தி.மு.க.வும் ஊடக பலமும்!

“பஞ்சமர்களும் வியாதியஸ்தர்களும் நாடக அரங்கிற்குள் நுழையக் கூடாது”.

– இது 1930-களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு நாடகத்திற்கான நோட்டீஸ்.

இந்த நோட்டிசின் பிரதியை தற்போதும் சென்னையிலுள்ள ரோஜா முத்தையா நூலகத்திற்குச் சென்றால் பார்க்க முடியும்.

நாடக அரங்கில் மட்டுமல்ல, அன்றைக்கு தாழ்த்தப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சமூகத்தினர் ஓட்டலுக்குள் நுழையவும் கட்டுப்பாடுகள் இருந்தன.

கோவில்களுக்குள் நுழைவதற்கு மத, சாதிய ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.

குறிப்பிட்ட தெருக்களில், நடக்கவும் குளம், ஏரிகளில் பொது நீரைப் பயன்படுத்தவும் கூட, கொடுமையான தடைகள் நீடித்தன.

இப்படிப்பட்ட சமச்சீரற்ற நிலைமை இருந்த நேரத்தில்தான் அதை எதிர்த்துப் பல தலைவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.

நாராயண குரு, அய்யங்காளி, வள்ளலார் என்று பலரும் அப்போது நிலவிய ஆதிக்கச் சமுதாய கருத்தியல் மற்றும் செயல்பாட்டிற்கு எதிராக தங்கள் குரலைத் தொடர்ந்து எழுப்பி இருக்கிறார்கள்.

இந்த காலகட்டத்திற்குப் பின்னால்தான், பெரியார், அயோத்திதாசப் பண்டிதர் என்று பல தலைவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த எதிர்ப்புக் குரலை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு ஊடகம் வலுவான ஆயுதத்தைப் போல பயன்பட்டிருக்கிறது.

ஊடகத்தை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்கள் இருந்தாலும், அதை சமூக நீதி நோக்கத்திற்காக பயன்படுத்தியவர்கள் திராவிட இயக்கத்தின் முன்னோடிகள்.

இவ்வளவுக்கும் முன்னால், 20.10.1578-ம் ஆண்டிலேயே அண்டிறிக்கிப் பாதிரியார் என்றழைக்கப்பட்டவரால் இந்தியாவிலேயே முதன்முதலாக வெளியிடப்பட்ட தமிழ் நூலின் பெயர் தம்பிரான் வணக்கம்.

கிறித்துவ மத நோக்கத்திற்காகத்தான் அந்த அச்சாக்க நிகழ்வு நடந்திருந்தாலும், அவர்களே தமிழக, கேரளப் பகுதிகளில் அச்சுக்கூடங்களை நிறுவியிருந்தாலும், அவற்றை தமிழில் முதன்முதலாக நடந்த முயற்சிகள் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

தவிர அந்த ஊடகம் யாருடைய நலனுக்காக பயன்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும். 

அதைப்போலத்தான் உ.வே.சாமிநாத அய்யர் போன்றவர்களின் பெரும் முயற்சியால், சங்க இலக்கியத்தின் பல்வேறு சுவடிகள் நமக்குக் கிடைக்கப்பெற்று அவையும் அச்சாக்கம் பெற்றன. 

அதன் வழியே தமிழின் தொன்மை வெளிப்பட்டது என்றே சொல்ல வேண்டும். 

இத்தகைய நிலையில்தான் 1920-களுக்குப் பிறகு பெரியாரால் நடத்தப்பட்ட ‘குடியரசு’ இதழை பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பாதி விலையில் வழங்க வந்த சமூகச் சூழலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

அந்த காலகட்டத்தில், வெளிவந்த மற்ற இதழ்களுக்கும் திராவிடக் கொள்கையை முன்னிறுத்திய இதழ்களுக்குமான நோக்கம் சார்ந்த வேறுபாட்டை நீங்களே பாருங்கள்.

