ஆகஸ்ட் 15: மக்கள் எதை முன்னெடுக்க வேண்டும்?

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தியின் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது வலியுறுத்தப்பட்டு அதற்கென நிதி மற்றும் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டன.

சுருக்கமாகச் சொன்னால் இந்தியா முழுக்க உள்ளாட்சி அமைப்புகள் மீண்டும் வலுப்பெற்றதைப் போல ஒரு தோற்றம் தென்பட்டது.

தங்களுக்கான அதிகாரங்களை சில உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேட்கத் துவங்கினார்கள்.

அப்படி சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடி கிராமம் என்கிற சிறு ஊராட்சியின் தலைவராக இருந்தவர் அப்போதைய மடாதிபதியான குன்றக்குடி அடிகளார்.

அப்போது அரசே மலிவுவிலை மதுவிற்பனையை நடத்தியபோது தங்கள் கிராமத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மலிவு விலை மதுக்கடையைத் திறக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அதற்காக நீதிமன்றமும் சென்று வாதாடி வென்று, தங்கள் பகுதியில் மதுவிற்பனையை ஊராட்சி அதிகாரத்தின் மூலம் தடுக்க முடியும் என்பதை நடைமுறையில் அமல்படுத்தி வழிகாட்டியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

தற்போது இதை ஏன் சொல்கிறோம்?

வரும் ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாடு முழுக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட கூட்டத்தில் தங்கள் பகுதிகளில் மது விற்பனையோ, வேறு சில போதைப்பொருட்களின் விற்பனையோ நடத்தக் கூடாது என்கிற தீர்மானத்தை ஒவ்வொரு கிராம சபையும் முன் வைப்பதற்கான அதிகாரமும் இருக்கிறது என்பதை அந்த கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் உணர்ந்து கொண்டால் போதும்.

– மணா

You might also like