பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
பன்னாட்டுமலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், 2002-ம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11-ம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.
உலக நிலப்பரப்பில், 27 சதவீதம் மலைகளே உள்ளன. தண்ணீர், உணவு, சுத்தமான காற்று என, அனைத்தும் நமக்கு கிடைக்க மலைகள் மற்றும் அதில் உள்ள வனப்பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விவசாயத்திற்கு மழை எப்படி முக்கியமானதோ, அதனைப் போன்றே மழைக்கு, மலைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மலைகளில் உள்ள தாவரங்கள் அழிக்கப்படுவதையும், கற்களுக்காக மலைகள் வெட்டி எடுக்கப்படுவதையும் தவிர்ப்பதே, எதிர்வரும் தலைமுறையினரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு செய்யும் பேருதவியாகும்.
மலைகள் தொடர்பான சுவாரஸ்யமான உண்மைகள் (Interesting facts related to mountains):-
பன்னாட்டு மலைநாளான இன்று பெரு நாட்டில் உள்ள ஏழு வண்ணங்களைக் கொண்ட ஆண்டிஸ் மலைத்தொடர் பற்றி தெரிந்து கொள்வோம்.
தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள நாடு பெரு ஆகும். பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரில் ஏழு நிறங்களின் மலை (Mountain of seven colors) அமைந்துள்ளது.
முதலில் இது வினிகுங்கா (Vinicunca) என்று அழைக்கப்பட்டது. வினிகுங்கா என்ற பெயர் பெருவின் தாய்மொழியான கெச்சுவா என்பதிலிருந்து உருவானது.
இதற்கு வண்ணமலை என்று பொருள். இது வண்ணங்களின் மலை (Mountain of color) மற்றும் வானவில் மலை (Rainbow Mountain) என்றும் அழைக்கப்படுகிறது.
கஸ்கோ நகரில் இருந்து தென்கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 5,036 மீட்டர் உயரத்தில் (16,522 அடி) இடம் பெற்றுள்ளது. இதன் சிகரம் 17,060 அடி உயரம் கொண்டது.
இந்த மலை சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இந்த மலை 2013 ஆம் ஆண்டு வரை முற்றிலும் பனிப் படலத்தால் மூடப்பட்டிருந்தது.
பனி உருகத் தொடங்கியபோது, நிலத்தில் உள்ள தாதுக்களுடன் தண்ணீர் கலந்து பல வண்ணங்களாக மாற்றியது.
இது 14 வெவ்வேறு தாதுக்களின் அடுக்குகளால் ஆனது. இது பல வண்ண அடுக்குகளுக்காக புகழ் பெற்றது. சில ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தது.
இதன் அசாதாரண வண்ணத் தட்டு ஒரு நம்ப முடியாத வண்ணக் காட்சியாகும்.
மலையின் மேற்பரப்பு இளஞ்சிவப்பு, சிவப்பு, பச்சை, நீலம், ஊதா, மஞ்சள், பழுப்பு மற்றும் வேறு சில நிறங்களையும் கொண்டுள்ளது. இது திகைப்பூட்டும் வண்ணக் கலவையைக் காட்டுகிறது.
மந்தமான சூரிய ஒளியில் கூட இதன் வண்ணங்களைக் காணமுடியும். இது விசித்திரக் கதைகள் எழுதுவதற்கு ஏற்றக் காட்சிகளை வழங்குகிறது.
இந்த ஏழு நிறங்களின் மலை பெருநாட்டின் புவியியல் அதிசயங்களில் ஒன்றாகும். தற்போது சர்வதேச அளவில் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.
இதைக் காண 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். மேலும் 1.5 கிலோமீட்டர் தூரம் செங்குத்தாக மலையேற வேண்டும்.
அப்போதுதான் இந்த மலையின் வண்ணங்களைக் காணமுடியும். ஒருவர் இறப்பதற்கு முன்பு பார்க்க வேண்டிய இடம் என இங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.
– ஏற்காடு இளங்கோ
- நன்றி: புக் டே