பெண்களின் மார்பகங்கள் மூலம் அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் சிக்கல்கள், இந்தச் சமூகம் கற்பித்திருக்கும் வரையறைகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்கிற வேதனையைப் பதிவு செய்து ஒரு படம் வந்திருக்கிறது – மலையாளத்தில்தான்.
“B 32 முதல் 44 வரை” என்று தலைப்பைப் பார்த்ததும் ஏதோ தேசிய நெடுஞ்சாலையின் எண்கள் போல என்றொரு தோற்றப் பிழை ஏற்படலாம்.
ஆனால், படத்தின் முதல் காட்சியிலேயே இந்தச் சமூகத்தின் உளவியல் வன்மம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மிக அழகாக சொல்லி இருந்தார் இயக்குநர்.
தன்னிடம் ‘லிஃப்ட்’ கேட்கும் 11-ம் வகுப்பு மாணவனை அழைத்துச் செல்கையில் அது பெண் உருவில் இருக்கும் ஆண் ( திருநம்பி?) என்பதைப் புரிந்து கொள்கிறான் அந்தப் பையன்.
புரிந்ததுமே திருநம்பியின் உடலில் ஆங்காங்கே கை வைக்கத் தொடங்கியதும், அவனை நடுவழியிலேயே இறக்கி விடும்போது அந்தப் பையன் கேட்கிற கேள்வியே இந்த சமூகத்தின் கோளாறான மனப்பான்மையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது.
மார்புப் புற்று நோயால் மார்பகம் அகற்ற வேண்டிய சூழலில் வாழ்கின்ற ஒரு பெண், மிக வறுமையான நிலையில் தனக்கு இருக்கும் எடுப்பான மார்பகங்களால் உள்ளாடைகளுக்கான ஒரு மாடலாக மாற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்ற பெண்,
தன்னுடைய மார்பகங்கள் மிகச் சிறியதாக இருப்பதாலேயே தான் சார்ந்து இருக்கும் தொழிலில் திறமை இருந்தும் கூட, அடுத்தக்கட்ட நிலைக்கு நகர முடியாமல் உதாசீனப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகின்ற பெண்,
நடிப்பதற்காகச் சென்ற இடத்தில் இயக்குநர் மார்பைத் தொட்டதால் மன உளைச்சலுக்குள்ளாகும் பெண் என்று பெண்களின் மார்பகம் சார்ந்த பல்வேறு உளவியல் சிக்கல்களை இந்தப் படம் பேசுகிறது.
ஒரு துணிச்சலான மையக்கருவை எடுத்துக்கொண்டு பேச முனைந்திருப்பதற்காகவே இந்த இயக்குநரை நாம் பாராட்டலாம். இயக்குநர் ஷ்ருதி ஷரண்யம் ஒரு பெண் என்பதால் கதாபாத்திரங்களுக்கான நியாயத்தைச் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.
ஹரிஷ் உத்தமன், ரம்யா நம்பீசன் தவிர்த்து, படத்தில் மலையாளத் திரையுலகின் பெரிய ‘தலைகள்’ என்று எவரும் இல்லை என்றாலும் ஷரின் சிஹாப், அனார்கலி மரைக்கார், அஸ்வதி, ரெய்னா ராதாகிருஷ்ணன் உட்பட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருமே பெரிய ‘தலை’களுக்குப் போட்டியாகத் தங்களுடைய பாத்திரங்களை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் நடிப்புச் சொல்லித் தருவதாகச் சொல்லி மார்பைத் தொட்டதைக் காவல் துறையில் புகாராகப் பதிவு செய்ததும், “பஸ்ல யாராவது தொட்டா இப்படி கேஸ் கொடுப்பியா? அதனால இதயெல்லாம் பிரச்னையாக்க வேண்டாம்” என்று தன் இயக்குநருக்காக வக்காலத்து வாங்கும் காதலனின் முகத்தில் காரியுமிழும் காட்சி அழகு.
பொதுவாகவே, பெண்களை மையப்படுத்தும் படங்களில் ஆண்களை ஆணாதிக்கவாதிகளாகவோ அல்லது பெண்ணியக் காவலாளிகளாகவோ மட்டுமே அடையாளப்படுத்துவார்கள்.
இந்தப் படத்தில் வரும் ஆண்கள் சராசரி ஆண்களின் குணாதிசயத்தோடு வலம் வருவது பெரிய ஆறுதல்.
தொழில்நுட்பம் சார்ந்து பெரிய குறைகள் எதுவும் இல்லாமல் ஒளிப்பதிவில் எல்லாக் காட்சிச் சட்டங்களும் மிக அழகாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பின்னணி இசை இன்னமும் மாறுதலாக இருந்திருக்கலாம். சில இடங்களில் ‘என்னால் இவ்வளவுதான் முடியும்’ என்று சொல்லிவிட்டது போல் இருக்கிறது பின்னணி இசை.
பெண்களின் உடலைக் கவர்ச்சியாக மட்டுமே கருதும் ஓர் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சி என்ற நிலையைத் தாண்டி அதற்குப் பின்னால் இருக்கும் உணர்வு பூர்வமான, உடல்ரீதியான, உளவியல் சிக்கல்களை இந்தக் குறைபட்டச் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதென்பது மிகப் பெரிய சவால்.
அந்தச் சவாலை மிகத் துணிச்சலாக மேற்கொண்டிருக்கும் இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும், இந்தப் படத்தைத் தயாரிக்க உதவி செய்த கேரள அரசின் திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கும் (இதைத்தான் அடூர் பயிற்சி எடுத்து விட்டு வர வேண்டுமென்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்) நன்றி சொல்ல வேண்டியது இந்தச் சமூகத்தின் கடன் என்றே கருதுகிறேன்.
ஒரு குறும்படமாக சுருக்கமாகச் சொல்லி முடித்து விடாமல், மிக ஆழமாகவும்தெளிவாகவும் சொல்லப்பட்டு இருப்பதால், கொஞ்சம் நீளமாகவும், விறகடுப்பில் சமைப்பது போன்ற நிதானத்துடனும் படம் நகர்கிறது. ஆனாலும் நல்ல திரைப்படம் பார்க்க விழைபவர்களுக்கு அது ஒரு குறையாக இருக்காதுதான்.
நன்றி: முகநூல் பதிவு