மலையாள சினிமா சங்கத்துக்கு முதல் பெண் தலைமை!

முக்கியப் பொறுப்புகளைக் கைப்பற்றிய பெண்கள்

மலையாள சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பியிருந்தது.

அதைத்தொடர்ந்து மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவராக இருந்த மோகன்லால் ராஜினாமா செய்ததுடன் நிர்வாகக் குழுவையும் கூண்டோடு கலைத்தார்.

இந்த நிலையில் ‘அம்மா’ அமைப்புக்கான நிர்வாகிகள் தேர்தல் ஆகஸ்ட் 15-ல் நடைபெற்றது. இந்த முறை பெண்கள் அதிகமாக போட்டியிட்டனர்.

அம்மா அமைப்பின் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன், பொதுச்செயலாளர் பதவிக்கு குக்கூ பரமேஸ்வரன், துணைத்தலைவர் பதவிக்கு லட்சுமி பிரியா, இணைச் செயலாளர் பதவிக்கு அன்ஸிபா ஹசன் என பல பதவிகளுக்கு நடிகைகள் போட்டியிட்டனர்.

இதற்கிடையே நடிகை ஸ்வேதா மேனன் ஆபாசக் காட்சிகளில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் மார்ட்டின் மேனாச்சேரி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுபடி கொச்சி சென்ட்ரல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தேர்தலில் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவதால் தனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகை ஸ்வேதா மேனன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகை ஸ்வேதா மேனன் மீதான வழக்கில் மேல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் மலையாள சினிமா நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 506 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். அதில் 298 பேர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மா அமைப்பின் 31 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் ஆவது இதுதான் முதன்முறை.

பொதுச் செயலாளராக குக்கூ பரமேஸ்வரனும், உண்ணி சிவபால் பொருளாளராகவும், லட்சுமி பிரியா துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்ஷிபா ஹசன் இணைச் செயலாளராக ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து மலையாளா சினிமா நடிகர் சங்க நிர்வாகப் பதவிகளை நடிகைகள் அலங்கரித்துள்ளனர். இன்னும் மூன்று ஆண்டுகள் இந்த நிர்வாகக் குழு பதவி வகிக்க உள்ளது.

– சிந்து ஆர்

You might also like