கடந்த 50 ஆண்டுகளாக பாலிவுட் ஹீரோக்களுக்கும், வில்லன்களுக்கும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் ஆடை வடிவமைத்தவர் மாதவ் அகஸ்டி.
சமீபத்தில் அவர் ஆடை வடிவமைப்பில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்தக் கொண்டாட நிகழ்வின் போது மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து, தனது ஐம்பது ஆண்டுகால ஆடை வடிவமைப்புப் பயணம் பற்றிய, ‘Stitching Stardom: For Icons, On and Offscreen’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார் அவர்.
• யார் இந்த மாதவ் அகஸ்டி?
பாலிவுட் நடிகர் சுனில் தத், தேவ் ஆனந்த், திலீப் குமார், வில்லன் நடிகர் அம்ரீஷ் பூரி, சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த்,
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பலருக்கும் ஆடை வடிவமைப்பு செய்து, அதனைத் தோரணையாகத் தைத்துக் கொடுத்தவர் மாதவ் அகஸ்டி.
ஆனால், ஃபேஷன் டிசைனில் முறையான கல்வி என்று எதையும் கற்காதவர் அவர்.
எளிமையான பின்புலத்தில் இருந்து வந்த ஒரு தையல்காரர் என்பதே அவரின் அடையாளம். ஆனால், அனுபவம் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
அவரின் சொந்த ஊர் நாக்பூர். அர்ச்சகராக இருந்த அவரின் தந்தை, கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டி, ஷெவ்டே என்கிற வழக்கறிஞரின் கோட்களை தைத்து வந்துள்ளார்.
தந்தையின் கோட் தைக்கும் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்ட சிறு வயது மாதவ் அகஸ்டிக்கு, டெய்லராக வேண்டும் என்ற ஆசை மனதில் வேரூன்றியுள்ளது.
இருபது வயதில் நாக்பூரிலிருந்து வெளியேறியவர், தையல்காரராக வேண்டி குவாலியர் சென்றுள்ளார். அங்கே ஒரு கடையில் ஷூட் தைக்கும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் இந்தியா முழுவதும் சுற்றி பல்வேறு தையல் வேலைபாடுகள் குறித்து முழுமையாக கற்க வேண்டும் என முடிவெடுத்தார். அப்படியாக அவர் முதலில் சென்றது இந்தியாவின் தலைநகரமான டெல்லி.
அங்கே தர்யாகஞ்ச் என்ற இடத்தில் சர்பால் எனும் தையல்காரரிடம் ஆறு மாதங்கள் வேலை செய்துள்ளார்.
அவர் முதலில் குவாலியரில் பணிபுரிந்தபோது அங்கே, மொராதாபாத் ஷெர்வானிகளுக்கு அதிக தேவை இருப்பதாக மற்ற தையல்காரர்கள் பேசுவதைக் கேட்டிருந்தார்.
இதனால், டெல்லியிலிருந்து ஷெர்வானி செய்வதைப் படிக்க மொராதாபாத் சென்றார்.
அங்கே ஆறு மாதங்கள் தங்கியிருந்து ஷெர்வானிகள் தைப்பது குறித்து முழுமையாகக் கற்றிந்தார்.
இங்கே பணியிலிருக்கும் போது ஆண்களுக்கான பைஜாமாக்கள் அலிகார் நகரில் தயாரிக்கப்படுபதை அறிந்தார்.
இதனால், மொராதாபாத்திலிருந்து அலிகார் சென்றுள்ளார். அங்கேயும் ஆறு மாதங்கள் தங்கியிருந்து பைஜாமாக்கள் தைக்க முழுமைக் கற்றார்.
தொடர்ந்து ரூர்கேலா, கட்டாக், ஒரிசா, ஜோத்பூர், பிலாய் எனப் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து அங்குள்ள தையல் வேலைபாடுகளை முழுவதுமாகப் படித்தார்.
பின்னர் கொல்கத்தா சென்று துணிகளுக்கான ‘கட்டர்’ வேலையையும் பார்த்துள்ளார்.
இப்படியாக அவர் ஒவ்வொரு தையல் வேலைப்பாடுகளையும் கற்க ஒவ்வொரு இடத்திலும் ஆறு மாதங்கள் செலவிட்டார்.
அதுமட்டுமல்ல, இங்கெல்லாம் கிடைக்கும் இடங்களில் தங்கிக் கொண்டு, பல்வேறு சிரமங்களுக்கு இடையில் இந்த வேலைகளைப் படித்துள்ளார்.
தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நகருக்குச் சென்று அங்குள்ள ராணுவ கன்டோன்மென்ட்டில் ராணுவ உடைகள் தைப்பது குறித்தும் பயின்றார்.
