பிரச்சினைகளுக்கு மத்தியில் விஜய் பிரச்சாரம்!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் ஏற்கனவே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன.

தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை உருவாக்கியுள்ள தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள் (செப்டம்பர் 13, சனிக்கிழமை) தேர்தல் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார்.

அன்றைய தினம் மாநிலத்தின் மையமான திருச்சியில் அவரது பிரச்சாரம் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் வலம் வரும் வகையில் அவரது பயணம் அமைக்கப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு போலீசார் கெடுபிடிகளைக் காட்ட ஆரம்பித்து விட்டனர்.

தனது முதல் பிரச்சாரத்தை ரோடு ஷோவாக நடத்த அவர் முடிவு செய்திருந்தார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.

திருச்சியில் சத்திரம் பகுதியில் விஜய் பேசுவதற்கு தவெகவினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை.

மரக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே விஜய் பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திறந்த வேனில் நின்றபடியே பேச வேண்டும் – விஜய் வாகனத்தின் முன்பும், பின்பும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து வரக்கூடாது, விஜய் வரும் வழியில் விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை ஏன்?

விஜய்யின் சனிக்கிழமை பயணத்தை சில கட்சிகள் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளன. ‘முழு நேர அரசியல்வாதி தினம்தோறும் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் – சனிக்கிழமைதான் வெளியே வருவேன் என்பது சரி அல்ல‘ என்பது அவர்கள் வாதம்.

இதற்கு தவெகவினர் தரும் பதில்:

சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதால் தொண்டர்கள் திரள வசதியாக இருக்கும். அன்று அரசு விடுமுறை நாள் என்பதால் பொதுமக்களும் கூட்டத்தை பார்க்க வருவார்கள் – சனிக்கிழமை சுற்றுப் பயணத்தில் பேசப்படும் விஷயங்கள், ஞாயிறு முழுவதும் வைரலாக இருக்கும்.

இப்படியே ஒரு வாரம் போனால், அடுத்த சனி வந்துவிடும்.

அந்த சனிக்கிழமையன்று விஜய் பேசுவது, அடுத்த வாரம் வரை ட்ரெண்டில் இருக்கும் என்பது விஜய் தரப்பு வாதம்.

விஜய் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய கேரவன் வாங்கப்பட்டுள்ளது. இதில் பல நவீன வசதிகள் உள்ளன.

விஜய்யின் ‘வீக் எண்ட்’ பிரச்சாரத்தை முறியடிக்க திமுக தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு ஒன்று – விஜயின் முதல் பிரச்சார தினமான 13 ஆம் தேதி சென்னையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியை டிவிக்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளனர். இதனால் விஜய் பிரச்சாரத்துக்கு திரளும் கூட்டத்தைக் குறைக்கலாம் என்பது திட்டம்.

கில்லியின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. ஸ்கோர் எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like