தாராள மனது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை!

புரட்சித்தலைவர் பற்றி கவியரசர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ வார ஏட்டில் (27.10.1956) ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ எனத் தலைப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தார்.
 
“நடிகத் தோழர்களின் சேவை நாட்டுக்குப் பல வகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.
 
கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள், தம் கொடைத் திறனால் மக்கள் மன்றத்தில் பெரும் மதிப்பைப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம் அவருடைய உள்ளம்.
 
இல்லை என வருவார்க்கு இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம், பல ஊர்களிலும் நாடகம் நடத்தி, வசூலையும் தந்துவிட்டு, கைப் பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.
 
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் ராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும்.
 
இப்பொழுது மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்குளத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ.1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அத்துடன் அகில இந்திய பெண்கள் உணவுச் சங்கத்தின் சென்னைக் கிளைக்கு 500 ரூபாயும் தந்துள்ளார்.
 
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம்; பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும், தாராள மனது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு.
 
வந்த பணத்தை எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே திட்டமிடுவார்கள்.
 
ஒருவர் இன்னொருவரை பார்க்கும்போது செய்யும் உபதேசமே “பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா” என்பதுதான்
 
பணம் கைக்கு வந்ததும், மடிக்கு மாறிப் பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. “நாம் தொல்லை படும்போது யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வல்லண்மை!” என்ற பேச்சு புறப்படுகிறது.
 
“ஐயா பசி!” என்று அலறுபவனைப் பார்த்து, “எல்லோருக்கும் அப்படித்தான்! போ! போ!” என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது.
 
கைப்பணத்துக்கும் தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித இனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
 
கலைவாணர் என்.எஸ்.கே, நடிப்புப் புலவர் கே.ஆர்.ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர் உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். லட்சோப லட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர்.
 
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 5 படங்களும் இதுவரை பட உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன.
 
இப்பொழுது சுமார் 15 படங்களில் நடித்து வருகிறார். இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து, கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும், சுமார் 2 லட்சம் ரூபாய்கள் வரை இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர்.
 
திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் ‘மதுரை வீரன்’ 200-வது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். “எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்” என்றார்.
 
தான் நடிக்கப் போகும் கதையை முன்கூட்டியே பரிசீலித்துத் தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு.
 
ஒருவர் கலைவாணர்; மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருக்குக் கிட்டியுள்ளது.
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கிச் சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ் சுமார் 23000 பிரதிகள் விற்பனையாகிறது. அதில் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.
 
தி.மு.கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்தில் நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள். நடிகர்களில் அழகாகப் பேசக்கூடியவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம் இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்!. வாழ்க!” 
 
You might also like