1988-ம் ஆண்டு வெளியான ‘வீடு’ திரைப்படத்தில் நடுத்தர மக்களின் கனவுகளும் ஏக்கங்களும் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி வெளியான திரைப்படம்.
வாடகை வீடு தேடுவதில், வங்கிக் கடன், சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் சவால்கள், பணம், மனம் சார்ந்த விஷயங்கள் எனச் சொந்த வீடு கனவு பற்றிய திரைப்படத்தை இயக்குநர் பாலு மகேந்திரா அழகாக இயக்கி இருப்பார்.
சொந்த வீடு கனவு மக்கள் மத்தியில் இன்னும் தொடர்வதையும், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் வீடு வைத்திருப்போர் மனநிலை வாடகை வீட்டில் குடியிருப்போர் மனநிலை பற்றி இங்கு அசை போட வேண்டி இருக்கிறது.
வாடகை வீட்டில் வாழ்ந்தது போதும், சொந்த வீடு மட்டுமே எனது மிகப்பெரிய சாதனை என்ற சிந்தனையில் வாழும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள்.
குடியிருந்த / கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவதை விட சொந்தமாகக் கட்டி குடிபோக வேண்டும் என்ற எண்ணம் முதன்மையாக இருக்கிறது பலருக்கு.
அரசு அனைவருக்கும் சொந்த வீடு கனவைப் பூர்த்தி செய்ய முயற்சி எடுத்துக் கொண்டாலும், இப்போது உள்ள விலைவாசியில் வீடு கட்டுவதும், வீடு வாங்குவதும் ஒரு சாமானிய மனிதனுக்கு அவ்வளவு எளிதல்ல.
கிராமங்களில் சில ஏக்கர் விவசாய நிலங்களின் விலையும், நகரத்தில் ஒரு வீட்டு மனையின் விலையும் ஒன்றாக உள்ளது.
சில இடங்களில் வீட்டுமனைகளின் விலை பன்மடங்கு அதிகம். நிலச் சீர்திருத்தம் போன்று வீடுகளுக்கான சட்டத் திட்டங்களும் தீவிரமாகக் கொண்டு வர வேண்டிய நிலையில் உள்ளோம்.
வீடு:
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் வீடும் ஒன்று. இது வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்கி வருகிறது. வீடுகளைப் பொருத்தவரை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1.கான்கிரீட் வீடு, 2. கான்கிரீட்டுடன் ஓடு அல்லது ஆஸ்பெட்டாஸ் வீடு, 3. குடிசை/ மண் சுவர் வீடு. இவற்றில் கான்கிரீட் வீடுகளின் பொருளியல் மதிப்பு அதிகம். சிமெண்ட் கூரை ஓடு, குடிசை வீடுகளுக்கு மதிப்பு குறைவு.
சொந்த வீடு என்பது மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்ய ஓர் அளவுகோலாகக் கருதப்படுகிறது. நம் நாட்டில் சுமார் 87 விழுக்காடு மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது.
நிலத்தின் அளவு மாறாது. ஆனால் மக்கள் தொகை பெருகிக் கொண்டு வருகிறது. தனிக் குடும்ப கலாச்சாரம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில், தனிக் குடும்ப கலாச்சாரத்தில், எல்லோருக்கும் சொந்த வீடு இருக்கும் என்று கருத முடியாது.
ஒத்தி அல்லது வாடகை வீடு, அரசு குடியிருப்பு, உறவினர் வீடு என ஏதோ ஒரு வழியில் மக்கள் குடியிருக்கின்றனர். மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப வீடுகளின் எண்ணிக்கையும், அவற்றின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது.
நகரமயமாதல் அதற்கு ஓர் உதாரணம். நகர்ப்புறத்தில் ஒரு சென்ட் வீட்டு நிலத்தின் மதிப்பு கிராமப்புறத்தில் 2 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மேலே உள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில், இடைத்தரகர்களில் ஈடுபாடு காரணமாக நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருகிறது.
சாமானிய மக்களின் நன்மைக்காக அரசின் வீடு கட்டு திட்டம் இருந்தாலும் பலருக்குச் சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கிறது.
ஏன் சொந்த வீடு:
சொந்த வீடு இல்லாதவரை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாத வாடகை, வீட்டு உரிமையாளர் குடியிருப்போரை நடத்தும் விதம், வீடு இல்லாத வரை இந்த சமூகம் பார்க்கும் பார்வை எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
சில இடங்களில் வருமானம், ஜாதி, மதம், மொழி, இனம், திருமண நிலை பார்த்தே வீடு தருகிறார்கள்.
வீட்டு உரிமையாளர் வாடகைக்குக் குடியிருப்போரை நடத்தும் விதம் கவலை தருகிறது. சில இடங்களில் வாடகை வீட்டில் வசிப்போறது இறந்த உடலை இறுதிச் சடங்கு நடத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.
வீட்டு வாடகையுடன் தண்ணீர் கட்டணம், பராமரிப்பு கட்டணம், மின்சார கட்டணம் என கூடுதல் கட்டண வசூலிப்பும் நடக்கிறது. வருமானத்தில் பெரும்பகுதி உணவிற்கும் வீட்டு வாடகைக்கும் செலவிடக் கூடிய சூழ்நிலை.
இது போன்ற பல்வேறு காரணங்கள் ஒரு மனிதனைச் சொந்த வீடு வாங்கும் நிலைக்கு இழுத்துச் செல்கிறது. சொந்த வீடு கட்டுவது சமூக அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது.