“உறங்கிக் கிடக்கும் தமிழ்ச் சாதியை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி அவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உண்டுபண்ணி, அவர்களை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே இப்பத்திரிகையின் நோக்கம்”

– இவ்வாறு 1913ல் சுதந்திர உணர்வுடன் தான் ஆரம்பித்த ‘ஞானபானு’ பத்திரிகையின் முதல் இதழில் எழுதி இருந்தார் சுப்பிரமணிய சிவா.

“பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் தினமணி துணை புரியும்.”

– இவை 1934 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று வெளிவந்த ‘தினமணி’ முதல் தலையங்கத்தில் இடம்பெற்றிருந்த வரிகள்.

”மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்.”

– இது 1925-ல் ‘குடியரசு’ பத்திரிகையை ஈரோட்டில் பெரியார் துவக்கியபோது அதன் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகம்.

ஆக, அன்றைய பத்திரிகைகளின் நோக்கத்திலேயே உள்ள வேறுபாடுகள் இவை.

இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், 1847-களிலேயே ‘திராவிட தீபிகை’ என்கிற இதழும் அதற்கடுத்து‘திராவிட வர்த்தமானி’ என்ற இதழும் வெளிவந்த நிலையில், 1907-ல் அயோத்திதாசப் பண்டிதரால் நடத்தப்பட்ட இதழின் பெயர் ‘ஒரு பைசா தமிழன்’. 

அப்போது திராவிட இயக்கத்திலும் சமத்துவ நோக்கத்திலும் பல தலைவர்கள் பல அச்சு ஊடகங்களைத் தங்கள் கைவசம் வைத்திருந்தார்கள்.

பெரியார் ‘குடியரசு’, ‘விடுலை’ என்று பல்வேறு இதழ்களை நடத்தியபோது, ‘காஞ்சி’ என்ற பெயரிலேயே பத்திரிகை நடத்தியவர் அறிஞர் அண்ணா.

‘தமிழ்நாடு’ என்ற பெயரில் வரதராஜலு என்ற நாயுடுவும், தமிழன் என்ற பெயரில் சி.பா. ஆதித்தனாரும் ‘திராவிடக் கூட்டரசு’, ‘தென்னகம்’, ‘தமிழ் மன்றம்’ என்று இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த கால கட்டத்தில் வெளிவந்த ஒரு இதழின் பெயர் ‘திராவிடஸ்தான்’.

இந்தநிலையில், திருவாரூரில் 1942-ல், எளிய நோட்டிசைப் போல ‘முரசொலி’ இதழை வெளிக்கொண்டு வந்தவர் கலைஞர்.

ஏற்கனவே ‘மாணவ நேசன்’ என்கின்ற கையெழுத்துப் பிரதியை அவர் நடத்தியபோது, அதை வாழ்த்தி, கவிதைக் கடிதமாக வழங்கியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

அன்று துவங்கிய ‘முரசொலி’ இன்று வரை நெருக்கடிக் கால இக்கட்டுகளை சந்தித்த நிலையிலும் கூட அதையெல்லாம் மீறி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 

இதன்பிறகு ‘தென்றல்’ என்ற பெயரில் கண்ணதாசனும் ‘சமநீதி’ பத்திரிகையை எம்.ஜி.ஆரும் அதே காலகட்டத்தில் கொண்டு வந்தார்கள்.

இப்படி வெளிவந்த திராவிட இயக்க இதழ்கள் மட்டும் 265 என்று குறிப்பிடுகிறார் திராவிட இயக்க ஆய்வாளாரான க.திருநாவுக்கரசு.

இதே மாதிரி ஆங்கிலத்திலும் திராவிடக் கொள்கையை மையமாக வைத்து இதழ்கள் துவக்கப்பட்டு அன்றும் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு இதழை நடத்துவதில் இருக்கிற நடைமுறைச் சிரமங்கள் அரசு தருகிற நெருக்கடிகள் இவற்றையெல்லாம் மீறி ‘முரசொலி’ இதழை தனது கருத்தியலுக்கான செயல்பாட்டுக் கருவியாக  பயன்படுத்திய கலைஞர்,

எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு தணிக்கை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தனக்கே உரிய எழுத்து சாதுர்யத்துடன் சில கட்டுரைகளை அவருடைய தொண்டர்கள் உணரும் அளவுக்கு எழுதியிருக்கிறார், கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.