இந்நேரம் ஆங்கிலத்தில் பேசவும் கற்றுக் கொண்டுள்ளார். இதனால் பலரிடம் அவரால் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிந்துள்ளது.
பிறகு 1973ம் ஆண்டு மும்பை திரும்பியவரின் வாழ்க்கை அப்படியே மாறிப் போனது. அப்போது, ‘Dhund’ என்ற இந்திப் படத்திற்காக ராணுவ உடைகள் தைத்துக் கொடுத்துள்ளார்.
அதில் அவரின் தையல் கலை கவனம் பெற, அடுத்தடுத்து வேலைகள் வர ஆரம்பித்தன.
அவருக்கு இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் நன்றாக தெரியும் என்பதால் கூடுதல் ப்ளஸாக மாறியது.
இவரின் தையல் வேலைபாடுகளை வியந்து, முதன்முதலாக நடிகர் சுனில் தத், அவருக்குத் தனியாக ஆடை வடிவமைப்பு செய்துதரும்படி கேட்டுள்ளார்.
அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் தையல் பணிகளில் அவ்வளவாக இருக்கவில்லை.
இந்நிலையில் 1975ம் ஆண்டு தாதரில் ஒரு சிறிய கடையைத் திறந்தார் மாதவ் அகஸ்டி. இங்கிருந்து அவரின் ஆடை வடிவமைப்புப் பயணம் சிறப்பாக மேலே சென்றது. இந்தக் கடைப் பற்றிய செய்திகள் பரவியது.
இதனால் சபாரி ஷூட்களை விரும்பி அணியும் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், குர்தாக்களை விரும்பி அணியும் அமைச்சர் கோபிநாத் முண்டே, குர்தாவில் பாக்கெட் இல்லாமல் அணியும் பிரமோத் மகாஜன்,
மூன்று பட்டன் ஜாக்கெட்களை அணியும் எல்.கே.அத்வானி, முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்பட பல அரசியல் தலைவர்கள் அவரின் வாடிக்கையாளர்களாக மாறினர்.
இதன்பிறகு அவர் வழக்கறிஞர் ஷிரிஷ் குப்தே மற்றும் பிரபல நாடகக் கலைஞர் மோகன் வாக் ஆகியோர் மூலம் பால் தாக்கரேவைச் சந்தித்துள்ளார்.
பின்னர் அவருக்காக ஒரு வெள்ளை நிற குர்தா, பைஜாமாவை வடிவமைத்தார். அதுவே பால்தாக்கரேவின் ‘சிக்னேச்சர் லுக்’ ஆக மாறியது.
இதற்காக காஷ்மீர் ஷால் துணியை வரவழைத்துள்ளார் மாதவ் அகஸ்டி. அவர் முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலருக்கும் தையல்காரராக இருந்ததால் பால் தாக்கரே அவரை ‘அரசியல்வாதிகளின் டெய்லர்’ என்றே அழைத்துள்ளார்.
இவை எல்லாவற்றையும்விட 1987ம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படமே மாதவ் அகஸ்டியை தனித்துவமாக்கியது. இந்தப் படத்தில் ‘மொகம்போ’ என்ற கேரக்டரில் அம்ரீஷ் பூரி நடித்தார்.
இந்தக் கேரக்டருக்கான உடையை வடிவமைத்தவர் மாதவ் அகஸ்டிதான். இந்தக் கேரக்டரும், ஆடையும் பெரிய அளவில் ஹிட்டாகி ‘மொகம்போ’ பூரி என அம்ரீஷ் அழைக்கப்பட்டார். அவருடன் அகஸ்டியும் ‘மொகம்போ’ டெய்லர் எனப் பாராட்டப் பெற்றார்.
அவரின் ஆடை வடிவமைப்புகளைப் பாராட்டி சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாரத் கௌரவ் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அம்ரீஷ் பூரியின் முதல் படத்திலிருந்து கடைசி படம் வரை அவருக்காக ஆடை வடிவமைத்தவர் மாதவ் அகஸ்டி.
2005ம் ஆண்டு அம்ரீஷ் பூரியின் மறைவிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வேலைகளைக் குறைத்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
தொடர்ந்து பல்வேறு செல்வாக்குமிக்க பிரபலங்களின் ஆடைகளை அலங்கரித்து அவர்களை மக்களின் மனங்களில் நிலைநிறுத்திய மாதவ் அகஸ்டி, இன்று ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ஆடை வடிவமைப்பில் தனித்துவமான அடையாளமாக விளங்குகிறார்.
– கவின்