அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக, மனித மாண்புடன் வாழ நிலம்தான் அடிப்படை உரிமை.
ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.
இன்றைய அரசுக்கள் நிலமற்ற மக்களுக்கு நிலவினியோகம் செய்வதற்கு பதில், மக்கள் கையில் இருக்கும் நிலங்களையும் கையகப்படுத்தி பெரும் காப்பரேட் நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் கொடுப்பது அதிகரித்து வருகின்றது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே நில மீட்புக்கான போராட்டங்கள் நடந்தன.
விடுதலைக்குப் பிறகு நிலச் சீர்திருத்தம் என்கிற பெயரில் சட்டபூர்வ நில உச்சவரம்புச் சட்டத்தை கொண்டுவந்து சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், இன்று ஆளக்கூடியவர்கள் அதை நீர்த்துப் போகச் செய்யும் வேலையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
2001 இல் 21 கோடி விவசாயிகள் நில உரிமையாளர்களாக இருந்தனர்.
2011 இல் 11.8 கோடியாகக் குறைந்து 86 லட்சம் விவசாயிகள் நிலமற்றவர்களாக மாறியுள்ளனர்.
விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது.
ஏறத்தாழ 10.6 கோடி பேர் நிலமற்ற கூலித் தொழிலாளர்களாக இருந்த அந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 14.4 கோடியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் 7 சதவீதக் குடும்பங்களிடம் 50 சதவீத நிலம் குவிந்திருக்கிறது. நாடு முழுவதும் நிலப்பறிப்பு என்பது தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கேரளா மாநிலத்தில் C.K. ஜானு என்ற ஆதிவாசி பெண் தலைமையில் கடுமையான தொடர் போராட்டத்தின் விளைவாக 35 ஆயிரம் ஆதிவாசிக் குடும்பங்கள் விவசாய நிலங்களைப் பெற்றுள்ளனர்.
C.K. ஜானுவை, கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் காட்டிக்குளம் அருகில் ‘பணவயல்’ என்கிற இடத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து எடுத்த நேர்காணல் இது.
*தாங்கள் எப்படி இந்தப் போராட்டப் பாதையைத் தெரிவு செய்தீர்கள்?
கேரளாவில் மட்டும் 37 ஆதிவாசி இனங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 84 ஆயிரத்து 839 ஆதிவாசிகள் வாழ்கிறோம்.
அடர்ந்த காடுகளும், வளமான நிலங்களும் எங்களின் வாழ்வாதாரமாகவும் பாரம்பரிய உரிமையாகவும் இருந்தது.
இதிலிருந்து ஆதிக்கவாதிகளால் அந்நியமயமாக்கப்பட்டோம். கடைசியில் கால் நீட்டி உட்காருவதற்கு கூட நிலம் இல்லாமல் போய்விட்டது.
ஒரு குடிசைக்குள் பல குடும்பங்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
வெற்றிலை போட்டு கூட துப்ப முடியாத நிலை ஏற்பட்டது. ஆதிவாசி குடும்பங்களுக்குள் பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. கூலி வேலை மட்டும் தான் கிடைத்தது.
அதிலும் குறைந்த கூலி, கடுமையான வேலைச் சுமை. நிலம் மற்றும் குடியிருக்க வீடு இல்லாததால் பெரும் சிரமப்பட்டோம்.
இந்த சூழ்நிலையில் எங்கள் உரிமைகளுக்காக சில இயக்க தலைவர்கள் போராடி வந்தனர். அதில் கலந்துகொண்ட எனக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற பிடிப்பு ஏற்பட்டது.
*எந்த ஆண்டிலிருந்து நீங்கள் போராட்டக் களத்தில் இருக்கிறீர்கள்?
1986 ஆம் ஆண்டு முதல் போராட்டக் களத்தில் இருக்கிறேன். 1992 இல் சுல்தான் பத்தேரியில் தென்னிந்தியாவில் பல அமைப்புகளை ஒருங்கிணைத்து சங்கமம் என்ற பெயரில் ஒரு வார காலம் மாநாட்டை நடத்தினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.
வனக் கொள்ளையர்கள் சிலர் எங்கள் மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்து எங்களை அச்சிறுத்தினர். ஆனால், நாங்கள் அஞ்சவில்லை, போராட்டம் வேகம் எடுத்தது.
இதைத்தொடர்ந்து “ஆதிவாசிகள் கோத்தர மகா சபா” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு கேரளா முழுவதும் உள்ள ஆதிவாசிகளை ஒருங்கிணைத்தோம்.
*கேரளாவில் நிலத்துக்கு என்று தனிச் சட்டம் உள்ளதா?
உள்ளது. 1960 ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் இல்லை.
1960 கேரளச் சட்டம் கூறுவது என்னவென்றால் 15 ஏக்கருக்குள் மட்டும்தான் ஒரு குடும்பம் நிலம் வைத்துக்கொள்ள முடியும்.
அதற்கு மேல் உள்ள நிலங்களை வருவாய் நிலமாக மாற்றி அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்த நிலங்கள் நிலமற்ற மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் ஆதிவாசிகள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தையும், எந்த ஆவணங்களும் இல்லை என்ற காரணத்தைக் கூறி எங்கள் நிலங்களையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. எங்களிடமும் ஆவணங்கள் இல்லாததால் உரிமை கொண்டாட முடியவில்லை.
*அப்படி என்றால் அரசாங்கம் தங்களுக்கு நிலம் கொடுக்கவில்லையா?
கொடுத்தார்கள். குடிசை அமைத்துக்கொள்ள வெறும் 5 சென்ட் மட்டும் கொடுத்தார்கள். இந்த 5 சென்ட் நிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இந்த நிலமும் தானமாகக் கொடுக்கிறோம் என்றது அரசு.
ஒரு குடும்பத்தில் நான்கைந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்த ஐந்து சென்ட் நிலத்தில் வாழ்வது? இதனால், பல பிரச்சனைகளை ஆதிவாசி குடும்பங்கள் சந்தித்தனர்.
ஒரு குடும்பம் வாழ வேண்டிய குடிசை வீட்டில் பல குடும்பங்கள் வாழ வேண்டிய நிலை. கழிப்பறை வசதிகள் செய்து கொள்வதற்கு கூட நிலம் போதவில்லை. சில குடும்பங்களில் உள்ளவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்துகொள்ளும் நிலைத்துத் தள்ளப்பட்டனர். இதனால், தொடர் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது.
*திருவனந்தபுரத்தில் கேரளத் தலைமைச் செயலக தொடர் முற்றுகைப் போராட்டம் பற்றி சொல்லுங்கள்.
இது 2001 ல் நடைபெற்றது. பல மாவட்டங்களில் களத்தில் போராடி அரசு எங்களை கண்டுகொள்ளவே இல்லை. வாழ வழி இல்லை. சட்டி முட்டி பாத்திரங்களோடு கேரளா தலைமைச் செயலகத்துக்கு சுமார் 3000 குடும்பங்கள் சென்றோம்.
அங்கேயே தங்கி சமைத்து, சாப்பிட்டு, இரவு உறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அங்கிருந்து எங்களை வெளியேற்ற கேரள காவல்துறையும் அரசும் முயற்சி எடுத்தது. நாங்கள் அஞ்சவில்லை.
திருவனந்தபுரத்தில் இருந்த வியாபாரிகள், ஓட்டுநர்கள் எல்லோரும் எமது போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, உதவி செய்ய ஆரம்பித்தனர்.
பல்வேறு இடங்களில் இருந்து எமக்கு ஆதரவு பெறுகியது. இந்தியா முழுவதும் பேசும் பொருட்டு செய்திகள் வந்ததோடு 148 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
A.K. ஆண்டனி தலைமையில் இருந்த கேரள காங்கிரஸ் அரசு எமது “ஆதிவாசிகள் கோத்திர சபா” உடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது.
இதில், நிலம் இல்லாத அனைத்து ஆதிவாசி குடும்பங்களுக்கும் தலா 5 ஏக்கர் நிலம் கொடுக்கிறோம் என உறுதி அளித்து ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
எமது மற்ற கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொண்டது. இதில் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.
*இதன் பிறகு முத்தங்கா போராட்டம் ஏன் நடைபெற்றது?
தலைமைச் செயலக 148 நாட்கள் போராட்டத்தின் ஒப்பந்தம் மூலம் நிலமற்ற அனைத்து ஆதிவாசி குடும்பங்களுக்கும் விவசாய நிலம் கொடுப்போம் என அறிவித்த அரசு, காலியாக இருக்கும் நிலங்களை ஒரு வருட காலத்துக்குள் கொடுக்க, கணக்கு எடுக்க தனித்துறையை ஏற்படுத்தி அதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டது.
