தன்னிடம் இருந்து ஒரு செல்போனைக் கொண்டு யூடியூப் சேனல் தொடங்கி உலகப் புகழ்பெற்றுள்ளார் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கெளசல்யா. அவரது சேனலுக்கு 1.6 மில்லியன் பார்வையாளர்கள். அவர் நடத்தும் சமையல் தொடர்பான சேனலின் பெயர் Sidhi Marwadi.
இதன் மூலம் அவர் 35 க்கும் அதிகமான பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ரைட் ஆங்கிள், லைட்டிங், ஆடியோ எந்த வசதியும் இல்லை. சின்ன செல்போன். அவ்வளவுதான். தன் சமையலின் ருசியால் உலகையே கட்டிப்போட்டுவிட்டார்.
ராஜஸ்தான் மாநிலம், குரி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான கெளசல்யா செளத்ரிதான் அந்த பெண்மணி.
சமையலில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், தன்னிடமிருந்த சாதாரண செல்போனில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு எடிட்டிங் கற்றுக்கொண்டார். முதலில் ஒரு வீடியோவை அப்லோடு செய்தார்.
பின்னர் நடந்தது எல்லாம் உலக சாதனை. இன்று அவர் ‘Sidhi Marwari’ என்ற உணவு தானியங்களை விற்பனை செய்யும் பிராண்ட்டை உருவாக்கியுள்ளார். அவரது தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்றுசேர்கின்றன. இது அவரது கனவு.
“என் சிறுவயதில் முதலில் பசுக்களை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று மேய்த்துவிட்டுத்தான் பள்ளிக்கே செல்லக்கூடிய நிலை” என்று பால்யத்தை நினைவுகூர்கிறார் கெளசல்யா.
வயல் வேலைகள் முடிந்த அம்மா களைப்புடன் வீட்டுக்கு வரும்போது சமைக்கத் தொடங்கினார். அதுதான் இன்று அவரது உயர்வாக மாறியிருக்கிறது.
டாக்டராக விரும்பிய அவர், ஒருகட்டத்தில் எதற்கு அவ்வளவு படிக்கவேண்டும் என்று நினைத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

“நான் வேலைக்குச் சென்றுவிட்டால், வீட்டுக்கு வரும் விருந்தினர்களை யார் கவனிப்பார் என்று என் மாமியார் நினைத்தார்” என்கிறார் கெளசல்யா.
இந்த வீட்டின் நான்கு சுவர்களுக்குள் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தவருக்கு கைகொடுத்ததும் யூடியூப்.
ஒரு செய்தியின் வழியாக யூடியூப் பற்றி அறிந்துகொண்ட கெளசல்யா, தன் கணவர் வீரேந்திரகுமாரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார்.
முதலில் அவருக்குக் கிடைத்தது ஒரு பட்டன் போன். அடுத்து அவரே பணம் சேமித்து 7500 ரூபாய்க்கு சாம்சங்க் போனை வாங்கியுள்ளார்.
தன் சமையல் வீடியோக்களை 2017 ஆம் ஆண்டு முதல் எடுக்கத் தொடங்கிவிட்டார். தொடக்கத்தில் எந்த தொழில்நுட்ப வசதிகளும் இல்லை. நெட்வொர்க் இல்லாமல், வீட்டின் மேல பல மணி நேரம் அமர்ந்து அப்லோடு செய்த அனுபவம் உண்டு.
யூ டியூப் மூலம் அவருக்குக் கிடைத்த முதல் வருமானம் ரூ. 7500. எதற்கு இந்த வேண்டாத வேலை என்று குடும்பத்தினர் தடை போட்டிருக்கிறார்கள். ஆனால், கணவர் பெரும் ஆதரவாக இருந்துள்ளார்.
மனைவியின் வருமானத்தில் வாழ்வதாக அக்கம்பக்கத்தினர் பேசியிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அவருடைய வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை அடைந்திருக்கின்றன. இன்று கெளசல்யாவின் பத்து நாள் வருமானம் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகம். இந்த புகழ்வெளிச்சம் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
மாஸ்டர் செஃப் என்ற டிவி நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஜோத்பூர், டெல்லி மற்றும் மும்பையில் நடந்த நிகழ்வுகளில் ராஜஸ்தானில் இருந்து இவர் மட்டுமே தேர்வானார்.

இன்று இவரது தயாரிப்பான கடலை எண்ணெய்க்கு உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அடிமையாக இருக்கிறார்கள்.
கெளசல்யாவின் எண்ணெய் உற்பத்தி ஆலை கிராமத்தில் இருக்கிறது. அதில் 35 கிராமப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
அவர்கள் அனைவரையும் சுயதொழில் செய்யும் தொழில்முனைவோராக மாற்றவேண்டும் என்பதே அவரது கனவாக இருக்கிறது.
நன்றி: திபெட்டர்இந்தியா