சிறையில் இறந்த கஸ்தூர்பா; காந்தி சொன்ன வார்த்தைகள்!

தேசத் தந்தை மகாத்மாவின் போராட்ட வாழ்க்கைக்கு காலம் முழுக்க துணை நின்றவர் கஸ்தூர்பா.

இருவருக்கும் இடையே சில விஷயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும், காந்தியின் விடுதலைப் போராட்ட முயற்சிகளுக்கு கடைசி வரை தோள் கொடுத்தவர் கஸ்தூர்பா.

மகாத்மா காந்தியும், அவரை மனைவியாக மட்டுமின்றி தோழியாக, ஆலோசகராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்.

காந்தியும் கஸ்தூர்பாவும் 1869-ம் ஆண்டு போர்பந்தரில் பிறந்தவர்கள். மகாத்மா காந்திக்கும், கஸ்தூர்பாவுக்கும் 13-வது வயதில் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த நாள் முதல், தன் கணவரின் லட்சியங்களுக்கு துணையாக இருந்துவந்தார் கஸ்தூர்பா காந்தி.

மகாத்மா காந்தி பொது வாழ்க்கையில் தீவிரமாக இருந்ததால், குடும்பப் பொறுப்புகளை கஸ்தூர்பாவே ஏற்று வந்தார். அத்துடன் காந்தியுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறையிலும் இருந்துள்ளார்.

1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது காந்தியுடன் கஸ்தூர்பாவும் கைதானார். இருவரும் புனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் கஸ்தூர்பாவின் உடல்நிலை நலிவடையத் தொடங்கியது. நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

நோயுற்ற காரணத்தால் அவரை விடுதலை செய்யவேண்டும் என்று பலரும் ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கஸ்தூர்பாவை விடுவிக்க மறுத்த அரசு, அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முன்வந்தது.

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்.கிளைடர், டாக்டர்.நய்யார் ஆகியோர் அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களின் சிகிச்சையை ஏற்க மறுத்தார் கஸ்தூர்பா.

மகாத்மா காந்திக்கு சிகிச்சை அளித்த இயற்கை மருத்துவரான டாக்டர்.தின்ஷா மேத்தாவோ, அல்லது வேறு யாராவது ஆயுர்வேத மருத்துவர்களோதான் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால், அதையும் மீறி அலோபதி மருத்துவர்கள் அவருக்கு மருத்துவம் பார்த்தனர். இருப்பினும் கஸ்தூர்பாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தன் இறுதிக்காலம் நெருங்கியதை உணர்ந்த கஸ்தூர்பா, மகன்கள் பேரக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை காண விரும்பினார். குறிப்பாக காந்தியால் அதிகம் வெறுக்கப்பட்ட ஹரிலாலை காண விரும்பினார்.

இதைத்தொடர்ந்து ஆங்கிலேய அரசு ஆகாகான் மாளிகைக்குள் அவர்களை அனுமதித்தது.

இறுதிக் கட்டத்தில் தாயைப் பார்க்க வந்திருந்த ஹரிலால் நன்றாக குடித்திருந்ததால், பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். மகனின் நிலையைப் பார்த்து கஸ்தூர்பா தன் தலையில் அடித்துக்கொண்டார்.

கஸ்தூர்பாவை மரணம் நெருங்கியதை உணர்ந்த மகாத்மா காந்தி, அவருக்கு உணவுகளைக் கொடுப்பதை நிறுத்தி, தண்ணீரும், தேனும் மட்டும் கொடுக்குமாறு கூறினார்.

இறுதியில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி காந்தியின் மடியில் தலைவைத்து படுத்தவாறு கஸ்தூர்பா உயிர்நீத்தார்.

தனது வாழ்க்கையில் எத்தனையோ பேரின் இறப்புகளைப் பார்த்த காந்தியால், கஸ்தூர்பாவின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கஸ்தூர்பாவின் மறைவைப் பற்றி குறிப்பிட்டுள்ள காந்தி, “அவர் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

-பி.எம்.சுதிர்

You might also like