உயர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வேளையில் வெளியாகி உள்ளது ‘தடக் 2’ இந்தி படம்.
ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் சென்னையில் இருந்தேன்.
பார்ப்போம்! என புக் மை ஷோவில் தேடினேன்.
விஜயா, வி.ஆர், ஃபோனிக்ஸ், மரினா போன்ற ஒரு சில மால்களில் சில காட்சிகள் மட்டுமே இப்படம் கிடைக்கிறது. ஆகஸ்ட் 1-ல் வெளியான சன் ஆஃப் சர்தார், சாய்யாரா படங்கள் அளவுக்கு ஏனோ இந்தப் படத்துக்கு திரை கிடைக்கவில்லை.
இந்தப் படத்தைக் காண விரும்பியதற்கு காரணம் இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தின் ரீமேக்தான் – தடக் 2 .
ஒடுக்கப்பட்ட சாதிப் பின்னணியைச் சேர்ந்தவன் நீலேஷ் (சித்தாந்த் சதுர்வேதி). அமைதியான சட்டக் கல்லூரி மாணவன்.
யதார்த்தங்களால் தொடப்படாத தன்னம்பிக்கை கொண்ட ஆதிக்கசாதிப் பெண் விதி (ட்ரிப்டி டிம்ரி). இருவரும் காதலிக்கும்போது அவர்கள் வாழ்க்கை மாறுகிறது.
இந்தியாவில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய தப்பெண்ணங்கள், வன்முறைகள், இவற்றை ஆராய்கிற ஒரு சக்திவாய்ந்த கதை தடக் 2. காதலையும் சமத்துவமின்மையையும் பின்னணியாகக் கொண்ட படம்.
ஜாக் அண்ட் ஜோன்ஸ் பேண்ட் போட்டால், லீவி டி ஷர்ட் அணிந்தால், டெவில்ஸ் பெர்ரி பெர்ஃப்யூம் போட்டால், நைக் ஷு அணிந்தால் அழகான பெண் காதலிப்பாள் என்கிற விளம்பரங்களுக்கும் வர்ணாசிரம (அ)தர்மத்துக்கும் இடைவெளி இருக்கிறதா? இல்லையா?
இந்தியாவில் இரண்டு ராஜபுத்திரர்கள் காதலிக்கலாம். இரண்டு ஜாட்டுகள் காதலிக்கலாம். இரண்டு கபூர்கள் காதலிக்கலாம். இரண்டு தேஷ்முக் காதலிக்கலாம்.
இரண்டு வக்கீல்கள், இரண்டு போலீஸ்காரர்கள், இரண்டு மருத்துவர்கள் காதலிக்க முடியுமா? காதல் இணைகளில் ஒருவர் தலித்தாக இருந்தால்? ஒருவனை அறிவாளி எனில் மதிக்கலாம். ஒருவனை அறமுடையுடையவன் எனில் மதிக்கலாம். ஒருவனை உழைப்பால் உயர்ந்தவன் எனில் மதிக்கலாம்.
ஆனால் இந்தியாவில் கல்வி, பொருளாதாரம் தாண்டி ஒரு சமூகமதிப்பு இருக்கிறது. அது சாதியால் கிடைத்த மதிப்பு. இந்த மதிப்பு பிறப்பால் உருவானது. தலித்துகளைத் தவிர்த்த பிறசாதிகளுக்கு இந்த போலி மதிப்பை தம் மண்டையிலிருந்து இறக்கி வைக்க மனமில்லை.
ஆனாலும் இப்படிப்பட்ட வெற்றுப் பெருமிதங்களின் துணையோடு மாறிவரும் உலகில், மதிப்போடு வாழ முடியாது என்கிற திகிலை ஊட்டக்கூடிய படமே தடக் 2.
நூற்றாண்டு காலமாட குரலற்றவர்களாயிருந்தோரின் கதையைப் பேசும் படம்.
இது இந்தியாவின் நாயகர்கள் யார்? வில்லன்கள் யார்? எனப் பேசுகிற படைப்பு. காலம் காலமாய் நீதி மறுக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளான மாந்தரின் வலியை, அவமானத்தின் சுமையை, அவரது கண்ணீரின் தகிப்பை, இந்நிலத்தில் கொட்டிய அவரது குருதி வெப்பத்தை சிந்திக்கத் தூண்டுகிற படம்.
கல்விப்புலங்களில், கலைக்கூடங்களில், பொது வாகனங்களில் உள்ளங்கையளவும் இடமில்லாமல், மனித உயிருக்குள் எங்கோ உறைந்திருக்கும் சிறு தீப்பொறியை ஊதிப்பெருக்கி, எரிந்த தம் குடிசைகளிலும், வாழ்விலும், நெருப்பெடுத்து, இனியும் எங்களை எரிக்கமுடியாது.
இந்தியா என்பது எங்கள் தேசம் மட்டுமில்லை. எங்கள் தேகம். நாங்கள் எரிந்து நாடுமட்டும் உயிர்ப் பிழைத்திருக்க முடியாது எனும் எச்சரிக்கையை உரக்கக் கூவுகிற படம்.
நீங்கள் நீங்களாக இருக்கும்வரை நாங்கள் நாய்களாகத்தான் இருக்கமுடியும்! ஏதோ ஒரு பெண்ணின் தந்தையை நோக்கி சொல்கிற சினிமா வசனமில்லை இது. சாதி மதிப்பீடுகளைத் தாங்கி உழல்கிற ஒவ்வொரு இந்தியனை நோக்கி கேட்கிற அழுத்தமான கேள்வி!
சாதி என்பது பாதியில் வந்தது. காதல் என்பது ஆதியில் இருந்தது. சாதியென்பது அதிகாரம் செலுத்த உடலுக்கு வெளியே மனிதன் கண்டுபிடித்தது. காதலென்பதோ விடுதலையை அனுபவிக்க உடலுக்குள்ளேயே ஹார்மோன்கள் கண்டுபிடித்தது.
காதல் கொண்ட மனம் சாதியை சுமையெனக் கருதி உதிர்க்கிறது. சாதியைச் சுமக்கும் மனமோ போலி கௌரவத்துக்கு பிள்ளைகளும் பாரமெனக் கருதி பலி கொடுக்கிறது.
சாதி அடிப்படையிலான பாகுபாடு, அநீதி, எல்லைகட்கு அப்பாற்பட்ட அன்பின் விலை எனத் தீவிரத்தோடும் லட்சிய விழைவோடும்.
ஷாஜியா இக்பால் இயக்கி உள்ள இப்படம் சரியான நேரத்தில் வந்திருக்கிறது. தடக் 2 படமாக இருந்தால் முடிந்திருக்கும். ஆனால் இது பெரும் பகுதி இந்தியரின் வாழ்வு. ஊருக்கும் சேரிக்குமான முரண்.
இதை விழுங்கிச் செறிக்க முடியாது. துப்பி தப்பிக்கவும் முடியாது.
- கவிஞர் கரிகாலன்
#மாரிசெல்வராஜ் #PariyerumPerumal #பரியேறும்பெருமாள்
#MariSelvaraj #Dhadak2 #TriptiiDimri #SiddhantChaturvedi
#சாதி #Sathi #AntiCasteCinema #CasteDiscrimination
#TamilCinema #SocialJusticeCinema #DalitVoices
#IndianCinema #PariyerumPerumalImpact #Kollywood
#Bollywood #Dhadak2Discussion #MariSelvarajFilms