தமிழகத்தை அதிர வைத்த கவின் மரணம்!

கடந்த வாரம் ஆணவக் கொலையால் படுகொலை செய்யப்பட்ட கவின் என்கின்ற இளைஞரின் உடல் நேற்றுதான் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட இடைவெளிக்குக் காரணம், கவினின் பெற்றோர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கை.

இவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு முக்கியக் காரணம், உயிரிழந்த கவினை கொலை செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவருமே காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.

சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட பிறகும் பிரச்சனை நின்ற பாடாக இல்லை. பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சி துவங்கி, தொல்.திருமாவளவன், சீமான் என்று பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கவினின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

ஊடகங்கள் பெருமளவில் கவினின் உயிரிழப்பு குறித்து கவனப்படுத்தி இருந்தன. இது தொடர்பாக விவாதங்களும் நடந்தன.

தற்போதைய நிலையில் நமக்கு எழும் முக்கியமான கேள்வி, கவின் மீது நிகழ்த்தப்பட்ட ஆணவக் கொலையை இதற்கு முன்பு செய்து வந்தவர்கள் குறிப்பிட்ட மேல் சாதிக்காரர்கள்.

அவர்களுக்கு வேறு சில பின்புலங்கள் இல்லை, ஆனால் தற்போதைய கவினின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற பெற்றோர்கள் இருவரும் வேறொரு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் காவல்துறையிலும் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் என்பதுதான் முக்கியம்.

சட்டம், ஒழுங்கை ஜாதி, மத பேதமற்ற நிலையில் கையாள வேண்டிய காவல்துறை அதிகாரிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய வன்மமான நிகழ்வை நிகழ்த்தியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே இதில் ஈடுபட்டிருப்பதால், யார் இந்த வழக்கை எந்த சார்புகளற்ற நிலையில், நியாயமாக விசாரிப்பார்கள் என்கின்ற கேள்வியையும் பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பொதுவெளியில் எழுப்பி வருகிறார்கள்.

இந்தக் கேள்வியிலேயும் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனென்றால், தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு முக்கியமான லாக்கப் கொலைகளிலிருந்து ஆணவக் கொலைகள் வரை அந்த நிகழ்வுகளுக்கான உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படுவது அபூர்வமாகவே நடந்திருக்கிறது.

அந்த நிகழ்வுகளில் வெளிப்படையாக தெரியும் ஒரு விஷயம் – கால தாமதம். அதுவும் அளவு கடந்த கால தாமதம்.

அளவு கடந்த தாமதத்தின் மூலமாக இத்தகைய ஒரு கொடுஞ்செயல் நிகழ்ந்தவுடன் சமூகத்தில் அது ஏற்படுத்துகிற அதிர்வுகளை மறக்கடிக்கவே இத்தகைய காலதாமதங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

கவின் குறித்த இந்த வழக்கிலும் அத்தகைய காலதாமதம் நிகழ்த்தப்படாமல், காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையிலும் அவர்கள் மீது எந்தவிதமான பேதமற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

வழக்கம்போல காவல்துறை இந்த வழக்கு விசாரணையை வேறு திசையில் கொண்டுபோக இருந்த நிலையில், கவின் காதலித்ததாக சொல்லப்பட்டப் பெண் வெளிப்படையாக காட்சி பூர்வமாக கொடுத்த வாக்குமூலம், முக்கியமான சாட்சியமாக அமைந்து இந்த வழக்கிற்கு வலு சேர்த்திருக்கிறது.

சாதி, மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிற அதே சமூகத்தில்தான் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்த வரன்களைத் தேர்ந்தெடுங்கள் என்கிற விளம்பரங்களை தற்போது தொலைக்காட்சிகளில் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

சாதிச் சங்கங்களின் குரல்கள் முன்பிருந்ததைவிட தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னும் உயர வாய்ப்பிருக்கின்றன. இப்படிப்பட்ட முரணான சூழ்நிலையில் ஒரு சாதியை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்டிருக்கிற இத்தகைய வன்மமான கொலை இனிமேல் நிகழாமல் தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் உடனடியாகக் கவனிக்க வேண்டிய தேவைகளில் ஒன்றாக மாறட்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை நடவடிக்கை தீவிரமாக எடுத்தால் குறிப்பிட்ட சமூகத்தினர் நமக்கு எதிரான மனோபாவத்திற்கு செல்வார்களோ என்கின்ற சந்தேகம் இல்லாத நிலைக்கு முதலில் மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

– யூகி

You might also like