அன்பின் புதிய வெளி!

காலம், இடம் இவற்றைக் கடந்து, மனித இருப்பின் ஆதாரமாகத் திகழ்வது காதலும் காமமும்தான்.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இலக்கியங்கள் காதலுக்கும் காமத்துக்கும் நித்தியத் தன்மையை அளித்து வந்திருக்கின்றன.

அரசிலும் பொருளியலும் மனித வாழ்வை இயக்கும் புறக்காரணிகளெனில் காதலும் காமமும் அகக்காரணிகள்.

அன்பின் நீடித்த தன்மைக்கும் காமத்தின் நிலையற்ற தன்மைக்கும் இடையே தடுமாறுவதுதான் மனித வாழ்வாக இருக்கிறது.

அன்பு எனும் உள்ளுணர்ச்சியை நாம் வாழும் காலத்தின் வெய்யில் உலர்த்தியிருக்கிறது. உடல்களின் இணைவு அன்மாவின் இணைவாகவும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், உற்சாகத்தில் தொடங்குகிற காமம் அன்பின் உள்ளீட்டுக் குறைவால் வெறுமையில் முடிவடைகிறது.

காமம் அன்பால் உருவாக வேண்டியது. காதலில் நிதானம் இருக்கிறது. ஆனால், காமமோ பொறுமையின்மையால் தளும்பி வழகிறது. அன்பின் பொறுமை இன்மைதான் மெய்ந்நிகர் கனவு.

நமக்கு பாப்லோ நெருடாவும் தேவைப்படுகிறார். ஓஷோவும் தேவைப்படுகிறார்.

காமம் ஒரு விருந்தனரைப்போல் உடலுக்குள் நுழைகிறது. விரைவில் அது ஓர் எசமானரைப்போல மாறிவிடுகிறது.

காமத்தை நம் வேலைக்காரராக வைத்திருக்க வேண்டும். இவற்றை எங்கோ ஒரு கவிதையின் சொல்லில் பற்றவைப்பதுதான் மெய்ந்நிகர் கனவு கவிதைகள்.

காதல், காமம் குறித்த நித்திய மதிப்பீடுகளை குலைத்து, வாழும் காலத்துக்கு உகந்த புதிய மதிப்பீடுகளை இக்கவிதைகள் வழங்குகின்றன. நித்திய மதிப்பீடென்பது ஒரு சுமை.

ஈகோ, பாதுகாப்பின்மை, காதல், காமம் இவை ஒன்றோடொன்று குழம்பியிருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இப்போது உண்மையான அன்பை நாம் வலிந்து சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது மார்கழி மாதம். புராண மாந்தர்கள் காதலுக்கும் காமத்துக்கும் காலமோ வெளியோ இல்லை. அதனால்தான் புராணிகப் பாத்திரங்களின் காதல், காமம் போன்றவை நித்தியமாகக் கருதப்படுகின்றன.

இன்றைய நவீன காதலும் காமமும் மெய்ந்நிகர் வெளியில் காலமற்ற ஒரு காலத்தில் செயல்படுபவை.

ஆகவே, அது நித்தியத்தின் வடுக்களை தேவையற்றதாக கருதுகிறது.

தற்காலிக அன்பின் டிஜிடல் ஈரத்தில் வளரும் காதலுக்கு ஜென்ஸி தலைமுறை பழகிக்கொண்டது.

இத்தகைய அன்பின் இடைவெளியைப் புரிந்த ஒரு ஜென் எக்ஸ் கவியால் எழுதப்பட்டதே மெய்ந்நிகர் கனவு.

நன்றி: கரிகாலன்

You might also like