கப்பலோட்டிய தமிழன் படம் உருவான வரலாறு!

ஆய்வாளர் ரெங்கையா முருகன்

1952-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் நாளில் பாரதி விழாவில் வ.உ.சி.க்கும் வின்ச் துரைக்கும் இடையே நடக்கும் பாரதியார் எழுதிய உரையாடலை உணர்ச்சிப் பிழம்புடன் ஐந்து நிமிடம் அடங்கிய முதல் வ.உ.சி. மேடை நாடகத்தை அரங்கேற்றியவர் நாடக கலைஞர் அவ்வை டி.கே. சண்முகம். ம.பொ.சி. நடத்திய தமிழரசு கழகத்தின் முக்கிய அங்கத்தினர்.

இந்த நாடக மேடை அரங்கம் சென்னை பிராட்வேயில் உள்ள அர்மீனியன் தெருவில் கச்சாலீஸ்வரர் கோவில் அருகே நடந்தது.

இந்த மேடை நாடகம்தான் 1961-ம் ஆண்டில் வெளியான சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வெளி வருவதற்கு காரணமாக இருந்தது என்கிறார் அவ்வை டி.கே.சண்முகம்.

பின்பு தொடர்ந்து இந்த நாடகத்தை மேம்படுத்த வேண்டி பல எழுத்தாளர்களை நாடியுள்ளார் டி.கே.சண்முகம்.

பெரும்பாலான எழுத்தாளர்கள் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த வ.உ.சி. அவர்களை நாடக வடிவில் கொண்டு வரும்போது உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் தயங்கினர்.

இதற்கிடையில் 1955-ம் ஆண்டு “தளபதி சிதம்பரனார்” என்ற நாடக நூல் அவ்வை டி.கே.சண்முகம் பார்வைக்குக் கிடைக்கிறது.

இந்த நூல் ம.பொ.சி. எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூலினை அடிப்படையாக கொண்டு சித்தராசன் என்பவரால் நாடக வடிவில் புனையப்பட்ட நூல்.

அந்த நாடக நூலினை மீண்டும் மீண்டும் நன்றாக செப்பம் செய்து. டி.கே.சண்முகம் 1955-ம் ஆண்டு சென்னை வானொலியில் நாடகமாக்கினார்.

இந்த நாடகப் பிரதியை செப்பமாக்கியதில் கலைஞர் பகவதி, புத்தனேரி ரா.சுப்பிரமணியம் மற்றும் சித்தராசன் அவர்களுக்கும் பங்குண்டு.

1960-ம் ஆண்டு ஜீலை மாதம் திருநெல்வேலியில் நகர்மன்ற பொருட்காட்சியில் மிகச் சிறப்பாக வ.உ.சி. மேடை நாடகத்தை அரங்கேற்றினர்.

இதற்கிடையில் தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை நேரம் வாய்க்கும் வேளையில் பி.ஆர். பந்துலுவிடம் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழனை படமாக எடுக்கக்கூறி வலியுறுத்திக் கொண்டே இருந்தவர்.

சின்ன அண்ணாமலை அவர்கள் ம.பொ.சி. அவர்களுடைய வ.உ.சிதம்பரனார் சரித்திரத்தை “கப்பலோட்டிய தமிழன்” என்ற பெயரிட்டு அழகிய அட்டையில் வடிவமைக்கப்பட்டு தமிழ்பண்ணை மூலமாக வெளியிட்டு வ.உ.சிதம்பரனாரை தமிழகமெங்கும் சேர்த்தவர்.

இதன் மூலம் ம.பொ.சி. அவர்களுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. பின்னால் இப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு சின்ன அண்ணாமலை பி.ஆர்.பந்துலு மூலம் சினிமா எடுக்க வலியுறுத்தி கப்பலோட்டிய தமிழன் சினிமா வெளிவரக் காரணமாக இருந்தவர்.

சிவாஜி கணேசன் வ.உ.சி.யாகவும், எஸ்.வி.சுப்பையா பாரதியாகவும், டி.கே.சண்முகம் சுப்பிரமணிய சிவாவாகவும் நடித்து வாழ்ந்திருப்பார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் வாழ்க்கையில் 170 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் தனக்கான பெரும் சவாலான கேரக்டர் வ.உ.சி.யாக நடித்தது மட்டுமே என்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.

கப்பலோட்டிய தமிழன் படத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவராக ம.பொ.சி. இருந்ததால் இப்படத்தின் கள ஆய்வுக்காக ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை, கோவை சிறைச்சாலை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பல தகவல்களை திரட்டினார்கள்.

இவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் பந்துலு ஆகியோரும் கூடவே சென்றனர்.

தமிழ்நாடு அரசின் முதல் வரிவிலக்கு அளிக்கப்பட்ட படம் இதுவே. படம் எல்லோரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்டாலும் இந்த படம் அன்றைய நாளில் பெரும் தோல்வி அடைந்தது.

இது ஒரு காங்கிரஸ் படம் என்ற பிரசாரத்தாலும், அன்றைய காங்கிரஸில் இருந்த சூழலாலும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படமும் வ.உ.சி.யின் துன்ப வாழ்வு மாதிரியே ஆகிப்போனது.

ஒரு தடவை தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை சிவாஜி கணேசனுடன் நாகர்கோவிலில் படப் பிடிப்பு முடித்து வரும் வேளையில் கவிமணியை பார்த்து விட்டு போகலாமா? என்றிருக்கிறார். தேசிக விநாயகம் பிள்ளையை காண சிலருடன் சென்றிருக்கிறார்கள்.

கவிமணி அனைவரையும் குசலம் விசாரித்துவரவேற்றவர் சிவாஜியை பார்த்து “தம்பி யார் என்றார்”.

அடுத்த கேள்வி “என்ன தொழில் செய்கிறார்” என்று வெளி உலகமே அறியாத கவிமணி இயல்பாகவே கேட்டு விட்டார்.

சின்ன அண்ணாமலை சற்று அதிர்ச்சி அடைந்து விட்டார். கூட வந்தவர்களுக்கும் ஒரே வியப்பு. சிவாஜி கணேசன் சினிமா உலகில் உச்ச கட்டத்தில் இருந்த நேரம் அது.

சின்ன அண்ணாமலை ஒருவாறாக நிதானித்து கவிமணியிடம் “பாட்டா (நாஞ்சில் நாட்டில் கவிமணியை பாட்டா என்று அன்புடன் அழைக்கும் சொல்) சிவாஜியைக் காட்டி இவர் உலகச் சிறந்த நடிகர் என கூறினார்.

கவிமணி உடனே தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் சினிமாவை பார்த்ததில்லை எனக் கூறிவிட்டார்.

ஆனால் சிவாஜிக்கு பெரும் மனக் குறையாகி விட்டது. நாம் உலகமே போற்றும் புகழ் மிக்க நடிகர் என்று நினைத்திருக்கிறோம். ஆனால் இன்னும் இந்த மாதிரி பெரிய மனிதர்களிடையே அறியப் படாமலே இருக்கிறோம்.

நாம் இன்னும் இந்த பெரிய மனிதர்கள் விரும்பும் கதாபாத்திரத்தில் நடிக்க வில்லையோ என்று மிகவும் மன வருத்தமடைந்தார் சிவாஜி கணேசன்.

கவிமணியை பார்த்து விட்டு வந்த பிறகு சில மாதங்களுக்கு பின்னர் சிவாஜியின் நடிப்பை பாராட்டி வாழ்த்தி கவிமணியிடமிருந்து ஒரு மடல் வந்தது.

கவிமணி பார்த்து ரசித்த படம் சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் படம் என்று தனது “சொன்னால் நம்பமாட்டீர்கள்” நூலில் தமிழ் பண்ணை சின்ன அண்ணாமலை பதிவு செய்துள்ளார்.

ஆனால் அவர் கூற்றுப்படி சிவாஜி நடித்த வேறு படத்தை பார்த்துவிட்டு மடல் எழுதியிருக்கிறார் .ஏனெனில் கப்பலோட்டிய தமிழன் படம் வந்த் ஆண்டு 1961. கவிமணி மறைந்த ஆண்டு 1954.

சிலோனில் இறங்கிய சிவாஜியிடம் அப்துல் ஹமீது பேட்டி எடுக்கையில் தாங்கள் நடித்த கதாபாத்திரத்தில் சவாலான கதாபாத்திரம் எது? என ஒரு கேள்வியை வைக்க வ.உ.சி.யாக நடித்ததுதான் என் வாழ்வில் சவாலான கதாபாத்திரம் என்கிறார்.

மேலும் மற்றொரு இதழில் சிவாஜி கூறிய போது வாழும் காலத்தில் வாழ்ந்த பெரியவர் வ.உ.சி. கதாபாத்திரம் ஏற்று நடித்து அதனை மக்கள் நம்ப வேண்டுமல்லவா என்றாராம்.

வ.உ.சி. கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனின் பொதுவான உடல்வாகு கொண்ட கம்பீரத்தை கேரக்டருக்காக எவ்வித மிகை நடிப்புமல்லாமல் அடக்கி வாசித்திருப்பார்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமுமினறி செப்பித் திரிவாரடி கிளியே என்னும் பாரதியார் பாடலில் ஒரு காட்சி வரும். அவர் எதிரே வரும் அன்பர்களை வணங்குவார்.

அவர்கள் கண்டு கொள்ளாமல் போவார்கள். அந்த இடத்தில் சிவாஜி வ.உ.சி.யை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

அக்காலத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த வ.உ.சியை பல பெரும் தலைவர்கள் பார்ப்பதையே தவிர்த்து வந்ததை இக் காட்சி மூலம் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

இந்த காட்சி தமிழ்ச் சமூகம் வ.உ.சி.யின் முழு உழைப்பையும், தியாகத்தையும் அங்கீகரிக்காத சமூகத்தின் சீரழிந்த பச்சாதப கழிவிரக்க நிலையையும் தன்னுடைய வறுமை நிலையின் சுய கழிவிரக்கத்தையும் இரண்டு புள்ளிகளையும் ஒரே புள்ளியில் இணைத்து தனது அட்டகாசமான நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி கணேசன்.

வ.உ.சி. யின் யதார்த்தமான பெரிய மனிதத்தன்மையை நன்றாக உள்வாங்கி அடக்கத்துடனே தனது உடல் மொழியை நடிப்பு மொழியில் வெளிப்படுத்தியிருப்பார்.

பெரும்பாலான காட்சிகளில் சிவாஜி தனது உடல் உறுப்பில் தலை மற்றும் தோள் பகுதியை மட்டுமே இணைக்க வைத்து நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார் என்பது கூடுதல் அம்சம். சிவாஜிக்கே உரிய மிகப் பெரிய கம்பீரம் இந்த படத்தில் எங்கும் வெளிப்படாமல் இருக்கும்.

இப் டத்திற்க்கு கதை வசனம் எழுதியவர் அன்றைய நாளில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்த எஸ்.டி.சுந்தரம்.

இந்த சுந்தரம் அன்றைய நாளில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரிய சினிமா படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் காலதேவன் அழைத்துப் போய்விட்டார்.

கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வரும் ஆறு பாட்டுகளும் அமரகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள் என்பது கூடுதல் சிறப்பு. பாடல்களையும் பின்னனி இசையையும் பின்னி எடுத்திருப்பார் ஜி.ராமநாதன்.

ஜி.ராமநாதன் இசைக் கோர்வை அமைத்த படங்களில் மிகச் சிறப்பாக அமைந்த படம் இந்த படம். ராமநாதன் இசையைக் கேட்பதற்காகவே பல தடவை இப்படத்தை நான் பார்த்து ரசித்தவன்.

கப்பலோட்டிய தமிழன் படம் வெளியாகிய பிறகு வ.உ.சி.யின் புதல்வர் சிவாஜியைக் கண்டு “எங்க அய்யாவை நேரில் பார்த்தேன்” என கூறினாராம். அப்பொழுதுதான் சிவாஜி கணேசனுக்கு மனதுக்குள்ளிருந்த ஒரு அச்சம் கலந்த படபடப்பு ஒரு முடிவுக்கு வந்ததாம்.

ஏனெனில் வாழும் காலத்தில் உள்ள பெரிய மனிதரை வெளிப்படுத்தும் போது அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பார்க்கும்போது ஒரு உண்மைத்தன்மை .வரவேண்டுமல்லவா.

அதற்காகவே மிகவும் என்னை மெனக்கிட்டு நடித்த சவால் நிறைந்த படமாக இருந்தது என நேர்காணலில் கூறியிருக்கிறார்.

தினமணி கதிர் முன்னாள் ஆசிரியர் சுகதேவ் தற்செயலாக அவரது முகநூலில் சிவாஜி கணேசனை நேர்காணல் கண்ட அனுபவத்தை கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

அதில் ஒரு கேள்வியை வைக்கிறார். “நீங்கள் நடித்த பாத்திரங்களில் சவாலாக இருந்த பாத்திரம் எது எனக் கேட்க, அதறகு சிவாஜி “கப்பலோட்டிய தமிழன்தான்” என்று கூறிவிட்டு வ.உ.சி.யின் புதல்வர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு

“ஐயாவை நேரில் பார்த்தேன் என்று சொன்னதாகவும், ”இதை விட ஒரு நடிகனுக்கு அங்கீகாரம் எதுவாக இருக்கமுடியும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

கட்டபொம்மனையும், வ.உ.சி.யையும் படமாக்க திட்டமிட்டவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன். ஆனால் செயலில் வென்று முடித்தவர் பி.ஆர்.பந்துலு.

வியாபார ரீதியில் சோதனையாக கருதப்பட்டு வசதி படைத்த பலரும் செய்யத் துணியாத சரித்திர படங்களை எடுக்கத் துணிந்தவர் பி.ஆர்.பந்துலு. ஆனால் கப்பலோட்டிய தமிழன் படம் தோல்வி அடைந்து அவரையும் கடன் துன்பத்துக்கு ஆளாக்கியது.