முரசொலியில் அவர் தொடர்ந்து எழுதிய உடன்பிறப்புகளுக்கான கடிதம் பல்லாயிரத்திற்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டதாக, இன்றும் காலத்தின் சாட்சியத்தைப் போல விளங்கிக்கொண்டிருக்கிறது.

முரசொலியின் முதல் பக்கத்தில் குறிக்கப்படும் “இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்பது ஊடகத்தைப் பொறுத்தவரை எவ்வளவு எதார்த்தமான உண்மை.

தமிழக அரசியல் மேடையில், காங்கிரஸ் காலத்தில் ராஜாஜி, காமராஜர், பக்தவசலம் என்று பலர் இயல்பான பேச்சு நடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அதேமாதிரியே பேச்சு நடையிலேயே மக்களை ஈர்த்த தலைவராக பெரியார் இருந்தார். 

ஆனால், அவர்களிடமிருந்து தனித்து தனக்கென்று ஒரு பேச்சு பாணியை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா.

தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் பேசிய உரைகள் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தன. 

அண்ணாவின் பாணியில், இலக்கியச் செழுமை கொண்ட மொழியில் தனது பேச்சு பாணியை உருவாக்கிக் கொண்டவர் கலைஞர்.

அவருடன் அப்போது திமுகவின் தல கர்த்தாவாக இருந்த பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத் என்று பல முன்னணித் தலைவர்கள் மேடைப் பேச்சில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாற்றினார்கள்.

திமுகவில் இருந்தபோதே மேடைப் பேச்சை வசீகரமான ஒன்றாக மாற்றியமைத்தவர் எம்ஜிஆர்.

பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவானந்தம் போன்றவர்கள் பேச்சில் மட்டுமல்ல அவருடைய பாடலும் கூட மக்கள் மொழியிலேயே அமைந்திருந்தது.

“காலுக்குச் செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை… பாழுக்கு உழைத்தோமடா… என் தோழனே பசையற்றுப் போனோமடா..” என்ற ஜீவாவின் பாடல், சாதாரண அடித்தட்டு மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தது.

திராவிட கொள்கை சார்ந்தும் அதை கட்சி மாநாடுகளில் தொடர்ந்து பாடுகிறவராக நாகூர் ஹனீஃபா தனித்துத் தெரிந்தார்.

மேடைப் பேச்சிலும், இசைப் பாடலிலும் கூட மக்களைக் கவர முடியும் என்பதைத் தொடர்ந்து திமுக நிரூபித்து வருகிறது என்பதற்கு, திமுக இன்றுவரை உருவாக்கி வைத்திருக்கும் கழகப் பேச்சாளர்களே சாட்சியத்தைப் போல இருக்கிறார்கள்.

நாடக உலகைப் பொறுத்தவரை சங்கரதாஸ் சுவாமிகள் நாடகம் துவங்கி நவாப் ராஜமாணிக்கம், பம்மல் சம்பந்த முதலியார், கே.பி.சுந்தராம்பாள், பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் நாடக மேடையில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், பொதுவாகப் புராண, இதிகாசம் சார்ந்தே நாடகங்கள் நடத்தப்பட்டன.

அவற்றிலிருந்து சற்றே விதிவிலக்கான நாடகங்களை நிகழ்த்தியவர் அவ்வை சண்முகம். அதன் தொடர்ச்சியாக திராவிடக் கொள்கைகளை அதிரடியாக முன்வைத்து நாடக களத்தில் இறங்கியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

அதுவரை சாஸ்திரிய முறையில் இருந்த நாடகங்களை எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் நடைக்கு மாற்றி சமூகக் கருத்துக்களை சொல்கிற ராதாவின் நாடகங்களில் கலைஞர் உள்ளிட்டவர்களும் நடித்திருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணாவும் இதே காலகட்டத்தில் சமூக நாடகங்களில் திராவிடக் கொள்கைகளை வலியுறுத்தி நாடகங்களை நடத்தினார்.

நவாப் ராஜ மாணிக்கம் போன்றோரின் நாடகக் கம்பெனிகள் ஐயப்பனை உயர்த்திப்பிடித்துக் கொண்டிருந்த அதே கால கட்டத்தில், அதே ராமாயணத்தை கடுமையாக விமர்சித்து ராதா நிகழ்த்திய நாடகம் பெரும் சலசலப்பை உருவாக்கியது. 

அன்றைய அரசால், பலமுறை அவரது நாடகங்கள் தடை செய்யப்பட்டன. அதற்காக கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று மறுபடியும் அதே நாடகங்களை நடத்தியிருக்கிறார்.

அவர் நாடகங்கள் நடத்திய ஊரில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆச்சாரியார் ஆட்சியில் 6 வழக்குகள் பாய்ந்த நிலையிலும் திருவாரூர் தங்கராசு எழுதிய ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தை மட்டும் 3021 நாட்கள் நடத்தியிருக்கிறார். 

அவரது நாடகத்தில் வரும் வசனம் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் கீழே;

“ஏம்ப்பா.. நீ நெற்றியில் போட்டிருக்கியே.. டபுள் ஒயிட் சிங்கிள் ரெட். அது என்னப்பா?”

“அது திருப்பதி வெங்கடாசாலபதியின் பாதம்.”

“சரி… திருப்பதி வெங்கடாசலபதியின் நெற்றியிலே இருக்கே ஒரு நாமம். அது யார் பாதம்?… என் பாதமா? ”

ஒருமுறை பெரியாரைப் பற்றி கேட்டபோது அதற்கு ராதா அளித்த பதில், 

“பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாயே, அவர் என்னத்தைச் சாதிச்சார்?”

“உன் நெற்றியும், என் நெற்றியும் எந்தக் கோடும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதே, இதற்குக் காணரம் பெரியார் தாம்ப்பா…”

கலைஞரே, ‘சாந்தா’ அல்லது ‘பழனியப்பன்’ என்ற நாடகத்தில் சிவகுருவாக நடித்து முடித்துவிட்டு கீழே இறங்கியதும் தாக்கப்பட்டார்.

அந்த அனுபவத்தைப் பற்றி அவரே சொல்கிறார்.

“நான் சிவகுரு என்ற பாத்திரம் ஏற்று நடித்தது, கொள்கைப் பிரச்சாரத்துக்காக நான் எழுதி நடித்த ‘சாந்தா’ அல்லது ‘பழனியப்பன்’ என்ற நாடகத்தில்!

அந்த நாடகம் புதுவையில் நடந்தபோது, அப்போது அங்கு நடந்த கழக மாநாட்டில் புரட்சிக்கவிஞர் பாதிதாசனைத் தாக்க முற்பட்டனர்.

அவருடன் சென்று கொண்டிருந்த என்னை வளைத்துக்கொண்டு தாக்கினர். அவர்கள் ஆரியர்கள் அல்ல. தாக்கியவர்களும் திராவிடர்கள்தான்.

அப்போதுதான் தந்தை பெரியார் என் காயங்களுக்கு மருந்துபோட்டு, பின்னர் குடியரசு அலுவலகத்தில் துணை ஆசிரியர் பொறுப்பும் வழங்கினார்.” என்று தன்னுடைய நாடக அனுபவத்தை விளக்கியிருக்கிற கலைஞர்,

ராதாவுக்காக மட்டுமல்ல சிவாஜிகணேசன் உள்ளிட்ட பலருக்காகவும் நாடகங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து நடிக்கவும் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நாடகங்களில் நடித்தவர் நடிகை மனோரமா.

கலைஞரின் வழியில் இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்திற்கான நாடகங்களை நடத்தியிருக்கிறார்.

அப்படிப்பட்ட நாடகங்களில் ஒன்று ‘முரசே முழங்கு’. அவர் நாடகங்கள் எடுத்தபோது, அவரைப் பாராட்டி கவுரவித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரும் தனக்கென்று ஒரு நாடகக் குழுவை உருவாக்கி சமூக சீர்த்திருத்த நாடகங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். எஸ்.எஸ்.ராஜேந்திரனும் நடித்திருக்கிறார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திராவிட இயக்கக் கருத்துக்களை வில்லிசை மூலமாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறவராக இருந்தார்.

