அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அண்ணனும் தம்பியும்!

இன்றைய சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடற்பட்டி என்னும் குக்கிராமத்தில், சாத்தப்ப செட்டியாருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் 23.11.1923-ல் மகனாகப் பிறந்தவர் ஏ.எல்.சீனிவாசன்

இவருடன் பிறந்த சகோதரிகள் அறுவர், சகோதரர்கள் மூவர். வரிசைப்படி இவர் ஆறாவதாகப் பிறந்தவர். எட்டவதாகப் பிறந்த கவியரசு கண்ணதாசன் இவருக்கு உடன்பிறந்த இளைய சகோதரர்.

இவரின் மூத்த சகோதரர் கண்ணப்பச் செட்டியாரின் மகன் பஞ்சு அருணாசலம், இவரால் திரைப்படத்துறைக்கு வந்து, பின்னாளில் பிரபலமானார்.

ஏ.எல்.எஸ். தன் சொந்த முயற்சியால் அப்போது பிரபலமான பெரும் திரைப்படத் தயாரிப்பாளராக, இந்தியத் திரையுலகே திரும்பிப் பார்க்கும் வகையில் உயர்ந்திருந்தார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, அகில இந்திய பட அதிபர்களின் கூட்டமைப்பு, ஸ்டுடியோ அதிபர்கள் சங்கம் போன்ற பல அமைப்புகளில் தலைவராகவே பதவி வகித்தார்.

தமிழ்த் திரையுலகின் பெருஞ் சாதனையாளர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரிடம் நெருங்கிய நட்புடையவராக விளங்கினார்.

தமையனுக்கு தழைத்தவர் இல்ல கண்ணதாசன். கவியரசர் என்று புகழ்பெற்று, சிறுகூடல்பட்டி என்ற சிற்றூரை உலகப் படத்தில் ஒரு பேரூராக மாற்றியவர் கண்ணதாசன்.

சிறுகூடல்பட்டியில் இவர்கள் பிறந்த வீடு 2001-ல் புதுப்பிக்கப்பட்டு, சிலைத் திறப்பு, நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா, திண்டுக்கல் லியோனி என்று பலரும் வந்திருந்து வாழ்த்த திறக்கப்பட்டது கண்ணதாசனும், அவருடைய சகோதரர் சீனிவாசனும் பிறந்து வளர்ந்த இல்லம்.

சிறுகூடல்பட்டிக்கு இன்று செல்கிறவர்கள் கவிஞரின் புன்னகைத்த சிலை, அவர் வணங்கிய மலையரசி அம்மன் கோவிலோடு, அவர் தவழ்ந்த மரத்தொட்டில், பயன்படுத்திய நாற்காலிகள், அமர்ந்த ஊர்த் திண்ணை என்று கவிஞரின் பசுமை நிறைந்த நினைவுகளுக்குள் சென்று வர முடியும்.

குறிப்பு: உள்ளம் நிறைந்த புன்னகையோடு தம்பிக்கு மாலை சூட்டும் அண்ணனும், அதை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் தம்பியுமாக அந்த இல்லத்தில் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் இது.

 
 

 

You might also like