இந்த படம் வெளிவந்த வேலையில் படத்தை இயக்கிய பி.ஆர்.பந்துலு சென்னை தாம்பரத்தில் ஒடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு இலக்கிய பேராசான் ப.ஜீவானந்தம் அவர்களை குடும்பத்தோடு அழைத்துச் சென்றிருக்கிறார்.

படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜீவா துக்கம் தாளாது தேம்பி தேம்பி அழுதிருக்கிறார். உடன் இருந்த ஜீவா மகள் டாக்டர் உமாதேவி “அப்பா இப்படி அழுது நான் பார்த்ததில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பத்மினி பிக்சர்ஸ் மூலமாக பி.ஆர்.பந்துலு இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி கப்பலோட்டிய தமிழனுக்கு கிடைக்காமல் போயிற்று.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை விட வ.உ.சி.யின் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி கணேசன் என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் ம.பொ.சி.

கப்பலோட்டிய தமிழன் படம் அடிப்படையில் வ.உ.சி.யின் உண்மையான யதார்த்த வாழ்வும் மிகவும் துன்பகரமான வாழ்வு கொண்டது. படம் முழுமையும் சோகம் ததும்பும்.

இப்படத்தில் சின்ன ஆறுதல் ஜெமினி கணேசன் (மாடசாமி கதாபாத்திரம்), தனது மனைவியான கண்ணம்மாளை (சாவித்திரி) காதல் செய்யும் அற்புதமான பாரதியார் பாட்ல் காற்றிடை வெளி கண்ணம்மா என்ற பாடல் மட்டுமே. பின்பு படம் முழுமையும் தாங்க முடியாத சோகமும் கூட.

இந்த படம் அன்றைய அரசியல் சூழலால் தோல்வி அடைய வைக்கவும் செய்தனர்.

இந்த படம் வந்த வேளையில் எம்.ஜி.ஆர். நடித்த தாய் சொல்லை தட்டாதே ஒரு தியேட்டரிலும், சிவாஜி நடித்த பாலும் பழமும் மற்றொரு தியேட்டரில் இரண்டு படங்களும் நூறு நாட்கள் தாண்டி ஓட, கப்பலோட்டிய தமிழன் படம் ஒரு வாரத்தில் தியேட்டரில் கூட்டம் வராமல் ஈயாட ஆரம்பித்து விட்டது.

படம் ஒவ்வொரு தியேட்டரிலும் ஓடாமல் எடுக்க வேண்டியதாயிற்று என்றால் தமிழன்கள் எவ்வளவு நல்லவிங்க பாருங்க. ஜீவா படம் ஓடாமல் இருப்பதை கண்டு துடிதுடித்தார்.

பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த கே. பாலதண்டாயுதம் கூட தனது கலையும் வாழ்வும் என்ற நூலில் “கப்பலோட்டிய தமிழன்” படத்தை என்னால் பார்க்கமுடியவில்லை.

காரணம் கண்ணீர் நிரம்பி என் கண்கள் குளமாகி விட்டது என்று பதிவு செய்துள்ளார்.

இந்த படம் தோல்வி அடையக்கூடாது என்பதற்காக 1963-ம் ஆண்டு டிசம்பர் தாமரை இதழில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் குறித்து ஜீவா தலையங்கமும் எழுதியிருக்கிறார்.

இப்படத்திற்காக வரிவிலக்கு அளிக்கும்படியும் வேண்டியுள்ளார்.

ஆனால் பக்தவத்சலம் வரிவிலக்கு முதலில் அளிக்க தயங்கினார். ஏனெனில் கப்பலோட்டிய இந்தியன் என்றல்லவா பெயரிட்டிருக்க வேண்டும்.

அதென்ன கப்பலோட்டிய தமிழன் என்று சலித்துக் கொண்டார். ஆனால் அதில் உண்மையும் இருக்கிறது. பிறகு ஒருவாறாக வரிவிலக்கு அளிக்க முன்வந்தார்.

தமிழக அரசு முதல் வரிவிலக்கு அளித்த படம் இதுதான். ஆனால் வழக்கம் போல் வசூல் ரீதியாக மிகப் பெரும் தோல்வி அடைந்த படமாகி விட்டது. வ.உ.சி.

இன்றும் மக்கள் மனதில் உறுதுணையாக நிற்க காரணமாக இருந்தவர்கள் வித்திட்டவர் ம.பொ.சிவஞானம் உரமிட்டவர் நாடக கலைஞர் டி.கே.சண்முகம் & தமிழ் பண்ணை சின்ன அண்ணாமலை,

தண்ணீர் பாய்ச்சியவர் பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலு. மக்கள் மனதில் மரம் போன்று நினைவில் நிறுத்தியவர் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்.

You might also like