இதனுடைய தொடர்ச்சியாகத்தான் தமிழ்த் திரையுலகப் பரப்பிற்குள் திராவிட இயக்கத்தவர்கள் நுழைந்ததைப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்டுவந்த ‘பாய்ஸ் நாடக’க் கம்பெனியில் இருந்து வந்து பலர் தமிழ்த் திரைப்பட உலகிற்குள் நுழைந்த காலகட்டம் அது.

1900-ல் சென்னையில் எலக்ட்ரிக் தியேட்டர் என்ற அரங்கத்தில் முதல் திரைப்படம் வெளியிடும் நிகழ்வும் நடைபெற்று பலருடைய கவனத்தை ஈர்த்திருந்தது.

பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.கே.ராதா, கலைவாணர் என்று பலரும் திரைப்பட உலகத்திற்குள் நுழைந்தபோது, பாட்டும், வசனமும் எழுதக்கூடியவராக உள்ளே நுழைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

அவர் வசனம் எழுதிய ‘பொன்முடி’ என்ற திரைப்படம் அப்போது பரவலாக கவனிக்கப்பட்டது. புதுபுது வசனகர்த்தாக்கள் உருவானார்கள்.

சினிமா தன்னை மெருகுப்படுத்திக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் திமுகவின் தலைவரான அண்ணாவும் திரைத்துறைக்குள் பிரவேசித்தார். 

சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். கே.ஆர்.ராமசாமியின் நடிப்பில் அவர் வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதைத் தொடர்ந்து 1952-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்கு கடுமையான சென்சார் கட்டுப்பாடுகள் இருந்தும், அதையும் மீறி கலைஞர் எழுதிய,

“பராசக்தி எந்தக் காலத்திலடா பேசினாள்.”

“கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்பதால்..”

இதுபோன்ற கூரான வசனங்கள் இடம்பெற்றிருந்த ‘பராசக்தி’ திரைப்படத்தின் இறுதியில் திராவிட இயக்கத் தலைவர்கள் ஒரு விழாவில் கலந்துகொள்வது போன்ற காட்சியும் இணைப்பட்டிருக்கும்.

கலைஞரின் வசனத்திற்காகவே அந்தப் படத்தின் வசனப் புத்தகங்கள் ஏராளமாக விற்பனை ஆகின. சில சிறப்பு மலர்களும் வெளியிடப்பட்டன.

எம்.ஜி.ஆர். ஜானகியும் இணைந்து நடித்த ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் இப்படி வசனம் எழுதியிருப்பார் கலைஞர்.

“மிருக சாதியில் புலி மானைக் கொல்கிறது. மனித சாதியில் மான் புலியைக் கொல்கிறது.”

இதேபோல் எம்.ஜி.ஆர். நடித்த ‘நாம்’ படத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.

“என்ன ஆச்சர்யக்குறி போடுகிறாய்”

“ஆச்சர்யக்குறிதான் ஜமீன்தார் அவர்களே! கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும். கேள்விக் குறிக்கும், அரிவாளுக்கும் வித்தியாசம் இல்லை”

கூரான, அதேசமயம் சமூக நீதியின் குரலை எதிரொலிக்கும் வகையில் அவர் எழுதிய வசனங்கள் தொடர்ந்து ‘மனோகரா’ வழியாக ‘பாலைவன ரோஜாக்கள்’ என்று நீடித்து ‘ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்கு வசனங்களை எழுதுவது வரை திரைப்படம் என்கின்ற மகத்தான மக்கள் தொடர்பு சாதனத்தை தனது கொள்கையிலேயே வெளிப்படுத்தும் விதமாக உருமாற்றி இறுதிவரை இயங்கிக் கொண்டிருந்தார் கலைஞர்.

கலைஞர் வசனம் எழுதிய பல படங்களில் நடித்திருக்கிறவரான எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கத்தின் கருத்துக்களை தனது படங்கள் வழியே தொடர்ந்து கொண்டுபோனார்.

