இபிஎஸ் இடத்திற்கு செங்கோட்டையன் வராதது ஏன்?

தேர்தலை நோக்கி…

2026 சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழக ஊடகங்கள் பரபரப்பு அடைந்திருக்கின்றன. தினமும் ஊடகங்களுக்கு எப்படியாவது ஒரு செய்தி தீனியாக கொடுக்கக்கூடியவர்களாக இங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுமே இருக்கிறார்கள்.

அண்மையில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் தவெகவின் முக்கியத் தலைவரான செங்கோட்டையனிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் வெளியானது.

விஜய்யை நோக்கிப் பலர் எழுப்பும் கேள்விகள் செங்கோட்டையனிடம் முன்வைக்கப்பட்டது.

கூடுதலான அரசியல் கள அனுபவம் இருப்பதால், அதற்கான முதிர்ச்சியுடனேயே பல சிக்கலான கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்தார்.

விஜய்யை கட்சித் தலைவர்கள் தொடர்பு கொள்வதில் பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு செங்கோட்டையன் அளித்த பதில்,

“அப்படி இல்லை. நான் இதுவரை 10 முறை நேரடியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். பிரதர் என்று என்னை அழைத்து மிகவும் மரியாதையுடன் பேசுவார். அடிக்கடி போனிலும் பேசுவேன்.”

தவெகவின் அடுத்தக்கட்டத் தலைவரான புஸ்ஸி ஆனந்துக்கும் உங்களுக்கும் இடையில் எதுவும் பிரச்சனை இருக்கிறதா? என்று கேட்டதும், இந்த கேள்வியை உடனடியாக மறுத்த செங்கோட்டையன், “புஸ்ஸி ஆனந்துக்கும் எனக்கும் நல்லவிதமான புரிதல் இருக்கிறது.

ஈரோட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் கட்சி நிர்வாகிகளிடம் என்னைக் குறிப்பிட்டு இவர் சொல்வதைக் கேட்டு செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியவர் புஸ்ஸி ஆனந்த்” என்றார்.

தொடர்ந்து – “2026 தேர்தலில் விஜய்யின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இன்னும் எங்கள் கட்சிக்கு வெவ்வேறு கட்சிகளிலிருந்து முக்கியமான ஆட்கள் வருவார்கள், பாருங்கள்” என்று நம்பிக்கை ஊட்டக்கூடியபடியே பேசிக்கொண்டு போன செங்கோட்டையனிடம் பேட்டி கண்டவர் கேட்ட முக்கியமான கேள்வி.

கூவத்தூரில் முன்பு நடந்த கூட்டத்தில் முதலமைச்சராக உங்களைத் தேர்ந்தெடுக்க இருப்பதாக ஒரு செய்தி வந்ததே, உங்கள் பெயரும் பலமாக அடிபட்டது. இருந்தும் நீங்கள் ஏன் அந்தப் பொறுப்புக்கு வரவில்லை என்கிற கேள்விக்கு பளிச்சென்று மிகவும் எளிமையாக செங்கோட்டையன் சொன்ன பதில், “பொருளாதாரம்“.

எவ்வளவு எதார்த்தமான பதில்!

You might also like