற்கு அவருடைய எளிய வாசகனாக அறிமுகப்படுத்திக் கொண்டு சந்தித்தபோது, தன்னைப் பற்றி எந்தவிதமான மிகையான மதிப்பீடுகளும் இல்லாமல் மெல்லிய சிரிப்போடு தன்னுடைய அனுபவங்களை தேநீர் அளித்து பகிர்ந்துகொண்டார்.

தனிப்பட்ட முறையில் பழங்குடியின மக்கள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கு பிலோ இருதயநாத்தும் அவருடைய நூல்களும் முக்கியமான உந்துதலாக இருந்திருக்கின்றன.  

‘துக்ளக்’ இதழில் நான் பணியாற்றியபோது பழங்குடி மக்களுக்கு அரசு அறிவித்திருக்கிற சலுகைகள் எந்தளவுக்கு அவர்களைச் சென்றடைந்திருக்கின்றன என்பதைப் பற்றி விரிவான கட்டுரையை வெளியிடலாமா என்கின்ற என்னுடைய விருப்பத்தை ஆசிரியரான சோ-விடம் சொன்னபோது, 

“ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகளைப் போலிருக்கிறதே என்று கேலிப் படறச் சொன்னாலும், அதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் அலைந்தாக வேண்டும் என்று சொன்னபோது ஆச்சர்யப்பட்டார் சோ.

அந்தக் கட்டுரைக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மலைப்பகுதிகளுக்குச் சென்று பலவிதமான தொல் பழங்குடிகளைச் சந்தித்ததும் பேரனுபவம். 

கொடைக்கானலில் இருந்து 20 கிலோமீட்டர் தள்ளி மலைப்பாங்கான சரிவில் இறங்கி இன்னொரு மலைக்கு நடந்து சென்ற அந்தப்் பகுதியின் பெயர் மூங்கில் பள்ளம். 

பெயருக்கேற்றபடியே குளிர் அடர்ந்திருந்த அந்த பசுமையான பகுதியில் எங்கு பார்த்தாலும் உயரமான மூங்கில் மரங்கள்.

இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து அந்த மூங்கில் பள்ளத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களைப் பார்க்கப் போனபோது, அவர்கள் முதலில் எங்களிடம் பேசவே தயக்கம் காட்டினார்கள். 

கனத்த மவுனமே எங்களுக்கிடையில் இருந்தது.

ஒருவழியாக, ஆடை சரிவர அணியாமல் இருந்த பழங்குடிக் குழந்தைகளை அருகில் அழைத்து, நாங்கள் கொண்டுபோயிருந்த பிஸ்கட்டுகளைக் கொடுத்தபிறகே, ஒவ்வொருவராக எங்களைச் சுற்றி வந்து அமர்ந்தனர்.

அடுத்து, அவர்கள் கனிவாகக் கேட்ட முதல் வார்த்தை – 

“எதாவது சாப்பிடுறீங்களா?”

பிறமொழிக் கலந்த தமிழில் அவர்கள் பேசினாலும் அந்த உபசரிப்பில் அவர்களுடைய பிரியம் தெரிந்தது.   

ஒரு தட்டில் இளம் மூங்கில் குருத்துக்களை வெட்டிக் கொடுத்து, அதை நாங்கள் சாப்பிட்டபோது அவ்வளவு இயற்கையான ருசி. கூடவே, மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு குடுவை நிறைய தேனைக் கொடுத்தார்கள்.

தேனை வாயில் வைத்ததும் அதன் தித்திப்பை விவரிக்க முடியவில்லை. மூங்கில் குருத்தும் அதனுள் அவர்கள் பரிமாறிய தேனும் சிறிதும் பலனை எதிர்பார்க்காத அவர்களின் பிரியமான உபசரிப்பும் மிக எளிமையான அவர்களுடைய பேச்சுமொழியும் எங்களை அசர வைத்தன.

பசுமையான காட்டுக்குள் அன்புமயமான இன்னொரு சூழலுக்குள் நாங்கள் இடம்பெயர்ந்ததைப் போல் இருந்தது அந்த அனுபவம். 

சென்ற தலைமுறைகள் ஆடைகள் இல்லாமல் வாழ்ந்ததைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னார்கள்.

அங்கிருந்த எவருக்கும் அரசின் எந்த நலத்திட்டங்களும் போய்ச் சேரவில்லை. எந்தக் கல்வியும் அடர்ந்த காட்டில் வசித்த அவர்களை நெருங்கவில்லை. 

