இது பிளாஸ்டிக் யுகம். சந்தைகள், பூங்காக்கள், சாலையோரங்கள், மலைகள், குளங்கள், ஆறுகள், கடல் என்று எல்லா இடங்களும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சுழலை அழித்தது போதாதென்று இப்போது மனிதர்களையும் அழிக்கத் தொடங்கியிருக்கிறது பிளாஸ்டிக். இதுதொடர்பான பல்வேறு செய்திகள் இந்த வாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் முதலில் வந்த அதிர்ச்சி செய்தி, கார்கள், வீடுகள் என்று மனிதர்கள் அதிகம் புழங்கும் இடங்களில் மைக்ரோ பிளாஸ்டிக் என்ற நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன என்பதுதான்.
பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. நாடியா யகோவென்கோ (Nadiia Yakovenko) என்ற ஆய்வாளர் தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
plos one என்ற அறிவியல் ஆராய்ச்சிகளை வெளியிடும் இணையதளம் இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விஷயங்களை வெளியிட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் கார்களின் ஒவ்வொரு கியூபிக் மீட்டர் பரப்பளவிலும் சுமார் 2 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

எனக்குத்தான் காரே இல்லையே. என்னை எப்படி மைக்ரோ பிளாஸ்டிக் பாதிக்கும் என்று கேட்கிறீர்களா?…
கார் இல்லாவிட்டாலும், உங்களுக்கென்று ஒரு வீடு இருக்கும் அல்லவா? அந்த வீடுகளிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வீடுகளைப் பொறுத்தவரை ஒரு சதுர கியூபிக் மீட்டர் பரப்பளவில் 528 நுண்ணிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக 16 வெவ்வேறு இடங்களில் உள்ள கார்கள், வீடுகளை அவர்கள் சோதனையிட்டுள்ளனர்.
கார்களிலும், வீடுகளிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது மனிதர்களுக்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்.
பொதுவாக வெளியில் சுற்றுச்சூழல் சரியில்லாவிட்டால் நாம் கதவை மூடி வீட்டுக்குள் ஓய்வெடுப்போம்.
பயணம் செய்யும்போது தூசி படாமல் இருக்க கார்களின் கண்ணாடிகளை ஏற்றிவிடுவோம். இனி அப்படி செய்தாலும் சுற்றுச்சூழல் சீர்கேடால் நாம் பாதிப்பதை தடுக்க முடியாது.
வீடு மற்றும் கார்களில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நம் மூக்கின் வழியாக உடலுக்குள் பரவும் என்று இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இப்படி பொதுவெளி மற்றும் வீடு, கார் ஆகியவற்றில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கை நுகர்வதால், மனிதர்களின் உடலுக்குள் நாளொன்றுக்கு 68 ஆயிரம் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

செயற்கை நிறங்கள், பிளாஸ்டிக்கை பதப்படுத்தும் ரசாயனங்கள் ஆகியவை அந்த மைக்ரோபிளாடிக்கில் இருப்பதால், இது எதிர்காலத்தில் மனித இனத்துக்கே கேடு செய்வதாக அமையும் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் வீட்டையும், காரையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
இந்த ஆய்வறிக்கை வெளியான அடுத்த நாளே மற்றொரு அதிர்ச்சிகரமான அறிவியல் ஆய்வறிக்கையும் வெளிவந்துள்ளது. மனிதர்களின் மூளைக்குள்ளும் பிளாஸ்டிக் நுந்துகள்கள் ஊடுருவி உள்ளன என்பதே அந்த ஆய்வு சொல்லும் செய்தி.
Nature Medicine என்ற மருத்துவ ஆய்விதழ் இதைத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ நகரில் கடந்த ஆண்டு இறந்த 24 பேரின் மூளையில் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் மூளைக்குள் பிள்காஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் அதனால் மனிதர்களுக்கு ஏதாவது ஆபத்தா என்பது பற்றி நின்னும் தெளிவாக தெரியவில்லை.
பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில் நாம் இனியாவது எச்சரிக்கையுடன் இருப்போம்.
– பி.எம். சுதிர்