அதிமுக தன்னை மறுபரிசீலனை செய்து கொள்ளுமா?

“ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில், கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்…”

– இந்தப் பாடல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘உரிமைக் குரல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

“மக்களின் குரலே, மகேசன் குரல்“ என்று பொதுமக்களின் குரலுக்கு மதிப்பளித்தத் தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர். எம்.ஜி.ஆர்.

அதிலும் தொண்டர்களின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, தொண்டர்களுக்காகவே உருவான மகத்தான இயக்கம் அ.தி.மு.க. என்பதை அடிக்கடி உணர்த்தியவர் மக்கள் திலகம்.

கட்சியின் பொதுக்குழுவில் மட்டுமல்ல, கட்சியின் தலைமையை நிர்ணயிப்பதில் தொண்டர்களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை கட்சியின் அடிப்படை விதிகளில் ஒன்றாக மாற்றியமைக்கும் அளவுக்கு தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

அக்டோபர் 17 – மிக எளிமையான முறையில், தொண்டர்கள் சூழ அதிமுக என்கின்ற இயக்கம் உருவான நாள்.

கட்சியைத் துவக்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் தேர்தலைச் சந்தித்து தனது வெற்றியை நிலைநாட்டிய எம்.ஜி.ஆர்., 1977-ல் ஆட்சிப் பொறுப்பையேற்று, தொடர்ந்து பத்து ஆண்டுகள் அதிமுகவை வலுவானதொரு அடித்தளத்துடன் தொண்டர்களின் பேரியக்கமாகவும், தமிழக மக்கள் விரும்பிய மாபெரும் சக்தியாகவும் அதை மாற்றியமைத்தவர்.

அதிமுகவில் அவர் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதே, கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவரோடு முரண்பட்டவர்களும் இருந்தார்கள்.

ஆனால், அவர்களை எம்.ஜி.ஆர். அரவணைத்துக் கையாண்ட விதம்தான் அவருடைய தலைமை பண்புக்கான தனி அடையாளமாக திகழ்ந்தது.

உதாரணமாக எஸ்.டி. சோமசுந்தரம் சில கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு நின்றபோது, அவருடைய வீட்டுக்கு நேரடியாகச் சென்று சமாதானப்படுத்தி அழைத்துவந்த அரவணைக்கும் பண்பு மக்கள் திலகத்திடம் இருந்தது.

அதிமுகவில் அடுத்த தலைமைப் பொறுப்பிற்கு வந்த திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர். கட்சிக்காக விட்டுக் கொடுத்தது ஏராளம். இன்றைக்குள்ள அதிமுக தலைமை அலுவலகமே அவருடைய சொத்து தான்.

அதிமுக என்கின்ற இயக்கம் இரண்டாக பிளவுபட்டபோது அதை மகத்தான ஒற்றுமையுணர்வுடன் கட்சித் தலைமை விட்டுக்கொடுத்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வைத்து, நிதியும் அளித்து தாயுள்ளத்தைக் காட்டியவர் ஜானகி எம்.ஜி.ஆர்.

அதற்கடுத்து தலைமைப் பொறுப்பேற்ற செல்வி ஜெயலலிதாவும் உறுதியான தலைமைப் பண்புடன் திகழ்ந்தாலும், தன்னுடன் கருத்துகளால் மாறுபட்டிருந்த ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து, பி.எச். பாண்டியன் போன்ற பல தலைவர்களை அதிமுகவில் இணைத்து உரிய மதிப்பளித்ததையும் ஒரு முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளலாம்.

இப்படிப் பல தலைவர்களின் தலைமைப் பண்பு சார்ந்த விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் பண்புதான் அதிமுகவை இன்றுவரை வளர வைத்திருக்கிறது.

மேலே சொன்ன உதாரணங்களைத் தற்போது அதிமுக தலைமைப் பொறுப்பிலிருக்கும் திரு. எடப்பாடி பழனிசாமி வழிகாட்டியாக எடுத்துக்கொள்வது அதிமுக என்கின்ற இயக்கம் வலுப்பெறுவதற்கான அவசியத் தேவை என்பதை அவர் உணர வேண்டும். அவரை சுற்றியுள்ளவர்களும் அதை உணர்த்த வேண்டும்.

“தனிமரம் தோப்பாகாது” என்கின்ற எளிய உண்மையை எடப்பாடி பழனிசாமி காலத்தின் அருமை கருதி உணர்ந்தால்தான் அதிமுகவிடமிருந்து பிரிந்து வெவ்வேறு அணிகளாக கிளை பிரிந்திருக்கிற தலைவர்களை ஒன்றிணைக்க முடியும்.

தொண்டர்களுக்கும் உறுதியான தலைமையை அடையாளம் காட்ட முடியும். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையான மனநிலையை உருவாக்கித் தர முடியும். முன்பு எப்போதும் இருந்ததை விடவும் அதிமுக என்கின்ற இயக்கத்திற்கு இது ஒரு சோதனையான காலம்.

இதுபோன்ற பலதரப்பட்ட சோதனைகள் வந்தபோதெல்லாம் அதிமுக தலைமை உறுதியாக நின்று அதை வலுவானபடி எதிர்கொண்டிருக்கிறது, பொறுமையாகவும் கையாண்டிருக்கிறது.

அதிமுக என்கின்ற இயக்கத்தை வலிமைப்படுத்த மட்டுமல்ல, தன்னுடைய தலைமையையும் உறுதிப்படுத்திக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தற்போது பிரிந்திருக்கிற பல்வேறு தலைவர்களை அனுசரித்தும் அரவணைத்தும் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதிமுக என்கின்ற இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அந்தப் புரிதல் கட்டாயம்.

அதிமுக என்கின்ற மாபெரும் இயக்கத்தின் தொண்டர்கள் சொல்ல விரும்பும் கருத்தும் இதுதான். மகத்தான தொண்டர்களின் குரல் தலைமைக் குரலாக மாறட்டும்.

நிறைவாக ஒன்று.

“ஒரு தாய் மக்கள் நாம் என்போம்… ஒன்றே எங்கள் குலம் என்போம்…” என்கிற பொன்மனச் செம்மல் நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளின் பொருளை, அதிமுக தலைமையும் தொண்டர்களும் உணர்ந்தால் போதும்.

– முனைவர் குமார் ராஜேந்திரன்

You might also like