பெரியாரின் மஞ்சள் மண்டி!

காலத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்ட மாதிரி இருக்கிறது ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிற அந்த மஞ்சள் மண்டி.

மேலே செம்மண் கலரில் அலையடித்த மாதிரி நாட்டு ஓடுகள். தாழ்வான நுழைவாயில் முன்னால் பழங்கால மரத்தூண்கள்.

வரிசையாக ஆறு கடைகள். கடைக்குள் எப்போதும் இருக்கின்றன இளம் சூடும், கொஞ்சம் இருட்டும். எதிரே போலீஸ் ஸ்டேஷன்.

இதில் வியாபாரியாக இருந்தவர் பெரியார். ஈ.வே.ராமசாமிப் பெரியாரேதான்.

பெரியாரின் அப்பா வேங்கட்டப்ப நாயக்கரின் உழைப்பில் உருவானது இந்த மஞ்சள் மண்டி. கூடவே வெங்காயம், மிளகாய் எல்லாம் வரும்.

பெரியாரின் அம்மா சின்னத்தாய் வீட்டிலிருந்தே நெல்லைக் குத்தி, உளுத்தம் பருப்பை உடைத்துக் கடைக்குக் கொண்டு வருவார். சிக்கனமாக இருந்தாலும் வளர்ந்தது வியாபாரம்.

பள்ளிப் படிப்பைப் பத்தாவது வயதுடன் நிறுத்திவிட்ட ராமசாமியைக் கட்டுப்படுத்த அப்போது காலில் சங்கிலிபோட்டு விடுவார்கள். சங்கிலியின் முனையில் ஒரு மரத்துண்டு. இருந்தும் குறும்பு நிற்கவில்லை.

பையனைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு வந்தார் வேங்கட்டப்ப நாயக்கர். ரயிலுக்குப் போகும் மஞ்சள், மிளகாய் மூட்டைகளை ஏலம் விட்டு முடிந்ததும், மூட்டைகளின் முதுகில் முகவரி எழுதுவது ராமசாமியின் வேலை. வியாபாரிகளுடன் தர்க்கம் நடக்கும்.

19 வயதிலேயே நாகம்மாளுடன் திருமணம் முடிந்துவிட்டது. மண்டி வியாபாரம் பழகிவிட்டது. அந்தச் சமயத்தில் ராமசாமிக்குப் பெண் குழந்தை பிறந்து ஐந்து மாதத்தில் இறந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் ஒரு போலிச் சாமியாரின் தம்பி விஷயத்தில் தலையிட்டார் ராமசாமி. உடனே ஏகப்பட்ட புகார்கள் அப்பாவிடம் போயின. அவருக்கு ஆத்திரம்.

வளர்ந்த பையனைக் கடையில் வைத்தே செருப்பால் அடித்தார். பொறுத்துக்கொண்டு நின்றார் ராமசாமி.

எதிரே போலீஸ் ஸ்டேஷனிலிருந்த ஏட்டு பார்த்துவிட்டுப் பதறி வந்து விசாரித்து சாமியாரின் லீலைகள் பற்றிச் சொன்னதும்தான் சமாதானம் ஆனார் அப்பா.

“அடித்தபோது அவரைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவரை அனுதாபத்துடன்தான் பார்த்தேன்” என்கிறார் பெரியார் பிந்திய நாட்களில்.

மண்டியில் இருந்த சமயத்தில் அரசு அதிகாரிகள், ஜமீன்களுடன் சகவாசம். இரவெல்லாம் அவர்கள் மது அருந்துவார்கள். களியாட்டம் போடுவார்கள். ராமசாமி வாங்கிக் கொடுப்பார். சிலர் பலவந்தப்படுத்தியும் ராமசாமிக்கு அதில் ஆர்வமில்லை.

விடிகிறவரை அவர்களுடன் இருந்துவிட்டு காலை வீட்டுக்கு வந்து சாவியை எடுத்துக்கொண்டு கடைக்குப் போவார். அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. கூப்பிட்டுக் கண்டித்தார். உடனே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் ராமசாமி.