கடன் வீடு:
நம் நாட்டில் நடுத்தர பெரும்பாலானோர் கனவு கடன் வாங்கி வீடு கட்டுவது. வேலைக்குச் சேர்ந்தவுடன் வீடு, அடுத்து கார் வாகனம். ஒரு ஆசை நிறைவுற்றவுடன் அடுத்த ஆசை உருவாகிறது. வீடு கட்டும் கனவுக்குப் பஞ்சமில்லை. இப்போதுள்ள விலைவாசியில் சொந்த வீடு கட்டுவது எளிதல்ல.
வங்கியை நாடவேண்டிய கட்டாய சூழல். உதாரணத்திற்கு வீடு கட்ட லட்சங்களில் பணம் தேவை. 50 முதல் 80 விழுக்காடு பணம் சேமித்த பிறகு 20 விழுக்காடு கடன் வாங்கினால் சுமையாகத் தெரியாது.
அதுவும் தனியார் அல்லாமல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்குவது சரியாக இருக்கும்.
ஆனால் 20 விழுக்காடு இருப்பு பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு 80 விழுக்காடு கடன் வாங்கி வீடு கட்டும் போது பணி ஓய்வு வரை கடன் கட்டிக்கொண்டு தான் இருக்கிறோம். நல்ல உணவுகளுக்கும், தரமான கல்விக்கும் பணம் செலவிடுவது என்பது சிரமம்.
வீடு சொந்தம் என்றாலும் நாம் இழந்த மகிழ்ச்சி, உறவுகள், உடல் ஆரோக்கியத்திற்குச் செலவிட முடியாத நிலை போன்றவை அதிகம்தான். அந்தந்த வயதில் மட்டுமே ஒவ்வொரு அனுபவத்தைப் பெற முடியும். சிலர் வங்கியில் கடன் வாங்கவில்லை என்றால் வீடு கட்ட முடியாது என்கிறார்கள்.
பணம் சேமிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். சிலர் பொருள் ஈட்டுவதே சாதனை என்று கருதி தன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அனுபவிக்காமல் வீடு, நகை, வாகனம் போன்ற சொத்துக்களைச் சேர்க்கின்றனர்.
குடும்ப உறவுகள், மன அமைதி போன்றவற்றைத் தியாகம் செய்து சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
பலர் சமூக அந்தஸ்துக்காகப் பிறர் வியந்து பார்க்கும் அளவிற்குப் பெரிய வீடுகளைக் கட்டி அமைதியை இழக்கின்றனர். அந்த வீட்டைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடனைக் கட்டி முடிக்கும் வரை ஒரு சூழ்நிலை கைதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கின்றனர்.
சில வீடுகள் வாரிசு பிரச்சனையின் காரணமாக யாரோ ஒருவர் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சில வீடுகள் தொடர்ந்து பூட்டி கிடப்பதையும் அனுபவிக்க ஆள் இல்லாமல் இருப்பதையும் காண முடியும். ஆக, நாம் சம்பாதித்த விஷயங்களை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை.
“வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்”.
– தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே என்கிறார் திருவள்ளுவர்.
தாம் பட்ட கஷ்டம் குழந்தைகள் படக்கூடாது என்ற சிந்தனையில் சொத்துக்களை வாங்கி குவிப்பது சரியாக இருக்காது.
கல்வி, மருத்துவம், தொழில் போன்றவற்றிற்குக் கடன் வாங்குவது நல்ல முடிவு.
பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை அனுபவிக்கும் வாரிசுகளுக்கு உழைப்பின் மதிப்பு தெரிவதில்லை.
ஒரு பக்கம் வீடு இல்லை என்ற பிரச்சினை. இன்னொரு பக்கம் சில பல வீடுகள். சிறிய அளவில் கட்டுவதும் வீடுதான். மிகப்பெரிய முதலீட்டில் கட்டுவதும் வீடுதான்.
சிலர் வாடகை வீட்டிலும் மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர். சிலர் பெரிய மாளிகை வீடுகளைக் கட்டி நிம்மதி இல்லாமல் வாழ்கின்றனர்.
பிறந்த ஊரில், பணி செய்த இடத்தில், நண்பர்கள் சொன்ன இடத்தில் செல்கின்ற இடம் எல்லாம் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுகின்றனர்.
வாடகை வருமானம் அதிகம் என்பதால் வீடு வாடகைக்கு விடுவது மிகப்பெரிய தொழிலாக மாறி வருகிறது. இது காலப்போக்கில் மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது.
சொந்த வீடு சாதனை என்பதும், சாதாரணம் என்பதும் அவரவர் சிந்தனையைப் பொறுத்தது. சேமித்த பணத்தில் கடன் இல்லாமல் வீடு கட்டுவது ஒரு புத்திசாலித்தனம்.
அரசுத் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்துவது சிறந்தது. அதேசமயம் தேவைக்கு மிகுதியாகக் கடன் வாங்கி வீடு கட்டுவது புத்திசாலித்தனமாக இருக்க வாய்ப்பில்லை.
நமது இலக்கு உயர்வாக இருந்தால், அதில் நேரத்தை முதலீடு செய்தால் வெற்றி மேல் வெற்றி வந்து கொண்டே இருக்கும்.
பின்பு, சொந்த வீடு, தோட்டம், வாகனம், புகழ் போன்றவை நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.
நமது இலக்கு எவ்வளவு பொருள் சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு பெரிய வீட்டைக் கட்டினோம் என்பது முக்கியமல்ல.
எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். எத்தனைப் பேருக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்.
– முனைவர் இல.சுருளிவேல்
நன்றி : புக் டே இணைய தளம்