திராவிட மாடல் என்றால் என்ன?

அண்மையில் சென்னையில் மூத்தப் பத்திரிகையாளரும் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியருமான பா.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களில் ஒன்று ‘முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் : எல்லார்க்கும் எல்லாம்’.

இந்த நூலில் திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு நான்கரை ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விரிவாக, வண்ணமயமாக அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது.

இந்த நூலுக்கு பா.திருமாவேலன் எழுதிய முன்னுரை இங்கே.

நாளும் நல்லாட்சி நாளே!

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று அவர் பதவி ஏற்று நிமிர்ந்தபோது தமிழ்நாடும் தலை நிமிர்ந்தது.

“வாக்களித்த மக்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு, வாக்களிக்க மறந்தவர்கள், ‘இவர்களுக்கு வாக்களிக்க மறந்து விட்டோமே’ என்று வருந்தும் அளவுக்கு எனது ஆட்சி இருக்கும்” என்று அடிக்கடி சொல்வார்.

வாக்களித்த மக்கள் மனநிறைவோடு இருக்கிறார்கள். வாக்களிக்க மறந்தவர்கள் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது.

‘அவரை சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டோமே’ என்று வருந்தவும் செய்கிறார்கள்.

தமிழினத் தலைவர் கலைஞரின் மகனான அவர் இன்று தமிழ்நாட்டின் மகனாக உயர்ந்து நிற்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் தலைவராக பொறுப்புக்கு வந்தார். இன்று தமிழ்நாட்டு மக்களின் இதயங்களின் தலைவராக மலர்ந்து நிற்கிறார்.

தனது ஆட்சியை ஒரு தத்துவத்தின் ஆட்சியாக அடையாளப்படுத்தியதில் தான் அவரது கம்பீரம் அடங்கியது. அந்தக் கருத்தியல் எதிரிகள், தனது எதிரிகளாக ஆவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

தெரிந்தே ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். தொடர்ந்து சொல்லி வருகிறார். ‘எரிச்சல் வருகிறது என்றால் வரட்டும் என்பதற்காகவே சொல்கிறேன்’ என்றும் சொல்கிறார்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதுதான் திராவிட இயக்கக் கோட்பாடு ஆகும். அதனை உள்ளடக்கமாகக் கொண்ட ஆட்சி தான் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஆட்சி.

அத்தகைய ஆட்சியை 2021 மே மாதம் முதல் நடத்தி வருகிறார் மாண்புமிகு முதல் அமைச்சர். நான்கரை ஆண்டு கால நல்லாட்சியின் காட்சிகளைத் தான் அடுத்தடுத்து வரும் பக்கங்களில் பார்க்க இருக்கிறீர்கள்.

“திராவிட மாடல்’ என்றால் என்ன என்று சொல்லும் புத்தகம் இருக்கிறதா? என்று பலரும் கேட்கிறார்கள். அதனை நீங்கள் எழுதித் தர வேண்டும்” என்று கவிதா சொக்கலிங்கம் அய்யா என்னிடம் கேட்டார்கள்.

எழுத்துப் பெருமகன், பதிப்புத் திருமகன் இப்படிக் கேட்ட வாக்குறுதி இப்போது நிறைவேறுகிறது.

வடிவமைப்பின் பெருங்கலைஞன் இராஜா அவர்கள் தயாரிப்பில் உருவான இந்நூல் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளது.

நாட்காட்டியில் நகர்ந்த ஒவ்வொரு நாளும் நல்லாட்சியின் நாளாக அமைந்திருப்பதை உங்கள் மனத்திரையில் காணலாம்.

அன்புடன்
பா.திருமாவேலன்

************

நூல்: ‘முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்: எல்லார்க்கும் எல்லாம்’
ஆசிரியர்: பா.திருமாவேலன்
கவிதா பதிப்பகம்
பக்கங்கள்: 190
விலை: ரூ.500/-

You might also like