படைப்பு:
“கல் தோன்றி மண் தோன்றா”
என்றதும் இகழ்ந்தார், நகைத்தார்;
கீழடி, பொருநை, காவிரி, பாலாற்றில்
அகழந்ததும் திகைத்தோர் அவரே;
நாட்படு தேறல் தேள்போல் கடுக்கலாம்
தமிழோ நாட்பட்ட தேன்;
கணியனுக்கு முன்பே பிறந்து,
சங்கம் பல கண்டு
சாவா மூவா வரம்பெற்று
கணினிக்குப் பின்பும் வாழும்
உரம்பெற்ற செந்தமிழ் நமது;
பழங்கதை பேசி,
பத்திரமாய்ப் பூட்டிவைத்து
பாதியில் மடிந்தபின்,
மீதி நாளெல்லாம் செயற்கை சுவாசத்தில்
நீடித்திருக்கும் கபடதாரியா தமிழ்?
இலக்கிய, இலக்கண எல்லை தாண்டி
பொறியியல், மருத்துவம், கணினியென
காலத்தடை வென்ற பெருநதி;
ஆயிரந்தான் சிறப்பு இருப்பினும்
ஆங்கிலந்தான் பெரிதெனக் கருதச் செய்யும்
அற்பர்களிடமிருந்து மீட்கும் போர்
அன்றாடம் இல்லாது போயின்,
மெல்லத் தமிழினி சாகுமெனக்
கனவு காண்போர் பெருகுவர்;
கால எல்லை, தேச எல்லைகளை
வென்று வாழும் தமிழைக்
காத்திட, கரம் கோர்த்திட வாரீர்!
– அபிநயா பன்னீர்செல்வம்.
தமிழ்த்துறை, இளங்கலை மூன்றாம் ஆண்டு.
டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையாறு.