மிடுக்கான காவலர்களின் மென்மையான மறுபக்கம்!

தமிழக காவல்துறையின் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர் அனூப் ஜெய்ஸ்வால். அவரின் இளவயது அனுபவங்களைக் கதைப் போல் சொல்கிறது இந்நூல்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான அனூப் ஜெய்ஸ்வாலின் சாதனைக் கதைகள் இதில் அடங்கியுள்ளன.

இதில் முதல் கதை, இன்று தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் கிராமத்தில் நடந்த பரபரப்பான மூன்று கொலைகளில் இருந்து தொடங்குகிறது.

1980-களின் ஆரம்பக் காலம் அது. அம்பாசமுத்திரம் பகுதி உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகிறார் அனூப் ஜெய்ஸ்வால்.

ஒரு விடுமுறை நாளில் தன் மனைவி, பிள்ளைகளுடன் பொழுதைக் கழிக்க மாஞ்சோலைக்குச் செல்கிறார்.

ஆனால், அவர் போய் சேர்ந்த நேரம் அவருக்காக காத்திருந்த புறக்காவல் நிலைய தலைமைக் காவலர், அங்கிருந்து அறுபது கிமீ தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் கொலை நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

உடனடியாக அங்கிருந்து ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விரைகிறார் அனூப். வயர்லெஸ்சில் சப்-இன்ஸ்பெக்டர் குறித்து கேட்க, அவரும் சிவலார்குளம் போயிருப்பதாகப் பதில் வந்துள்ளது. அப்போது பல கிராமங்களுக்கு மின்சாரம் சென்றடையவில்லை.

ஒரே கும்மிருட்டு. பலத்த மழை வேறு. சிவலார்குளம் கிராமத்திலும் எந்த ஆளரவமும் இல்லை. கொலை நடந்துள்ளதால் எல்லோருமே ஊரைவிட்டு வெளியேறியிருந்தனர்.

அந்தக் கொட்டும் மழையில் வருவாய்த் துறையின் கட்டிடத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளதை அதிர்ச்சியுடன் பார்க்கிறார் அனூப்.

கொலை நடந்த இடத்திற்கு சென்றதாகச் சொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரும் அங்கில்லை. வேறு காவலர்களும் இல்லை. வயர்லெஸ்சில் கரகரக்கும் ஒலியைத் தவிர வேறெதுவும் வரவில்லை.

இந்நிலையில் அந்த மூன்று உடல்களையும் பாதுகாப்பில்லாமல் விட்டுச் செல்ல அனூப்பிற்கு மனம் வரவில்லை.

இதனால் டிரைவர் சேவியர் உதவியுடன் அந்த மூன்று உடல்களையும் தன்னுடைய ஜீப்பில் ஏற்றி ஆலங்குளம் காவல்நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் ஆறுமுகம் என்பவரையும் அவரின் மூன்று மகன்களையும் நிலத்தகராறு காரணமாக இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டியது தெரியவருகிறது.

இதில் ஆறுமுகம் உயிர் பிழைக்கிறார். மகன்கள் மூவரும் அந்த இடத்திலேயே பலியாகிவிடுகின்றனர். இதில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வாங்கித் தருகிறார் அனூப்.

இத்துடன் நிற்கவில்லை அவர். பாதிக்கப்பட்ட ஆறுமுகம், தன் மகன்கள் இறந்த விரக்தியில் தன்னுடைய மருமகள்களையும், பேரப் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைக்கிறார்.

இதை அறிந்த அனூப் அவருக்குப் பொறுப்பாக அறிவுரைகள் கூறி, எதிர்தரப்பினரிடம் இருந்து அவரையும் அவரின் குடும்பத்தையும் பாதுகாக்கிறார்.

அத்துடன் அவரின் நிலத்தை குத்தகைக்கு விடும்படி செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அவரின் வங்கிக் கணக்கில் போடும்படியான ஏற்பாட்டையும் செய்கிறார். இதில் அவரின் மனிதநேயம் நம்மை வியக்க வைக்கிறது.

இப்படியாக இந்நூல் முழுவதும் அனூப்பின் கள அனுபவங்களுடன் அவரின் மனித நேயமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்படி ஒரு காவல் அதிகாரி எளிய மக்கள் அணுகக்கூடியவராகவும், அவர்களிடம் அன்பு பாராட்டி உதவினார் என்பதையும் வாசிக்கையில் அனூப்பை நம் மனதின் உயரத்தில் நிறுத்துகிறது. 

