பத்திரிகை நிரூபர் என்ற பணியை, வெறும் தொழிலாக மட்டுமே கருதுகிறவர்கள் பலர் உண்டு. ஏதோ ஒரு சிலர்தான் இதை ஒரு சமூகப்பணி என்கிற முறையில் பொறுப்புணர்வுடன் அணுகுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சிலரில், இந்தக் கட்டுரைத் தொகுப்பை எழுதிய லட்சுமணனும் (மணா) ஒருவர்.
இந்த இளைஞர், என்னுடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு உடையவர். அதனால் தானோ என்னவோ, ‘துக்ளக்’கில் பல வருடங்களாக இவர் தொடர்ந்து நிரூபராக பணியாற்றி வருகிறார்.
இந்த இதழிற்கு இன்ன விஷயத்தை ஆராயலாம்… இவ்வகையில் அதை அணுகலாம்… என்றெல்லாம் எனக்கு யோசனை கூறி, அதை செய்திக் கட்டுரை வடிவிலும் கொண்டு வருகிறவர் லட்சுமணன்.
அரசியல் நிகழ்ச்சிகளை ஊன்றிக்கவனிப்பதுடன் மட்டுமல்லாமல், பல சமுதாயப் பிரச்சினைகளையும் அலசி ஆராயும் ஆர்வமுடையவர் இவர்.
நக்ஸலைட் பிரச்சினையிலிருந்து தமிழ்த் தீவிரவாதம் உட்பட, இயற்கை வைத்தியம் வரை, பல தரப்பட்ட விஷயங்கள் பற்றி ‘துக்ளக்’கில் இவர் பல வருடங்களாக எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புஸ்தகம்.
(இவரிடமே கூட மனதில் கொஞ்சம் தீவிரவாதம் உண்டு என்றும், அதை சிரமப்பட்டு அடக்கிக் கொள்கிறார் என்றும் எனக்கு ஒரு சந்தேகமுண்டு!)

இதுவரை அவா் வேண்டியவர், வேண்டாதவர் என்பதற்காக யாரைப் பற்றியும் தவறாகவோ, பாராட்டியோ எழுதியதில்லை;
தன்னால் ஏற்க முடியாத விஷயம் என்பதற்காக ஒன்றை விமர்சனம் செய்ததில்லை, அச்சத்தின் காரணமாக ஒரு விஷயத்தையும் எழுதாமல் விட்டதில்லை.
சலுகைகளைத் தேடி அதற்காக எதையும் எழுதியதில்லை.
எந்தப் பிரச்சினையைப் பற்றியும் ஒருதலை பட்சமாக எழுதாமல் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பலதரப்பினரையும் சந்தித்து, அதன் பரிமாணங்களைப் புரிந்துகொண்டு,
நடுநிலை தவறாமல் தனது செய்திக் கட்டுரைகளை எழுதும் லட்சுமணன் போன்ற பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து வருகிறது.
இவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை கூடுவது, சமூகத்திற்கு நல்லது.
அவருடைய இந்தக் கட்டுரைத் தொகுப்பு தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.
குறிப்பு: 1993-ல் வெளிவந்த ‘தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள்’ நூலுக்காக பத்திரிகையாளர் சோ எழுதிய முன்னுரை இது.
தற்போது, இந்த நூலை மறுபதிப்பாக பரிதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூல் பற்றிய தொடர்புக்கு – 72006 93200