காடு, அவற்றின் மூலம் கிடைக்கும் இயற்கையான உணவு, அது சார்ந்த வாழ்க்கை என  இப்படித்தான் அவர்கள் இருந்தார்களே தவிர, அரசின் சலுகை என்ற சொல்கூட அவர்களைச் சென்றடையவில்லை.

இதேமாதிரி, முதுமலை காட்டிற்கு கேரள நண்பர் ஒருவருடன் சேர்ந்து போனேன். மாலை நேரம். எங்களுக்கு வழிகாட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் தீப்பந்தத்துடன் வந்து உதவினார்.

காட்டைக் கடந்து சென்றபோது வழியில் சலசலத்தபடி ஓடிய ஆற்றைக் கடக்கும் முன்பு காட்டுப் பன்றி ஒன்றை 20 அடி தூரத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

மரத்தில் ஏறிப் பழக்கமில்லாத நான் அந்த மங்கிய இருளில் எதிரே நின்று கொண்டிருந்த அந்தக் காட்டுப்பன்றிக்கு முன்னால் கரிய நிழலைப்போல நின்றுகொண்டிருந்தேன்.

அந்த மிருகத்தின் கனத்த சுவாசம்கூட அந்த கானகத்தில் தெளிவாகக் கேட்டது. காட்டில் வாழும் மிருகங்களுக்கும் கருணை உணர்வு இருப்பதை நெஞ்சில் அடர்ந்த பயத்திற்கு இடையில் உணர முடிந்தது. 

நின்று கொண்டிருந்த அந்த மிருகம் மெதுவாக ஆற்றை நோக்கி திரும்பிச் சென்ற பிறகு சற்றுநேர இடைவெளிக்குப் பின் நாங்கள் ஆற்றைக் கடந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து அந்த பழங்குடி கிராமத்தை அடைந்தபோது இரவு நெருங்கிவிட்டது.

அங்கங்கே கூரைவேய்ந்த குடிசை வீடுகளில் வெளியே வெளிச்சம் தெரிந்தது. மனிதர்களும் தெரிந்தார்கள்.

சாணியால் மெழுகப்பட்ட ஒரு திண்ணையில் நாங்கள் அமர்ந்தபோது இங்கும் நாங்கள் முன்பு சந்தித்த அதே அன்பான உபசரிப்பு.

சத்தான சிறுதாணிய உணவைப் பரிமாறினார்கள். கூடவே கால் லிட்டர் அளவுக்கும் மேலான தேனை கொடுத்தார்கள். 

‘தேன் குறும்பர்’ என்கின்ற அந்த பழங்குடியினம் முழுக்கக் காட்டில் சேகரிக்கும் தேனை நம்பியே இருந்தது.

இனிப்பு மயமான, தேனான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தாலும் எதிரே எங்களுடன் அமர்ந்திருந்த ஒருவருக்கு முழங்கை துண்டான நிலையில் இருந்தது.

கேட்டபோது மரத்தில் தேனெடுக்க ஏறியபோது கரடி கடித்து கை துண்டானதாக சிறிதும் பதற்றமில்லாமல் சொன்னார் அந்த இளைஞர்.

மாடுகள் மீது, குறிப்பாக பசுமாடுகள் மீது அவர்கள் வைத்திருந்த நெருக்கம் அலாதியானது. மாடுகளை இன்னொரு நடமாடும் தெய்வத்தைப் போல அவர்கள் பாவித்ததை உணர முடிந்தது. 

“நீங்க மாட்டுக் கறி சாப்பிட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டதும் “ஏன் கேக்கறீங்க?” என்று பதிலுக்கு கேட்டேன்.

“மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை நாங்கள் எங்க வீட்டுக்குள்ள அனுமதிக்க மாட்டோம். அதனால் தான் கேட்டோம்” என்றபோது, “சாப்பிட்டிருக்கிறோம்” என்று சொன்னோம்.

“அப்படின்னா நீங்க திண்ணையிலேயே படுத்துக்கங்க” என்று சொன்ன அவர்களிடம் நள்ளிரவு தாண்டியும் பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கும் காட்டை மட்டுமே நம்பிய எளிய வாழ்க்கை. மிக எளிய குடிசை, எளிய உணவு என்று அவர்களது சூழலே எளிமை மயமாக இருந்தது.

அங்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஒருவர்கூட கல்விக் கற்கச் செல்லவில்லை. கல்வியும் அவர்களைச் சென்றடையவில்லை.