இதேபோல், ஒருகாலத்தில் இஞ்சிக்குடியாக விளங்கிய தூத்துக்குடி நகரை மீண்டும் தன் பழையபெயரை மீட்டெடுக்கக் காரணமாக இருந்துள்ள கதை விறுவிறுப்பானது. 1980களில் தூத்துக்குடியில் இஞ்சி என அழைக்கப்படும் மதுபானம் பிரபலமாக இருந்துள்ளது.

உண்மையில் இது மிக அதிக அளவு ஆல்கஹால் கலக்கப்பட்ட கள்ளச் சாரயம். அப்போது ஆங்கில மருந்துக் கடையில்கூட தாராளமாகக் கிடைத்துள்ளன.

இதனை ஏராளமான கூலித் தொழிலாளர்கள் வாங்கிக் குடித்து உடலை கெடுத்து வந்தனர். இதனால் தூத்துக்குடி இஞ்சிக்குடியாக விளங்கியது.

இந்த விஷயம் அனூப்பின் காதுகளுக்கு எட்ட, அதனை அகற்ற எப்படித் துரிதமாக செயல்பட்டார் என்பதையும், அதற்காக அவர் செய்த அதிரடி நடவடிக்கைகளையும் இந்தக் கதையின் மூலம் அறியமுடிகிறது.     

அதன்பிறகு மற்றொரு கதையில் கணவர் இறந்து 65 ஆண்டுகளான ஒரு மூதாட்டிக்கு, பல சிரமங்களுக்கு மத்தியில் பென்ஷனுக்கு ஏற்பாடு செய்கிறார் அனூப்.

இது சட்டபேரவை வரை சென்று பேசப்பட்ட நிகழ்வாக மாறியது. இதற்காக உயரதிகாரிகள் அவரை வெகுவாக பாராட்டுகின்றனர்.  

இதன்பிறகு 1987ம் ஆண்டு நடந்த புன்னைக்காயலில் நடந்த கொடூரப் படுகொலைகள் சம்பவத்தில் வேகமாக செயல்பட்டு பெரிதாக நிகழவிருந்த கலவரத்தைத் தடுத்த கதை நடுங்க வைக்கிறது.

மீனவர்களுக்கும், ஆதிதிராவிட சமூக மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை இது.    

இதேபோல் ‘வார வட்டி’ முறையை ஒழித்து தொழிலாளர்கள் கஷ்டத்தை சரிசெய்தது, திருட்டுச் சம்பவங்களைக் கண்டறிந்தது, காவலர் பயிற்சி பட்டாலியனில் கனிவாக நடந்துகொண்டது என 20 கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.

இதில் எல்லா கதைகளிலும் பாதிக்கப்பட்டவர்களிடம் கனிவு காட்டியதும், தவறு செய்தவர்களையும் திருத்தியதும் இருக்கின்றன.

நெஞ்சில் உரமும், நேர்மைத் திறனும் கொண்ட ஒரு அதிகாரி, சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் எவ்வளவு சாதனைகள் படைக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன இந்தக் கதைகள்.  

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்ற முடியும் என்பதற்கும் திருத்தவே முடியாது எனக் கருதப்படுவோரிடத்திலும் மனமாற்றம் நிகழும் என்பதற்கும் இந்தப் புத்தகம் சிறந்த சான்றாவணம். அதேபோல் அன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை இந்நூல் மூலம் அறியவும் முடிகிறது.

இந்நூலை பத்திரிகையாளரும், எழுத்தாளருமான வி.சுதர்ஷன் எழுதியுள்ளார். இவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ், அவுட்லுக், தி பயோனீர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியவர்.

அவர் ஆங்கிலத்தில், ‘TUTICORIN: Adventures in TamilNadu’s Crime Capital’ என்ற பெயரில் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பே இந்நூல். இந்த ஆங்கில நூலை தமிழில் மு.குமரேசன் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவர் காவல்துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றியவர். அனூப் ஜெய்ஸ்வால் நிர்வாகப் பிரிவு ஐ.ஜியாக இருந்தபோது அவரின் நேர்முக உதவியாளராகவும் இருந்துள்ளார்.

இந்நூலில் நிறைய விவரணைகளுடன் ஒவ்வொரு சம்பவங்களையும் ஒரு சிறுகதைபோல் காட்சிப்படுத்தி உள்ளார் இந்நூலாசிரியர் வி.சுதர்ஷன். இந்தக் கதைகளில் உள்ள சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு நேரே சென்றது போன்ற உணர்வை நமக்கு கடத்துகிறார். அந்தவகையில், ‘குற்றமும் கருணையும்’ எனும் இந்நூல் வாசிக்க வேண்டிய ஒன்று. 

(குற்றமும் கருணையும்: இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள், வி.சுதர்ஷன், தமிழில்: மு.குமரேசன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.275, தொடர்புக்கு: 04652 278525)   

    – கவின்

 

 

You might also like