உலகில் கொசுக்கள் இல்லாத இடங்கள் இரண்டே இடங்கள்தான். ஒன்று தென் துருவமான அண்டார்ட்டிக். இன்னொன்று அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ்லாந்து நாடு.
ஐஸ்லாந்து, குளிர்காலத்தில் தட்பவெப்பநிலை 1 டிகிரி சென்டிகிரேடு வரை சில்லென இருக்கும். கோடையில் 11 முதல் 13 டிகிரி சென்டிகிரேடு தட்பவெப்பநிலை எகிறும். அவ்வளவுதான்.
ஐஸ்லாந்து சதுப்பு நிலங்கள், நீரோடைகள் கொண்ட நாடுதான். இருந்தாலும் குளிர் ரத்த உயிரான கொசுவுக்கு ஐஸ்லாந்து குளிரில் இதுவரை வாழ வழியில்லாமல் இருந்தது.
காரணம் வெதுவெதுப்பான சூழலில்தான் கொசுக்களால் குதூகலமாக இனம்பெருகி உயிர்வாழ முடியும்.
இந்தநிலையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை? ஐஸ்லாந்தில் கடந்த கோடை காலத்தில் 13 டிகிரி முதல் 26 டிகிரி வரை வெப்பம் எகிறியது.
இதன் எதிரொலியோ என்னவோ தெரியவில்லை? ஐஸ்லாந்தின் தலைநகரத்தில் 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பனிப் பள்ளத்தாக்குப் பகுதியில் முதன்முறையாக கொசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் 3,500 வகையான கொசுக்கள் இருக்கின்றன. ஐஸ்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொசு Culiseta annulata என்ற ரகத்தைச் சேர்ந்த கொசு.
இந்தவகை கொசு, பனியையும் குளிரையும் தாக்குப்பிடித்து வாழக்கூடிய கொசு. நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து மாதிரியான நாடுகளில் ஏற்கெனவே வாழும் கொசு.
ஐஸ்லாந்தில் இந்தமுறை வரலாறு காணாத வெப்பம் இருந்ததால், கொசு அங்கே வருகை புரிந்திருக்க வேண்டும்.
இதற்குமுன் 1980-ம் ஆண்டு கிரீன்லாந்து பகுதியின் கெஃப்ளவிக் விமான நிலையத்தில் இருந்து ஐஸ்லாந்துக்குப் பறந்து வந்த ஒரு விமானத்தில் கொசு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கொசு இப்போது ஐஸ்லாந்து நாட்டின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருக்கிறது.
இந்தநிலையில் இப்போது மீண்டும் கொசு!
நமது புவிக்கோளத்தில் பருவநிலை மாற்றத்தால் தாறுமாறாக வெப்பம் உயர்ந்து கொண்டே போகிறது. அதன் வெளிப்பாடுதான் ஐஸ்லாந்து நாட்டுக்கு வந்திருக்கும் கொசு.
ஐஸ்லாந்துக்கு வருகை தந்ததன் மூலம் உலகில் மனிதர்கள் வாழும் எல்லா பகுதிகளிலும் புகுந்து கடையைப் போட்டுவிட்டது கொசு.
அது இன்னும் நடமாடாத பகுதி தென்துருவமான அண்டார்ட்டிக்தான்.
மனிதர்கள் வாழாத அந்த பகுதி மட்டும்தான் கொசுக்கள் கொட்டமடிக்காத ஒரே பகுதியாக இந்த பூவுலகத்தில் புவிக்கோளத்தில் எஞ்சியிருக்கிறது.
யார் கண்டது? நாளை அங்கும் போய் கொசு கொடியை நாட்டலாம்.
– மோகன ரூபன்