இதேமாதிரி கொல்லிமலை, சதுரகிரி மலை, முதுமலைக் காட்டுக்குள்ளேயே பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த பழங்குடிகள் என்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்தாலும் நீலகிரி மலையில் வாழும் தோடர் இன பழங்குடிகளைச் சந்தித்தது மிகவும் வித்தியாசமான அனுபவம்.

ஆதி பழங்குடியினங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிற தோடர்களுக்கென்று தனித்த மொழியிருந்தது.

அந்த மொழியில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது அந்த பேச்சுமொழியில் காற்றின் லாவகம் தெரிந்தது. மிகமென்மையாக இருந்தன அந்தச் சொற்கள். 

மிக வித்தியாசமான உடை, மொழி, கலாச்சாரம் என்று தனித்திருந்த தோடர் இன மக்களைச் சந்தித்தபோது அவர்களில் மிகச்சிலரே படித்திருந்தார்கள். ஒரே ஒரு பெண் மட்டுமே உயர்கல்விக்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார். 

முட்டை வடிவிலான வடிவமைக்கப்பட்டிருந்த அவருடைய வீட்டில் ஒரு தோடர் இன குடும்பத்தினரைச் சந்தித்து விடியும்வரை பேசிவிட்டு, அதிகாலை நேரத்தில் என்னை அவர்கள் வழியனுப்பியபோது பால் கலக்காத சூடான தேநீரையும், கூடவே அவர்கள் கையால் நெய்த ஸ்வொட்டரையும் என்னிடம் அளித்தபோது நெகிழ்ந்துபோனேன்.

அரசின் நலத்திட்டங்கள் பலவும் அவர்களை சென்றடையாத நிலையிலும் அது குறித்த ஆதங்கமோ, வருத்தமோ அவர்களிடம் இல்லை.

இயற்கையோடு இணங்கி வாழும் வாய்ப்பும் போலித்தனம் இல்லாத வெளிப்படையான அன்புமே நான் சந்தித்த அந்த மக்களுக்கான பொது விதியைப் போல அமைந்திருந்தது. 

நிறைவாக ஓர் அனுபவம் விருதுநகருக்கு அருகிலுள்ள சதுரகிரி மலையில் உள்ள பளியர் இன மக்களைச் சந்திக்க ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை மலையேற வேண்டியிருந்தது. 

அப்படிப் போனபோது போகும் வழியில் ஓர் பழங்குடி குடும்பத்தினரின் குடிசை வீட்டிற்குள்ளே மெலிதாக சில அழு குரல்கள் கேட்டன.

அந்த குடிசைக்குள் நான்போனபோது அந்த குடும்பத்தைச் சேர்ந்த பத்து வயதான இளைய மகன் சடலமாக கிடத்தப்பட்டிருந்தான்.

நோய்வாய்ப்பட்டு இறந்ததாகச் சொன்னார்கள் சுற்றியிருந்த உறவினர்கள். வீட்டிற்கு வெளியே ஒரு தாறுமாறான உலக உருண்டையைப் போலிருந்த கற்பாறையின் மீது உட்கார்ந்திருந்தார் இறந்துபோன அந்தச் சிறுவனின் தந்தை. 

அவரது முகத்தில் வெளிப்பட்ட உணர்வை புரிந்துகொள்ள முடியவில்லை. 

“நோய் வந்திருச்சி… போய்ட்டான். அவ்ளோதான். இதுக்குமேல சொல்ல என்னயிருக்கு?” என்று குனிந்த தலையுடன் அவர் சொன்னபோது, வாழ்வை எவ்வளவு சிக்கலில்லாமல், குழப்பங்கள் இல்லாமல் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. 

உண்மைதான் தமிழகத்தில் அங்கங்கே காட்டில் புதைந்திருக்கிற மனிதர்களான பழங்குடி மக்கள் வாழ்ந்தாலும் பெரும்பாலான சலுகைகள் அவர்களைச் சென்றடையாவிட்டாலும் அவர்களுடைய மனதின் உயரமே பெரிதாகத் தோன்றியது. 

கார்ப்பரேட் வாழ்க்கையில் நசுங்கிப் போய், பலர் தேடும் அமைதியையும் தியானத்தையும் அவர்கள் வாழ்வியலாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வெகுளித்தனமான அவர்களுடைய மனதின் உயரத்தை, எதிலுமே பலனையும் சலுகையையும் எதிர்பார்க்கிற மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

நிறைவாக ஒரே ஒரு சொல் – அவர்கள் இயற்கையைச் சுற்றி வாழவில்லை. அவர்களைச் சுற்றி இயற்கை வாழ்கிறது. 

– மணா

You might also like