முதியோர் இல்லங்கள் அதிகரிப்பு எதைக் காட்டுகிறது?

சாலையோரம் தீடீரென்று முளைக்கும் ரெஸ்டாரெண்ட்கள் போல், வடவள்ளியில் எல்டர்ஸ் ஹோம்ஸ் (முதியோர் இல்லங்கள்) வருடா வருடம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
 
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.
 
வயது எழுபதுக்கு மேல் இருக்கும். ஒடிசலான உடம்பு. வெள்ளை ஃபேண்ட், வெள்ளை சர்ட், நீல நிற டை, சரளமான ஆங்கிலம், தமிழ் இரண்டும் கலந்த பேச்சு. அதில் லேசாக நகைச்சுவை பூச்சு.
 
“ஸார்… வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நீங்கள் எங்கள் முதியோர் இல்லத்திற்கு வந்து அங்கே இருக்கிறவங்களுக்கு ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கணும்.
 
பலர் அங்கே மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு, அமைதியின்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு மன தைரியம் அளிக்கக் கூடிய வகையில் மூத்த எழுத்தாளர் என்கிற முறையில் நீங்கள் வந்து பேச முடியுமா?”
 
“கண்டிப்பாக வருகிறேன்”
 
நான் என்னுடைய சம்மதத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவருடைய செல்போன் அழைத்தது.
 
எடுத்துப் பார்த்தவர் என்னை ஒரு சிறிய புன்னகையில் நனைத்தார்.
 
“ஸார் அமெரிக்காவிலிருந்து என்னோட சன் பேசறான்” பெருமிதத்துடன் சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தார். என்னையும் அவர் மகனோடு பேச வைத்தார்.
 
ஐந்து நிமிடம் பேசிவிட்டு செல்போனை அணைத்தவரின் கண்களில் இப்போது நீர் நிரம்பி தத்தளித்தது.
 
நான் அதிர்ந்து போனவனாய் கேட்டேன்.
 
“ஏன் சார் ஏதாவது பிரச்சினையா?”
 
அதெல்லாம் ஒண்ணுமில்லை ஸார், மகனோட குரலைக் கேட்டதும் அழுகை வந்துருச்சு. வாரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி அமெரிக்காவில் இருக்கிற மகனும், ஆஸ்திரேலியாவில் இருக்கிற பொண்ணும், பேசுவாங்க. அஞ்சு நிமிஷம் பேசிட்டு வெச்சுடுவாங்க. ஒரு பேரன், ஒரு பேத்தி… அவங்க பேசறதே இல்லை.
 
எங்களுக்கு வயசான காலத்தில் அவங்க இந்தியாவில் இருக்காமே ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால இருந்துகிட்டு “அம்மா நீ சௌக்கியமா….. அப்பா நீ சௌக்கியமா”ன்னு கேட்கிறதை நினைச்சா தாங்க முடியலை ஸார்.
 
சென்ட்ரல் கவர்மெண்ட்ல நல்ல போஸ்டிங்ல இருந்தவன் நான். என் மன அழுத்தத்தை குறைச்சுக்கத்தான் இந்த முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்து, வலிய மேலாளர் பொறுப்பை ஏத்துகிட்டு நாட்களை ஓட்டிகிட்டு இருக்கேன்”
 
அவர் பேசப் பேச மறுபடியும் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. விம்மினார்.
 
என்னைப் பார்க்க வரும்போது ஒரு இளைஞனைப் போல் உற்சாகமாய் இருந்தவர், இப்போது குண்டூசி குத்திய பலூன் போல் உடைந்து ஒரு குழந்தையைப் போல் அழுவதைப் பார்க்க மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.
 
ஒரு வாரம் கழித்துப் பேச வேண்டிய மோட்டிவேஷனல் ஸ்பீச்சை அன்றைக்கே அவரிடம் ஆரம்பித்தேன்….!
 
– எழுத்தாளர் ராஜேஷ்குமார்
You might also like