சாகித்ய அகாதெமி விருது: கல்யாண்ஜிக்கா, வண்ணதாசனுக்கா?

அப்பாவுக்கும் மகனுக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைப்பது என்பது அரிது.

தி.க.சிவசங்கரனுக்கு 2000 – த்திலும், வண்ணதாசனுக்கு  2016-லும்  சாகித்ய அகாதெமி விருது அளிக்கப்பட்டது.

தி.க.சி. விமர்சகர் என்றால், கல்யாணி என்கிற, கல்யாணசுந்தரம் என்கிற, கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் ஒரு புனைவு இலக்கியவாதி.

எனக்கு எப்போதுமே ஓர் ஐயப்பாடு வரும். வண்ணதாசன் என்கிற எழுத்தாளர், கல்யாண்ஜி என்கிற கவிஞர் இவர்கள் இருவரில் யார் சிறந்த படைப்பாளி என்று.

நாணயத்தின் எந்தப் பக்கத்திற்கு மதிப்பு என்று எப்படி முடிவெடுக்க முடியும் என்கிற சமாதானத்தோடு அந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவேன்.

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுத் தந்திருக்கும் ‘ஒரு சிறு இசை’ என்கிற சிறுகதைத் தொகுப்பு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான்.

இதுவரை வெளிவந்திருக்கும் வண்ணதாசனின் ஒரு டஜன் சிறுகதைத் தொகுப்புகளில் எதற்கு வேண்டுமானாலும் சாகித்ய அகாதெமி கொடுக்கலாம். இதற்குக் கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவே.

வண்ணதாசனின் எழுத்துகள் என்னைக் கவர்ந்ததற்கு முதல் காரணம் அதில் இருக்கும் மண்ணின் மணம்.

தாமிரபரணித் தண்ணீரின் ஜிலுஜிலுப்பும், சலசலப்பும், சுவையும் வண்ணதாசனின் எழுத்திலும் காணப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தாமிரபரணித் தண்ணீர் குடித்து வளர்ந்த எழுத்தாளன் என்பதன் அடையாளம் அது.

இன்னொரு காரணமும் உண்டு. என் போன்றவர்களுக்குப் பின் நவீனத்துவம் புரிவதில்லை. பழைமையும் இல்லாமல், பின் நவீனத்துவமும் இல்லாமல் நவீன இலக்கியம் படைக்கும் கு.ப.ரா., தி.ஜானகிராமன், லா.ச.ரா., வரிசையில் ஒரு தனி பாணி எழுத்து நடையை உருவாக்கிக் கொண்டிருப்பவர் வண்ணதாசன்.

அவருடைய கதைகள் படித்தால் புரியும். மனதை நெருடும். புத்தகத்தை மூடி வைத்த பின்னும் அதன் தாக்கம் தொடரும். இதுதான் நல்ல சிறுகதை எழுத்துக்கு அடையாளம் என்று நான் கருதுகிறேன். அதனால் எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும்.

சரி, பழைய பிரச்னைக்கே வருவோம். வண்ணதாசனா, கல்யாண்ஜியா? ஒருவருக்கே இரண்டு முறை சாகித்ய விருது வழங்க முடியுமா? முடியுமானால், சாகித்ய அகாதெமி கல்யாண்ஜி என்கிற கவிஞனுக்கும் விருதளித்துப் பெருமைப்படுத்த வேண்டும்.

வண்ணதாசன் என்கிற எழுத்தாளனுக்கு நிகரான தகுதி கல்யாண்ஜி என்கிற கவிஞனுக்கும் உண்டுதானே?

– கலா ரசிகன்

நன்றி: தினமணி

You might also like