ஹேமமாலினியை காதலிக்க தர்மேந்திரா பட்ட கஷ்டங்கள்!

இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு மிக நீண்ட சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இன்னும் சில தினங்களில், டிசம்பர் 8-ம் தேதி தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இருந்த பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான தர்மேந்திரா இன்று (24.11.2025) காலமானார்.

சில மாதங்களாகவே மூச்சுத் திணறல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த தர்மேந்திரா, அதனுடன் நீண்ட போராட்டத்தை நடத்திய நிலையில் இன்று காலமாகி இருக்கிறார்.

இந்தியாவின் ஹீமேன் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட தர்மேந்திராவின் முதல் திரைப்படம் ‘தில் பி தேரா ஹம் பி தேரே’. 1960-ம் ஆண்டில் இப்படம் வெளியானது.

இத்திரைப்படத்துக்கு பிறகு கடைசி காலம் வரை பாலிவிட்டில் இயங்கிக் கொண்டிருந்த தர்மேந்திரா 306 படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக உடல்நலம் குன்றிய காலகட்டத்தில்கூட ஷாகித் கபூருடன் இணைந்து ’தேரி பாதோன் மேன் ஐசா உல்ஜா ஜியா’ (Teri Baaton Mein Aisa Uljha Jiya) என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

வரும் டிசம்பர் 25-ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் அதைப் பார்க்காமலேயே அவர் சென்றிருக்கிறார்.

தமிழ்நாட்டுடன் தர்மேந்திராவுக்கு உள்ள பந்தம் மிகப்பெரியது. தமிழகத்துக்கு அவர் மாப்பிள்ளை.

தமிழகத்தைச் சேர்ந்த ஹேம மாலினியைத்தான் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் தர்மேந்திரா.

இந்த திருமணத்துக்காக தர்மேந்திரா சந்தித்த போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

1970-ம் ஆண்டு வெளியான ‘தும் ஹசீன் மெயின் ஜவான்’ திரைப்படம்தான் இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தே ஹேமமாலினியைக் காதலிக்க தொடங்கியிருக்கிறார் தர்மேந்திரா.

ஹேமமாலினியின் அம்மா ஜெயா சக்ரவர்த்திக்கும், அப்பா ராமானுஜம் சக்ரவர்த்திக்கும் இந்த காதலில் உடன்பாடு இல்லை.

தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே அவரது 19 வயதில் பிரகாஷ் கவுர் என்பவருடன் திருமணமாகி இருந்தது.

ஏற்கெனவே திருமணமான தர்மேந்திராவுக்கு தங்கள் மகளை இரண்டாவதாக மணமுடிக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.

அதனால் பாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த மற்றொரு நடிகரான ஜிதேந்திராவுக்கு அவரை மணமுடிக்க நினைத்தனர்.

1974-ம் ஆண்டில் ஜிதேந்திராவுக்கும் ஹேம மாலினிக்கும் ரகசியமாக திருமணம் செய்துவைக்க ஹேம மாலினியின் பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

அதை தெரிந்துகொண்ட தர்மேந்திரா, அந்த இடத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

ஹேமமாலினியிடம் அந்த திருமணத்தில் இருந்து பின்வாங்குமாறு கூறியிருக்கிறார்.

அவரும் யோசிக்க கொஞ்சம் நேரம் வேண்டும் என்று கேட்க, ஜிதேந்திராவின் பெற்றோர் அங்கிருந்து கோபித்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அதன் பிறகு தர்மேந்திரா – ஹேமமாலினியின் காதல் வலுப்பட்டுள்ளது.

‘ஷோலே’ படத்தில் முதலில் கைகளை இழந்த காவல் அதிகாரியான சஞ்சீவ் குமாரின் வேடத்தில் நடிக்கத்தான் தர்மேந்திரா விரும்பியுள்ளார்.

ஆனால் பின்னர் ஹேமமாலினியைக் காதலிக்கும் பாத்திரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாததால் அந்த வேடத்திலேயே நடித்தார்.

‘ஷோலே’ படத்தின் காதல் காட்சிகளில் வேண்டுமென்றே ரீடேக் எடுப்பதற்காக பலமுறை தப்பாக தர்மேந்திரா நடித்ததாக படக்குழுவினர் பின்னர் தெரிவித்துள்ளனர்.

இதில் காதல் காட்சிகளில் லைட்மேன்கள் யாராவது இடையூறு செய்து, அந்த காட்சியைத் திரும்ப எடுக்கவேண்டி இருந்தால் அவர்களுக்கு அந்த காலத்தில் தர்மேந்திரா 20 ரூபாய் பரிசாக வழங்கியதாகவும் சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறது.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த காதல் 1980-ம் ஆண்டில் திருமணத்தில் முடிந்துள்ளது.

இந்த திருமணத்துக்கு மற்றொரு பிரச்சினை வந்தது. முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவதாக தர்மேந்திரா திருமணம் செய்துகொள்ளலாமா என்பதுதான் அந்த பிரச்சினை.

ஹேமமாலினியை திருமணம் செய்துகொள்ள முதல் மனைவியை விவாகரத்து செய்யுமாறு அவரிடம் சிலர் கூறினர். ஆனால் தர்மேந்திராவுக்கு முதல் மனைவியையும் விட்டுக்கொடுக்க மனமில்லை.

இதனால், இஸ்லாமிய மதத்துக்கு மாறி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட பிறகே அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்று ஒரு செய்தி இருக்கிறது.

ஆரம்பத்தில் தர்மேந்திரா – ஹேம்மாலினி ஜோடி இதை மறுத்தாலும் பின்னர் அவர்கள் மவுனம் சாதித்தது, இதை உண்மை என்று சொல்வதுபோல் இருக்கிறது.

பின்னாளில் ஹேம்மாலினி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது இது ஒரு சர்ச்சையாக உருவெடுத்தது.

தனக்கு 2 மனைவிகள் இருந்தாலும் இருவரையும் கடைசிவரை தர்மேந்திரா விட்டுக்கொடுத்ததில்லை.

அதே நேரத்தில் ஹேம்மாலினி மீது கடைசிவரை அவர் அதிக பிரியத்துடன் இருந்துள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடைசியாக அவர் போட்ட பதிவு, தானும் ஹேம்மாலினியும் இணைந்திருக்கும் படம்தான். அவர்களின் காதலுக்கு அதுவே சாட்சி!

– பி.எம்.சுதிர்

You might also like