பேரறிஞர் அண்ணா அவர்கள் அழுதுகொண்டே குழந்தையாகப் பிறந்தபோது, அவர் வீட்டிலுள்ளவர்களெல்லோரும் சிரித்துக்கொண்டே வாரியணைத்து வரவேற்றனர்;
அவர் சிரித்துக்கொண்டே மறையும்போது, நாட்டிலுள்ளவர்களெல்லாம் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே வாரிக் கொடுத்து விடைபெற்றனர்.
வசதி, வாய்ப்பு, அதிகாரம், ஆதிக்கம், பட்டம், பதவி, தோட்டம், துரவு, மேடு, மாட மாளிகை, கூட கோபுரம், கோட்டை கொத்தளம், பணம் பகட்டு போன்றவற்றை எவரும் எங்கும் எளிதிலோ, அன்றிச் சிறு பெரு முயற்சியிலோ பெற்றுவிட முடிகிறது.
அவற்றை நேர்வழியிலும் பெறுகிறார்கள்; குறுக்கு வழியிலும் பெறுகிறார்கள்; கோணல் வழியிலும் பெறுகிறார்கள்.
ஆனால், ஒருவர் அவ்வளவு எளிதில் பெற முடியாத விலை மதிக்க முடியாத பொருள் பிறருடைய இதயமேயாகும்.
வசதி படைத்த பெரும் பணக்காரர் ஒருவர், எட்டு அடுக்கு மாளிகையில், உயரத்திலே உள்ள நிலா முற்றத்தில், பஞ்சணை பொருத்திய மலர்ப் படுக்கையில்,
பக்கத்தில் இருவர் வெண்சாமரம் வீச, மூவர் கால் பிடிக்க, நால்வர் கை பிடிக்கப் படுத்திருந்தாலும் அவரைச் சுற்றிலும் நின்று பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் என்ன எண்ணிக் கொண்டு பணியாற்றுவார்கள்?
இவன் எப்போது ஒழிவானோ, நாம் எப்போது மன அமைதி பெறுவோமோ! என்று எண்ணிக்கொண்டுதான் அடிமை வேலை செய்வார்கள்.
தம் கீழே வேலை செய்பவர்களின் இதயத்தில் இடம்பெற முடியாத அதிகாரிகள், பக்கத்து வீட்டார் இதயத்தில் இடம் பெற முடியாத தனயன், தனயன் இதயத்தில் இடம் கிடைக்காத தந்தை என்றவாறு, பிறர் இதயத்தில் இடம் பெறாமலும், பெற முடியாமலும் தவிப்பவர்கள் உலகில் கோடானுகோடி மக்கள் இருக்கிறார்கள்.
உடைமையை, ஆளை, வேலையை, அதிகாரத்தை, பட்டத்தை, பதவியை, வாக்குச் சீட்டைக் கூட விலை கொடுத்து வாங்கிவிட முடிகிறது பலரால்; ஆனால் பிறருடைய இதயத்தை எவராலும் விலை கொடுத்து வாங்கிவிட முடிவதில்லை.
ஓர் இலட்ச ரூபாயை நீட்டி, உன் இதய அன்பை என்னிடம் என்றென்றும் வை என்று ஒருவர் கேட்டாலும் தொகையைப் பெற்றுக்கொண்டவன், தொகை கொடுத்தவரை வாயார வாழ்த்தினாலும்,
ஓர் இலட்சம் ரூபாய்தானே தந்துள்ளான்; கஞ்சப்பயல், இவன் கொள்ளையடித்து வைத்துள்ள கோடிக் கணக்கான ரூபாய்களிலே இன்னும் நான்கைந்து இலட்சம் தரக் கூடாதோ? என்று இதயத்தால் எண்ணவே செய்வான்.
என்றாலும் எளிதில் பெற்றுவிட முடியாத இதயங்களை; பேரறிஞர் அண்ணா அவர்கள் எளிதாகவும் பெற்றார்கள். ஏராளமாகக் கோடிக் கணக்கிலும் பெற்றார்கள்.
அதனால்தான் அவர் செயற்கரிய செய்த பெரியார் என்று எல்லோராலும் பாராட்டப் பெறுகிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரையும், புகழையும், அருமையையும், பெருமையையும், பண்பையும், போக்கையும் அறியாதவர்களும் தெரியாதவர்களும் நாட்டில் எங்கணும் இல்லை.
அவரை நினைத்து நினைத்து நெக்குருகாத உள்ளம் இல்லை; அவருடைய புகழையும், பெருமையையும் பற்றிப் பேசாத நா இல்லை. நாட்டின் நல்லவர்களெல்லாம் தொழுதேத்தும் ஒளியாக அவர் திகழ்கிறார்.
கோடானுகோடி மக்கள் இதயத்தில் இடம்பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்பு இதயத்தில் இடம் பெற்றிருந்த தம்பிமார்களில் தக்க ஒர் இடத்தை நான் பெற்றிருந்தேன் என்பதை எண்ணுந்தோறும், பூரிப்போடும், பெருமித உணர்வோடும் பேரின்பம் பெறுகிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் எல்லாரிடத்திலும் அன்பு காட்டுவார்; பற்று வைத்திருப்பார்; மதிப்புச் செலுத்துவார்; ஆனால், ஒரு சிலரோடு மட்டுந்தான் பழகுவார்.
நவில் தொரும் நூல் நயம் போலும் பயில் தொரும் பண்புடையாளர் தொடர்பு என்ற வள்ளுவப் பெருந்தகையாரின் இலக்கணத்தில் காணும் பண்புடையாளர் தொடர்பினால் ஏற்படும் நயத்தை, பேரறிஞர் அண்ணா அவர்களோடு நெருங்கிப் பழகினவர்கள்தாம் நன்கு அறிவார்கள்.
தம்மோடு நெருங்கிப் பழகும் தம்பிமார்களுக்கு ஊக்கம் தந்து, ஆக்கம் பயந்து, அவர்களையெல்லாம் உரிய துறைகளில் ஆளாக்கிவிடும் பாங்கு அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் அமைந்திருந்தது. “
– அண்ணா மறைந்தபோது ‘மன்றம்’ இதழில் நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரை.