சில நாட்களுக்கு முன்பு அச்சரப்பாக்கம் புக் புக் புத்தகக் கடை திறப்பு விழாவுக்குச் சென்றபோது நண்பர் இளம்பரிதியின் வழியாக அறிமுகமானவர் மதிப்பிற்குரிய உதயகுமார். பேப்ரிகேஷன் தொழிலில் வென்ற ஜேவி இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர். நல்ல வாசகர்.
சிறு எழுத்துப் பணிக்காக அவரது சொந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு. அன்று காலை 10 மணிக்கு போரூர் டோல்கேட்டில் காத்திருந்தேன்.
மித வேகத்தில் சென்றது கார். கோடையைவிட அதிக வெயில். இரண்டு மணி நேர இடைவெளியில் மதுராந்தகம் அருகே டீ குடிப்பதற்காக நின்றோம். சுவையான மெதுவடை ஆறிப்போயிருந்தது.

சில நிமிட இளைப்பாறல். விரைவுப் பேருந்துகளும் கனரகா வாகனங்களுமாக நிறைந்திருந்தது சாலை.
“எங்கத்தாம்பா போறாங்க…” என்று நாம் பேசிக்கொண்டே ஏதோவோர் ஊருக்குச் சென்றுகொண்டே இருக்கிறோம்.
மக்கள் பயணத்திற்கு ஆயிரமாயிரம் காரணங்கள். அவரவர் வேலை அவரவர் இலக்கு.
திண்டிவனம் அருகே சிப்காட். ஒரு தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணி. அங்கு நடக்கும் வேலைகள் பற்றி பணியாளர்களிடம் பேசினார் உதயகுமார்.
நாலா பக்கமும் தொழிற்சாலைகளுக்கான நிலங்கள். கடல்போல விரிந்து கிடக்கிறது.
மொட்ட வெயிலில் நம்மூர் மற்றும் வடமாநில இளைஞர்கள் உழைக்கிறார்கள்.
சென்னை டு திருவண்ணாமலை சாலையில் ஒரு புதிய சாலையோர உணவகம். எளிமையான மதிய சாப்பாடு. செஞ்சியில் பிரியும் ஆற்காடு சாலையில் சென்றோம்.
தென்னை, வாழை, நெல், மஞ்சள், பூக்கள் என விவசாயம் செழித்துக்கிடந்தது. கூடவே இளையராஜா பாடல்களும். அங்கங்கே கடைகளில் அழகாக அடுக்கிவைக்கப்பட்ட மாம்பழங்கள்.

தொழிலுக்காக உழைக்கும் நேரம் போக சிறந்த படங்களைப் பார்க்கும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் உதயகுமார். பிடித்த புத்தகங்கள் படிக்கிறார்.
பிடித்த சொற்பொழிவுகள் கேட்கிறார். அந்த அனுபவங்களை ஆர்வம்பொங்க பேசிக்கொண்டே வந்தார். அவர் என்னிடம் பகிர்ந்த உலகப் படங்களை இனிமேல்தான் பார்க்கவேண்டும்.
தூரங்கள் கடந்ததே தெரியவில்லை. மாலை வந்திருந்தது. மலைகளை நோக்கிச் செல்வதுபோன்ற அழகான நெடுஞ்சாலை.
போக்குவரத்து நெரிசல் இல்லை. எப்போதாவது ஒரு கார் கடந்து செல்லும்.
ஆரணியை தாண்டி கண்ணமங்களம் வழியாக நாங்கள் அடைந்தது இலட்சுமிபுரம். கத்தாழம்பட்டு அருகே உள்ள கிராமம்.
வடக்கே பெரிய மலைக்குன்று. அதுவே ஊருக்குப் பேரழகை அள்ளித்தருகிறது. ஊரையே மலையில் கட்டிப்போட்டு இருப்பதுபோல இருக்கிறது.
சிவப்புக்கொண்டை பூக்கள், மஞ்சள், வாழை, நெல் பயிரிடுகிறார்கள். வயலைச் சுற்றியும் வாழைத்தோப்புகளுக்கு நடுவிலும் நவீன வீடுகள். வயல் வரப்புகள்தான் வீடுகளுக்குச் செல்லும் சாலை.
வீட்டுக்குப் போகும் வழியில் எட்டிப்பார்த்தாலே மயக்கம் வரும் அளவுக்கு ஆழமான பெரிய கிணறு.
அதுதான் விவசாய நிலங்களுக்கான அமுதசுரபி. ஊருக்குச் செல்லும் சாலையே இயற்கையின் பாதைதான்.
மரங்கள், வயல்வெளிகளைக் கடந்து தூரத்தில் பார்த்தால் சிரிக்கும் மலை. போகிற வழியில் சொந்தக்காரர் பண்ணையில் ஒரு நாட்டுக்கோழி வாங்கினார் உதயகுமார்.

மாலைக்குள் அவரது பூர்வீக வீட்டுக்குச் சென்றுவிட்டோம்.
தந்தையும் தாயும் “வாங்கய்யா…” என்று முகம் மலர அன்போடு வரவேற்றார்கள்.
பழகிய நெருக்கத்தில் உள்ளூர் நண்பர்கள் உதயகுமாருடன் கிண்டலாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
நெடுந்தூரப் பயணக் களைப்பு. அரை மணி நேரத்திற்குப் பிறகு கண்ணியம்பாடி வரை சென்றுவந்தோம். அதுவொரு சிறு நகரம். நல்ல டீ குடித்தோம்.
வீட்டிற்கு வந்து தூக்கம் வரும் வரையில் பேசிக்கொண்டிருந்தோம். காற்று குளிர்ந்திருந்தது. அசலான கிராமத்துச் சுவையில் நாட்டுக்கோழி சாப்பாடு.
இப்படி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. இதுவரை நான் வந்திராத ஒரு கிராமத்தின் புத்தம் புதிய நினைவுகளுடன் மறுநாள் மதியம் சென்னை வந்தடைந்தேன்.
மனசுக்கு ஆறுதல் தந்த இலட்சுமிபுரத்திற்கு நன்றி.
– சுந்தரபுத்தன்