அருமை நிழல்:
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளன்று, அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியிலிருந்து ஒலிப்பரப்பாகிய தமிழ்ச் செய்தியில் ”ஆல் இண்டியா ரேடியோ… செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.. இன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது!’ என்று இந்திய தேசத்தின் வரலாற்றின் முக்கியத் திருப்பத்தைச் செய்தியாக ஆனந்தக் கண்ணீருடன் வாசித்தவர் பூர்ணம் விஸ்வநாதன்.
அதன்பின் இந்தியச் சுதந்திரப் பொன் விழாவைக் கொண்டாடியபோது, பூர்ணம் விஸ்வநாதனுக்கு இதற்காக கௌரவம் செய்து விழா எடுத்தது சென்னை வானொலி நிலையம்.
செய்தி வாசிப்பாளராகவும் வானொலி நாடகங்களில் நடித்ததன் மூலமும் பூர்ணம் விஸ்வநாதனின் குரல், தெற்காசியா முழுவதும் பிரபலமடைந்தது.
அந்த நாட்களில் டெல்லியில் செய்திப் பணியுடன் ‘சௌத் இண்டியா கிளப்’ நடத்தி வந்த நாடகக் குழுவிலும் இணைந்து பல நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.
20 வருடங்கள் வாழ்க்கையை டெல்லியில் கழித்த பூர்ணம் விஸ்வநாதனுக்கு, அப்போது நாடக விழா ஒன்றுக்காக டெல்லிக்கு வந்திருந்த எழுத்தாளர் சுஜாதாவை, அறிமுகப்படுத்தி வைத்தார் நாடகக் கலைஞர் பாரதி மணி.
அப்போது, ‘ஒரு கொலை.. ஒரு பிரயாணம்’ என்கிற தன்னுடைய நாடகத்தை பூர்ணம் விஸ்வநாதனிடம் கொடுத்து, “இதைப் படித்துப் பார்த்து.. உங்களுக்குப் பிடித்தால் அரங்கேற்றம் செய்யுங்கள்” என்றார் சுஜாதா.
அந்த நாடகத்தை அவர் அரங்கேற்றிய விதத்தைப் பார்த்து வியந்த சுஜாதா, “உங்களைப் போன்ற ஒருவர் டெல்லியில் இருந்துகொண்டு என்ன செய்கிறீர்கள்..? நீங்கள் இருக்க வேண்டியது சென்னையில் அல்லவா?’ என்று கேட்டார்.
சுஜாதா கொடுத்த நாடகத்தைப் படித்து வியந்த விஸ்வநாதன், இது சபா நாடகங்களின் போக்கையே திசை திருப்பிவிடும் என்று நினைத்தார்.
அந்த வருடமே பணி மாறுதல் வாங்கிக்கொண்டு 1965-ல் சென்னையில் குடியேறினார்.
சென்னையில் ஏற்கெனவே பழக்கமாகியிருந்த திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் (பின்னர் கலா நிலையம் என ஆனது) குழுவினருடன் தன்னை இணைத்துகொண்ட விஸ்வநாதன், ‘ஒரு கொலை.. ஒரு பிரயாணம்’ நாடகத்தைச் சென்னையில் அரங்கேற்றுவதில் பெரும்பங்கு வகித்தார்.
‘நாடகம் என்பது நடிகனின் கலை’ என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தன்னுடைய நாடகத்துக்கு பூர்ணம் விஸ்வநாதன் உயிர்கொடுத்ததைக் கண்டு வியந்தார் சுஜாதா.
அடுத்து ‘அடிமைகள்’ என்கிற நாடகத்தை அவருக்கு எழுதிக்கொடுத்தார். அதுவும் வெற்றிபெற, பின்னர், சென்னையில் ’பூர்ணம் நியூ தியேட்டர்’ என்கிற குழுவைத் தொடங்கிய விஸ்வநாதன், சுஜாதாவின் ‘அடிமைகள்’ நாடகத்தை அரங்கேற்றினார்.
அதன்பின்னர், ‘கடவுள் வந்திருந்தார்’, ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’, ‘ஊஞ்சல்’, தொடங்கி பத்துக்கும் அதிகமான நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதனுக்காக சுஜாதா எழுத, அவை வெற்றி நாடகங்களாகின.
இவற்றில் பல நாடகங்களை தினசரி 3 காட்சிகள் நடத்தினார் விஸ்வநாதன்.
‘ஊஞ்சல்’ நாடகத்தில் பூர்ணம் விஸ்வநாதனின் நடிப்பைப் பார்த்து அரங்கமே அழுத காலம் உண்டு. ‘உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களைப் பயன்படுத்தும் கலைதான் நாடகம்’ என்கிற புரிதல் விஸ்வநாதனிடம் இருந்தது.
குரலும் பாவனையும் இணையும்போது பூர்ணம் விஸ்வநாதனின் அரங்க நடிப்பில் வெளிப்பட்ட நுண்ணிய நளினங்களை இன்றை தலைமுறையும் ரசிக்கும் வகையில் இருப்பது அவரது நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பு:
எழுத்தாளர் ‘மரீனா’ எழுதி பூர்ணம் விஸ்வநாதன் அரங்கேற்றிய ‘தனிக்குடித்தனம்’ ஒரு நகைச்சுவைத் தன்மையுள்ள பிரபலமான மேடை நாடகம். இந்த நாடகம் 1977-ம் ஆண்டு எல்.பி. (LP) தகடாக வெளியிடப்பட்டது.
அந்த நாடக அரங்கேற்றத்தின்போது பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் நாடகக் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
– புகைப்பட உதவி பார்வதி ராமநாதன்.