1958ல், எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் துவக்கத்தில் திமுக கொடி காண்பிக்கப்பட்டது.

பிறகு அவர் நடித்த ‘மன்னாதி மன்னன்’ திரைப்படத்தில் “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா” என்று துவங்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல், இன்றுவரை பலருடைய விருப்பப் பாடலாக அமைந்திருக்கிறது. 

‘நம்நாடு’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் அண்ணாவின் பெயரை பல சந்தர்ப்பங்களில் அவர் உச்சரித்திருக்கிறார். 

திமுகவிலிருந்து முதலில் எம்.எல்.ஏ-வான எஸ்.எஸ்.ஆர்., கலைஞர் வசனம் எழுதிய ‘பூம்புகார்’ போன்ற பல திரைப்படங்களில், நடித்துப் பெயர் பெற்றிருந்தாலும் கடவுள் பக்தியைப் பரப்பும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பதை தனிக் கொள்கையாகவே வைத்திருந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான முரசொலி மாறனும் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இதைப்போலவே ராம அரங்கண்ணல் துவங்கி ராம நாராயணன் வரை வெவ்வேறு கால கட்டங்களில் திமுக நிலைப்பாட்டை ஆதரித்து இயங்கியவர்களும் இருக்கிறார்கள். 

திமுக என்கின்ற பெயரையும் அண்ணாவின் பெயரையும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்து தணிக்கைக் குழு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்த நேரத்தில்தான் கலைவாணர், தினா.முனா.கனா என்று மறைமுகமாக திமுக என்கின்ற இயக்கத்தை வெளிப்படுத்திய விதம்கூட ருசிகரமானது.

அவரே இயக்கித் தயாரித்த ‘நல்லதம்பி’ படம் அதற்கொரு சிறப்பான உதாரணம்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோதும், அதனுடைய கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை.

இளையராஜா உள்ளிட்ட பாவலர் சகோதரர்களே ஒரு காலத்தில் வளர்வதற்கு காரணமாக இருந்த பொதுவுடைமைக் கட்சி காலப்போக்கில் தன்னுடைய செயல்பாட்டை த.மு.எ.ச.வோடு நிறுத்திக் கொண்டது.

பா.ம.க. மற்றும் தே.மு.தி.க போன்ற கட்சிகளும் தற்காலத் தேவையான காட்சி ஊடகங்களை கைவசம் வைத்திருந்தாலும், அவற்றை சரிவர பயன்படுத்தவில்லை.

ஆனால், திமுக நாடகம், இசை, மேடைப் பேச்சு, திரைப்படம் என்று பல்வேறு ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தியதைப் போலவே 1993-ம் ஆண்டிலிருந்து சன் டி.வி.யையும், 2007-ம் ஆண்டிலிருந்து கலைஞர் டிவியையும் அது சார்ந்த குழுமக் கட்டமைப்பையும் தொடங்கி வெகுமக்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக சமூக வலைத்தளங்களிலும் தற்போது தங்களை நவீனப்படுத்திக் கொண்டு இயங்க ஆரம்பித்திருக்கிறது திமுக.

காலச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிப் புதுப்பித்துக் கொள்ளாத எந்த ஊடகமும் மக்கள் பார்வையிலிருந்து விலகிப்போய்விடும்.

மக்களின் தேவைக்கேற்றபடி தன்னையும் புதுப்பித்துக் கொள்ளும் ஊடகங்கள் மட்டுமே தொடர்ந்து மக்களால் கவனிக்கப்படுகின்றன. வரவேற்பையும் பெறுகின்றன.

எளிமையான இந்த விதிமுறைகளைத் திமுக 1949-லிருந்தே கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். 

ராமாயணத்தில் வரும் அனுமன் கதாப்பாத்திரத்திற்கு தன்னுடைய பலம் தெரியாது என்பார்கள். ஆனால், திமுகவுக்கு தன்னுடைய பலமும் தெரியும், ஊடகத்தின் மிகப்பெரும் பலமும் தெரியும்.

– யூகி

You might also like