கல்கத்தாவுக்குப் போனார். காசிக்குப் போனார். சாமியார்களுடன் சேர்ந்து பிச்சையெடுத்தார். ஏனோ அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. திரும்பவும் ஈரோடுக்கு வந்தார். அப்பாவுக்குச் சந்தோஷம்.

மண்டியில் “வேங்கட்டப்ப நாயக்கர் மண்டி என்றிருந்த போர்டை “ஈ.வே.ராமசாமி நாயக்கர் மண்டி” என்று மாற்றினார். மறுபடியும் வியாபாரியானார் ராமசாமி.

“திரும்பிய பிறகு வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அப்போதே வருஷத்திற்கு 500 ரூபாய் வருமான வரி கட்டுமளவுக்குச் சம்பாதித்தார்.

அவர் உபயோகித்த ‘கல்லாப்பெட்டி’ இப்போதும் மண்டியில் இருக்கிறது. திண்டுக்கலில் இருந்து ‘தண்டவாளப் பெட்டி’ என்கிற இரும்புப் பெட்டியே நான்கு வைத்திருந்தார்.

அப்போது பெரியாருடன் மண்டியில் இருந்தவர்கள் பத்து பேர். தொழிலாளர்களிடமிருந்து உழைப்பைச் சுரண்டினால் போதாது; அதற்குரிய பணமும் கொடுக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் லாபத்தைப் பிரித்து ‘கஷ்டக்கட்டு’ என்கிற பெயரில் அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

“வியாபாரியாக இருந்தபோதும் பெருந்தன்மையாகவே இருந்தார் பெரியார்” என்கிறார் பெரியாரின் அண்ணன் மகனும், ஈ.வி.கே. சம்பத்தின் சகோதரருமான 75 வயதான ஈ.வி.கே. செல்வராஜ்.

வியாபாரம் பெருகியதும் ஈரோட்டில் பெரும் புள்ளியானார். பல கெளரவப் பதவிகள் தேடி வந்தன. செல்வாக்கு வந்தது. ஈரோடு நகராட்சித் தலைவர் ஆனார்.

கூடவே தேவஸ்தானக் கமிட்டி காரியதரிசி. சற்று கவனமில்லாததால் அவர் ஆரம்பித்த பஞ்சாலை, எண்ணெய்ச் செக்குகளை மூட வேண்டியதாயிற்று. மிஞ்சியது அதே மஞ்சள் மண்டிதான்.

அந்தச் சமயத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடு, ராஜாஜியுடன் பழக்கம் ஏற்பட்டு காங்கிரஸில் சேர்ந்த பிறகு மஞ்சள் மண்டியைத் தன்னுடைய தங்கை கண்ணம்மாவின் கணவரான ‘மாப்பிள்ளை நாயக்கர்’ என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கரிடம் ஒப்படைத்தார்.

அப்போது பெரியாருக்கு மண்டியின் மூலம் வந்துகொண்டிருந்த பணம் ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய்.

இப்போதும் அதே மண்டி; கொஞ்சமும் மாறாத அதே நிலையில் பெரியாரின் தங்கை குடும்பத்தினரின் பொறுப்பில் இருக்கிறது. எதிரே போலீஸ் ஸ்டேஷன். பெரியாரின் கடந்த காலத்தை நினைவு மடிப்பிலிருந்து சொல்ல அவரது உறவினர்கள், நண்பர்கள்.

“முயற்சியுடையவன் முன்னேற்றத்தை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது” என்று அடிக்கடி சொன்னபடி முன்னேறிய பெரியாரின் தீவிர உழைப்பு துவங்கிய இடம் இந்த மஞ்சள் மண்டி.

எப்படியோ திராவிட இயக்கத்திற்கும் மஞ்சளுக்கும் ‘மங்களகரமான’ தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.

–  பத்திரிகையாளர் மணா எழுதி,  ‘அந்திமழை’ பதிப்பகம் வெளியிட்ட ‘தமிழகத் தடங்கள்’ நூலிலிருந்து…

You might also like