ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஆட்டோ டிரைவர் மகன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறார் முகமது சிராஜ்.

இங்கிலாந்துக்கு இந்திய அணி புறப்பட்டபோது, எல்லோரும் பும்ராவைப் பற்றித்தான் பேசினார்கள்.

அதிலும் உடல்நிலை காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே தன்னால் ஆடமுடியும் என்று பும்ரா அறிவித்தபோது, மற்ற 2 போட்டிகளில் இந்தியா என்ன கதிக்கு ஆளாகுமோ என்று எல்லோரும் பயந்தார்கள்.

ஆனால், இப்போது பும்ரா இல்லாத 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது இந்தியா. அதற்கு காரணம் முகமது சிராஜ். பும்ரா இல்லாத போட்டிகளில் முழுப் பொறுப்பையும் தான் தோளில் சுமந்த முகமது சிராஜ்.

இந்தத் தொடரில் அதிகபட்சமாக 23 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்ய உதவியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முகமது சிராஜ்,

“இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்பம் முதலே ஆடுகளத்தின் குறிப்பிட்ட இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில்தான் அதிக கவனம் செலுத்தினேன்.

காலை எழுந்தபோதே, இப்போட்டியை வெல்ல என்னால் முடியும் என்ற எண்ணத்தை மனதுக்குள் விதைத்தேன். மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருந்தேன்.

முந்தைய நாள் ப்ரூக் கொடுத்த கேட்ச்சை பிடிப்பதில் தவறு செய்துவிட்டேன். அது ஆட்டத்தின் முக்கிய தருணமாக இருந்தது. அந்த கேட்ச்சை நான் பிடித்திருந்தால் இன்று நாங்கள் ஆடவேண்டிய தேவையே இருந்திருக்காது.

அதுபோன்ற நிலை இன்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று கடைசிவரை போராடினேன்.

போட்டி தொடங்கும்முன் என்னிடம் பேசிய ரவீந்திர ஜடேஜா, “உன் அப்பாவை நினைத்துப் பார். அவருக்காக இன்று செய்து முடி” என்றார். அந்த வார்த்தைகள்தான் எனக்கு உத்வேகம் அளித்தன” என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த முகமது சிராஜின் அப்பா, இப்போதும்கூட அவருக்கு ஆற்றல் அளிக்கும் நபராக இருந்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெரிய ஆளில்லை. ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர்.

தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் முகமது சிராஜ். அவரது அப்பா முகமது காஸ் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.

அவரது வருமானம் மட்டுமே குடும்பத்துக்கு போதாமல் இருந்ததால் அம்மாவும் பல்வேறு வீடுகளில் வேலை பார்த்து குடும்ப செலவுக்காக பணம் சம்பாதித்தார்.

இப்படி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த சிராஜுக்கு, மற்ற இந்திய வீரர்களைப் போல கிரிக்கெட் அகாடமிகளுக்கு சென்று பயிற்சி பெறும் வசதியெல்லாம் கிடைக்கவில்லை.

வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறிய மைதானங்களில் வெறுங்காலில் கிரிக்கெட் ஆடித்தான் சிறுவயதில் பயிற்சி பெற்றார்.

ஆரம்பத்தில் ஒரு பெரிய பேட்ஸ்மேனாக வேண்டும் என்பதுதான் சிராஜின் கனவாக இருந்தது.

ஆனால், அவரது பந்து வீசும் வேகத்தைப் பார்த்த நண்பர்கள்தான் வேகப்பந்து வீச்சாளராக பயிற்சி பெறுமாறு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில் சிராஜின் பந்து வீசும் ஆற்றலைப் பார்த்த முகமத் மஹ்பூப் அகமத் என்ற பயிற்சியாளர் அவருக்கு இலவசமாக பயிற்சி தர சம்மதித்துள்ளார்.

இதற்காக தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள உப்பல் ஸ்டேடியத்துக்கு அவர் தினந்தோறும் செல்லவேண்டி இருந்தது.

அங்கு மற்ற வீர்ர்கள் எல்லாம் காரில் வந்து பயிற்சி பெற, சிராஜ் மட்டும் தனது அப்பா செகண்ட் ஹாண்டில் வாங்கிக் கொடுத்த பழைய பிளாட்டினா பைக்கில் பயிற்சிக்கு சென்றுள்ளார்.

இந்த காலகட்டத்தைப் பற்றி சொல்லும் சிராஜ், “என் அப்பாவின் வருமானம் குறைவு என்றாலும், நான் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வருவேன் என்று அவர் நம்பினார். அதனால் தனது வருமானத்தில் இருந்து என் பயிற்சி செலவுக்காக தினமும் 60 ரூபாய் தருவார்.

அதில் 40 ரூபாய் பெட்ரோலுக்கே போய்விடும். அப்படி பெட்ரோல் போட்டாலும் அந்த பைக்கை சில அடிகளாவது தள்ளிக்கொண்டு ஓடினால்தான் ஸ்டார்ட் ஆகும்.

பல நாட்கள் காலையில் இருந்து மாலை வரை பயிற்சி இருக்கும். அப்போது சாப்பாட்டு செலவுக்கு என்னிடம் மொத்தமே 20 ரூபாய்தான் இருக்கும்.

அப்பா எனக்கு தினமும் 60 ரூபாய் கொடுத்து கிரிக்கெட் ஆட அனுப்புவது என் அம்மாவுக்கு பிடிக்காது.

என் அண்ணன் இஞ்சினீயரிங் படிக்கும்போது, நான் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக அம்மா திட்டுவார்.

ஆனால் அப்பா, அவரை சமாதானப்படுத்தி என்னை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைப்பார்” என்கிறார்.

அந்த அளவுக்கு சிராஜின் திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தார் அவரது அப்பா.

ஆனால், தன் மகன் பெரிய நாயகனாக உருவெடுப்பதை அவரால் பார்க்க முடியவில்லை.

2020-ம் ஆண்டு நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். ஆனால் அன்று தன் தந்தை தன் மீது வைத்த நம்பிக்கையை முகமது சிராஜ் இன்று காப்பாற்றிவிட்டார்.

– பி.எம். சுதிர்

You might also like