கலைஞர் முதல்முறை முதலமைச்சராகப் பதவியேற்ற நாள்!

ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை வாழ்வு பெற, பெண்ணுரிமை பேண, அவர்களுக்கும் சொத்தில் சம பங்கு வழங்க, சனாதனம் எனும் பெயரில் ஆதிக்க சக்திகள் போட்ட ஆட்டத்தை ஒழிக்க உதித்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் இலட்சியங்களை ஆணைகளாக உருமாற்றம் செய்ய உதயமான பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக தேர்தலில் பங்கேற்க தொண்டர்களின் பேராதரவோடு திட்டமிட்டது.

1967-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கோலோச்ச கோட்டைக்குச் சென்றது திமுக. 1967-ம் ஆண்டு மார்ச் 6-ம் நாள் முதலமைச்சராக பதவியேற்றார் அண்ணா.

ஓராண்டு தான், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா, 1969-ம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதி தமிழகத்தை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு நம்மை விட்டுப் பிரிந்தார்.

அண்ணாவுக்கு பிறகு?…

இந்தக் கேள்வியை எழுப்பிய தமிழகத்திற்கு அருங்கொடையாய் விடை தந்தது தி.மு.கழகம். தி.மு.கழக முன்னணித் தலைவர்கள் தங்கள் சுட்டு விரலை ஒரே திசையில் எழுப்பினர்.

முக்கியத் தலைவர்களான மதியழகன் போன்றோர் முன்மொழிய, திராவிட இயக்கத்தின் பெண் போராளியான சத்தியவாணி முத்து உள்ளிட்டோர் வழி மொழிய,

தமிழகத்தின் தவப் புதல்வனாம் கலைஞர் 1969-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். இளமையின் பொழிவும், அறிவின் வளமையும் தமிழகத்தை ஆளத் தொடங்கியது.

ஒரு சாமானியன் சரித்திரம் ஆனதால், அடக்கப்பட்டு அவதியுற்ற மக்கள் ஆளுமைகளாக ஏற்றம் பெற்றனர். தலை நிமிர்ந்தது தமிழகம்.

ஆதிக்க சாதியினர் அலறி துடிக்க, அடித்தட்டு மக்கள் வாழ்த்தொலிகள் எழுப்ப, அமுதத் தமிழாம் கலைஞர் அரியா’சன’ங்களை ஏற்றம் பெற வைக்க முதல்முதலாக ‘அரியாசனம்’ ஏறிய நாள் இன்று (பிப்ரவரி 10,1969).

  • லாரன்ஸ் விஜயன்
 
You might also like