மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நினைவு நாளான இன்று (09.10.2025) அவரைப் பற்றிய சில நினைவுகள்…
பாட்டிக்காக செய்த தியாகம்:
ரத்தன் டாடாவுக்கு 10 வயதாக இருந்தபோதே அவரது பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்துவிட்டனர்.
இதனால் டாடாவை அவரது பாட்டிதான் வளர்த்துள்ளார். அதனால் பாட்டியின் மீது அவருக்குப் பிரியம் அதிகம்.
1960-களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆர்கிட்டேக்டாக பணியாற்றியபோது ரத்தன் டாடா அங்கு கரோலின் ஜோன்ஸ் என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வதாக இருந்தனர்.
1962-ல் இந்தியா – சீனா இடையே போர் மூண்ட சமயத்தில் இந்தியாவில் டாடாவின் பாட்டிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிறுவயதில் தன்னை வளர்த்த பாட்டியை அருகில் இருந்து கவனிக்க இந்தியா திரும்ப விரும்பினார் டாடா.
ஆனால், அவரது காதலியின் பெற்றோர், டாடா இந்தியாவுக்கு திரும்பினால் தங்கள் பெண்ணை திருமணம் செய்துதர முடியாது என்று பிடிவாதமாக மறுத்தனர்.
இந்த சமயத்தில் காதலியை விட வளர்த்த பாட்டியின் மீதான பாசம் அதிகமாக இருந்ததால் காதலியை கைவிட்டு இந்தியா திரும்பினார். அதன் பின் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
எஃப்-16 விமானத்தை ஓட்டினார்;
ரத்தன் டாடா ஒரு சிறந்த விமானியும் ஆவார். அவர் 1960-களில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று அதற்கான லைசன்ஸை பெற்றுள்ளார். எஃப்-16 வகை போர் விமானத்தை ஓட்டியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
யாரையும் திட்டமாட்டார்;
இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே, அவர்களை மிகவும் கவர்ந்த பயணி யார் என்ற கருத்துக்கணிப்பு 1992-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதில் ரத்தன் டாடா என்ற பெயருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன.
அதற்கு காரணம் சொன்ன ஊழியர்கள், ‘வழக்கமாக தனியாக வரும் ஒரே விஐபி அவர் மட்டுமே. அவரது பையையோ அல்லது கோப்புகளையோ எடுத்துச் செல்ல அவருடன் உதவியாளர்கள் யாரும் ஒருபோதும் வந்தது கிடையாது.
விமானம் புறப்பட்டவுடன், அவர் அமைதியாக வேலை செய்வார். அவர் வழக்கமாக மிகக் குறைவான அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு பிளாக் காபி (Black Coffee) கேட்பார்.
தனக்கு விருப்பமான காபி கிடைக்கவில்லை என்பதற்காக விமான பணிப்பெண்ணை அவர் ஒருபோதும் திட்டியதில்லை’ என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.
நாய்களுக்கு ஏசி அறை

ரத்தன் டாடாவிடம் ‘டிட்டோ’ மற்றும் ‘டேங்கோ’ என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் இருந்தன, அவற்றை அவர் மிகவும் நேசித்தார்.
நாய்கள் மீதான அவரது நேசத்திற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்.
மும்பையில் உள்ள டாடா நிறுவனத்தின் அலுவலகத்தில் தெரு நாய்களுக்காகவே ஒரு ஏசி அறை அமைக்கப்பட்டிருந்தது.
தனிமையை விரும்பிய டாடா
ரத்தன் டாடா தனிமையை மிகவும் நேசித்தார். தனது வீட்டில் தனிமையில் இருக்கும்போது கோப்புகளைப் படிப்பார்.
அவர் மும்பையில் இருந்தால், அலிபாக்கில் உள்ள தனது பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களைக் கழிப்பார். இந்த நேரத்தில் அவரது நாய்களைத் தவிர வேறு யாரும் அவருடன் இருக்கமாட்டார்கள்.
அவர் பயணம் செய்வதையோ சொற்பொழிவு ஆற்றுவதையோ விரும்பவில்லை. அவருக்கு புகழ் வெளிச்சமும், கைதட்டலுக்கு பேசுவதும் மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது.
- பி.எம்.சுதிர்