நம்பியார் சாமியும் ஐயப்ப சுவாமியும்!

இன்று (19-11-2025) எம்.என்.நம்பியாரின் நினைவு நாள். நம்பியார் என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று அவரது ஐயப்ப பக்தி.

நம்பியாருக்கு ஐயப்பன் மீதான ஈடுபாட்டைப் பற்றி சொல்கிறார் அவரது பேரன் தீபக் நம்பியார்:

“எம்.என்.நம்பியார் முதன்முதலாக சபரிமலைக்குப் போனது 1942-ம் ஆண்டில்தான்.

அப்போது அவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் குழுவில் இருந்தார். அவர்தான் நம்பியாரை முதன்முதலாக சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த காலகட்டத்தில் சபரிமலையில் பெரிய அளவில் வசதிகள் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுதான் அந்த பயணத்தை அவர் மேற்கொண்டார்.

ஆனால் பல கஷ்டங்களைப் பட்டு சபரிமலைக்கு சென்றாலும், அந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவர் அங்கேயே இருந்துவிடலாமா என்றுகூட நினைத்துள்ளார். அந்த அளவுக்கு முதல் பயணத்திலேயே அவருக்கு ஐயப்ப சுவாமி மீது ஈடுபாடு ஏற்பட்டுள்ளது.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைதான், “உனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. வேண்டுமென்றால் ஒவ்வொரு ஆண்டும் நீ சபரிமலைக்கு வரலாம்” என்று சொல்லி அவரை திரும்ப அழைத்து வந்துள்ளார்.

அதன்பிறகு அவர் எல்லா வருடமும் சபரிமலைக்கு செல்லத் தொடங்கினார்.

விரத காலங்களில் அவர் கடைபிடிக்கும் ஒழுக்கத்தைப் பார்த்து மற்ற சினிமா நட்சத்திரங்களுக்கும் சபரிமலை செல்ல ஆசை வந்திருக்கிறது.

அதனால் அவரும் திரையுலகைச் சேர்தவர்களைச் சபரிமலைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் 4 கார்களில் அவர் பக்தர்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் அந்த குழு 4 பேருந்துகள், ஒரு கார் என விரிவடைந்தது. 1942 முதல் 2003-ம் ஆண்டுவரை ஒரு ஆண்டுகூட விடாமல் அவர் சபரிமலைக்கு சென்றுள்ளார்.

இதில் சில வருடங்களில் அவர் நான்கைந்து முறை சபரிமலைக்கு சென்றுள்ளார்.

எம்.என்.நம்பியார் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப பூஜையை ஒரு விழாவைப் போன்று நடத்துவார். 3 ஆயிரம் பேர் வரை அன்னதானம் நடைபெறும்.

அந்த பூஜைகளில் எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ், கே.ஜே.யேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்டோர் பலமுறை பாடல்களைப் பாடியுள்ளனர்.

மாலை போட்ட காலம் மட்டுமின்றி மாலை போடாத காலகட்டங்களிலும் அவர் தீவிர ஒழுக்கத்தைக் கடைபிடித்தார்.

மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் அவருக்கு இல்லை. அசைவ உணவுப் பழக்கமும் இல்லை.

தினந்தோறும் காலை 4 மணிக்கு எழுந்துவிடுவார். 4.30 மணிக்கு கடற்கரையில் வாக்கிங் போவார். 5.30-க்கு வீட்டுக்கு வந்து பூஜைகளை மேற்கொள்வார்.

எல்லா காலகட்டங்களிலும் அவர் ஐயப்ப பக்தருக்கு உரிய ஒழுக்கத்துடனேயே வாழ்ந்தார்.

சபரிமலையில் ஏழை ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்காக நம்பியார் 3 காட்டேஜ்களை கட்டியுள்ளார். அங்குள்ள பாதைகளில் மேம்பாட்டுக்காகவும் பல நன்கொடைகளை அவர் வழங்கியுள்ளார்.

ரஜினிகாந்த் சபரிமலைக்கு வர விரும்புவதாக 1970-களின் இறுதிக் கட்டத்தில் அவரது நண்பர் சிவராம் என்பவர் நம்பியாரிடம் சொல்லி இருக்கிறார். காலை 7 மணிக்கு மாலை போட அவரை அழைத்து வருமாறு நம்பியார் கூறியுள்ளார்.

அடுத்த நாள் காலை ரஜினியை அழைத்து வர சிவராம் சென்றிருந்தபோது, இரவில் படப்பிடிப்பில் இருந்து தாமதமாக வந்ததால் ரஜினி தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அதனால் சிவராம் அவரிடம் “பரவாயில்லை… நீ தூங்கு. அடுத்த வருடம் சபரிமலை பயணத்துக்கு வா… நான் மாலை போடப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியுள்ளார்.

ஆனால், ரஜினி மாலை போடுவதற்காக அரக்க பரக்க கடைசி நேரத்தில் வந்துவிட்டார்.

கடைசி நேரத்தில் வந்த ரஜினிக்கு மாலை போடலாமா என்று மற்ற சீடர்கள் கேட்க, “பரவாயில்லை… மாலை போடட்டும்” என்று நம்பியார் அனுமதி வழங்கினார்.

அதிலிருந்து ஏழெட்டு ஆண்டுகள் ரஜினி, நம்பியாருடன் சபரிமலைக்கு வந்துள்ளார்.

சபரிமலைக்கு செல்லும் நம்பியார் அங்கு சன்னதி முன் நீண்ட நேரம் நிற்க மாட்டார்.

அவர் நினைத்தால் எத்தனை நேரம் வேண்டுமானாலும் நிற்க அங்குள்ளவர்கள் அனுமதி கொடுப்பார்கள்.

ஆனால், அவர் 3 வினாடிகள் மட்டுமே ஐயப்பனை தரிசனம் செய்து பின்னர் பக்கவாட்டு பகுதியில் தியானம் செய்ய சென்று விடுவார். 

இதுபற்றி மற்றவர்கள் கேட்டதற்கு, “நான் அங்கே நின்றால் மற்றவர்கள் ஐயப்பனை பார்க்க முடியாது. அதனால் நான் சில வினாடிகள் அவர் முன் நின்று அவரது உருவத்தை மனதில் பதியவைத்து தியானம் செய்ய சென்றுவிடுவேன்” என்று சொல்லியிருக்கிறார்.

சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரை அவர் சபரிமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நம்பியார் சபரிமலைக்குச் செல்லும்போது பூஜை முடித்து பேருந்தில் ஏறும் முன் எம்.ஜி.ஆரின் வீட்டில் இருந்து அவருக்கு மாலை கொண்டுவந்து போடுவது வழக்கம்.

எம்.ஜி.ஆர். அந்த மாலையை தொடர்ந்து அனுப்பியுள்ளார். எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகும், அவரது குடும்பத்தினர் அந்த மாலையைத் தொடர்ந்து அனுப்பி வந்தனர்” என்கிறார் தீபக் நம்பியார்.

– பி.எம். சுதிர்

You might also like