மதில்கள்: மனதை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரம்!

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம்.

பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன்.

மதில்கள் நூலில் இடம்பெற்ற ஒரு தொகுப்பு.

 

அரசுக்கு எதிராக எழுதியதால் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறார் பஷீர், சிறையில் இரண்டு பகுதிகளைப் பிரிப்பதற்காக பெரிய மதில்சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு அந்தப்புறம் பெண்கள் சிறை. இந்தப்புறம் ஆண்கள் சிறை,

பஷீர் சுவற்றுக்கு அந்தப்புறம் இருக்கும் ஒரு பெண்ணோடு பேசுகிறார். நாளுக்கு சொற்ப நேரம் என சொற்களாலேயே பழகுகிறார்கள்.

வறண்ட இடத்தில் கிடைத்த குளிர்காற்றென இருவருக்குள்ளும் மிகச் சுலபமாக ஓர் அன்பு உண்டாகி விடுகிறது, உருவம் தெரியாது உன் வயது தெரியாது.

வெறும் குரல் மட்டுமே தெரியும். கிடைத்ததைப் பற்றிக்கொண்டு படரும் கொடி போல இந்தக்காதல் வளர்கிறது. உன்னைச் சந்தித்து உடலெல்லாம் முத்தமிட்டு மயங்கிக் கிடக்க ஆசையென காதல் அதன் தீவிரத்தை அடைகிறது.

எதற்குமே நிச்சயமற்ற சிறைக்குள் உன்னை மட்டுமே காதலிப்பேன் என்று தரும் வாக்குறுதிகள் மனத்தை அளவுக்கதிகமாகவே இளகிப் போகச் செய்யும்,

நான் இறந்து விட்டால் நீங்கள் என்னை நினைத்துக் கொள்வீர்களா?

பஷீர் : நிச்சயம் நினைத்துக் கொள்வேன்

நாராயணி: அதெப்படி முடியும் என்னை உங்களுக்குத் தெரியாது, என் முகம் எப்படி இருக்குமென்று தெரியாது, நீங்கள் என்னைத் தொட்டதே இல்லை, நான் எப்படி உங்கள் நினைவில் நிற்பேன்.

இல்லை என்னால் முடியும், நான் உன்னை நினைத்துக் கொள்வேன் என்று சொல்லி இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்கள், ஆண் பெண் சிறைக்கு பொதுவான மருத்துவமனை என்பதால் நாம் இருவரும் குறிப்பிட்ட நாளில் மருத்துவமனை செல்வோம் அங்கு வைத்து நாம் சந்திக்கலாம் எனத் திட்டம்,

என்னை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? என்னோடு வேறு சில பெண்களும் வருவார்கள்

என் நாராயணீயை எனக்குப் பார்த்ததும் தெரிந்துவிடும், என்பார் பஷீர்,

நிச்சயம் அது ஒரு அதீத தன்னம்பிக்கை அல்லது கவிதைப்பேச்சு. அங்கு நாராயணீ சொல்லுவாள், என்னைச் சந்தித்தால் என் கன்னத்தில் இருக்கும் மச்சத்திற்கு முத்தம் கொடுப்பீர்களா?

தன்னைப் பற்றிய அடையாளங்களைச் சொல்லி தவறியும் இன்னொரு பெண்ணை நான்தானென நினைத்து விடாதே எனும் நூதனக் குறிப்பு. அழகாக இருந்தது அந்த இடம்.

நாற்பத்தியைந்து பக்கமே கொண்ட குறுநாவல். அதே பெயரில் மலையாளத்தில் மம்முட்டி நடிக்க திரைப்படமாகவும் வெளிவந்தது.

***********

நூல்: மதில்கள்
ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: சுகுமாறன்
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 72
விலை: ரூ.100/-

You might also like