அதன்படி ஒரு சில மாவட்டங்களில் ஆதிவாசிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால், போகப்போக இதை முழுவதுமாக நிறுத்திவிட்டார்.
இதற்கென்று உருவாக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு நிலம் கொடுப்பதை நிறுத்தியதோடு எங்களுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டது அப்போதைய அரசு.
இதன் விளைவு தான் முத்தங்கா போராட்டம். முத்தங்கா வனப்பகுதி வனவிலங்கு சரணாலயமாக அறிவிப்பதற்கு முன்பு இருந்தே எங்களது பாரம்பரிய பூமியாக இருந்தது. இதை எங்களிடம் இருந்து பறித்து எம்மை வெளியேற்றி விட்டார்கள்.
1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் எழுதி வைத்த உயிலில் முத்தங்கா நிலம் முழுவதும் அதில் பாரம்பரியமாக வாழ்ந்த காட்டு நாயக்கர், பணியர்கள் நிலம் என ஆவணப்படுத்தி இருந்தனர்.
கேரள அரசு ‘மாதா மேனன்’ கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன் நிலங்கள் பற்றி கணக்கெடுத்தது. இவர்கள் கண்டுபிடித்த நிலங்கள் 50% சதவீத நிலம் ஆதிவாசிகள் குடும்பங்களுக்கு சொந்தமானது.
இதில் சுமார் 12000 ஏக்கர் நிலம் முத்தங்காவில் உள்ளது.
இது காப்புக்காடு அல்ல (reserve forest), ஆதிவாசிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலம்.
இந்த நிலத்தை நாங்கள் கேட்டுப் போராடினோம். கேரள அரசு கொடுக்க மறுத்தது.
வனக் கொள்ளையர்களும் அவர்களுக்கு சாதகமான அரசியல் கட்சித் தலைவர்களும், ஆதிவாசிகள் – காடுகளை அழிக்கிறார்கள் என்ற பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு எமக்கு கிடைக்க வேண்டிய நிலத்தை அவர்களின் சுயநலத்துக்கு பயன்படுத்தினர்.
இதை முறியடிக்கத்தான் எங்கள் நிலத்தை திருப்பி எடுக்க முத்தங்கா உள்ளேபோய் குடிசைகளை அமைத்து விவசாயம் பண்ண தொடங்கினோம்.
*எத்தனை குடும்பங்கள் உள்ளே போனீர்கள்?
6000 குடும்பத்துடன் சென்றோம். பல மாதங்கள் முத்தங்கா வனப்பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
கேரளாவில் போராட்டம் நடத்தினால் அதிகாரிகள் களத்துக்கு வந்து கோரிக்கைகளைக் கேட்டுப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், எங்களுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
கைது செய்வோம் என மிரட்டினர். ஆனாலும் துணிவுடன் போராட்டத்தைத் தொடர்ந்தோம்.
*எப்படி அது பெரிய கலவரமாக மாறியது?
திடீரென்று ஒரு நாள் ஆயிரக்கணக்கான காவல் துறையினரும் வனத்துறையினரும் முத்தங்காவில் குவிக்கப்பட்டார்கள்.
கைது செய்யப் போகிறார்கள் என நினைத்தோம்.
ஆனால், எந்தவித முன்னெச்சரிக்கை ஏதும் இன்றி காவல் துறையினர் தாங்கள் வைத்திருந்த தடிகள், துப்பாக்கிகளில் கொடூரமாக தாக்கத் தொடங்கினர்.
குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் மக்களை அடித்து உதைத்து மண்டையை உடைத்தனர்.
சில மணி நேரங்களில் முத்தங்கா வனப்பகுதி முழுவதும் ரத்தக் களரியாக மாற்றப்பட்டதோடு திரும்பிய பக்கம் எல்லாம் மரண சத்தம் கேட்கத் தொடங்கியது. நாங்கள் கட்டியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறையில் எங்கள் தலைவர் ஒருவரும், போலிஸ் தரப்பில் ஒருவரும் இறந்தனர். படுகாயமடைந்த 2000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 600க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் பல உள்நாட்டு மாப்பியாக்களின் தொடர்புள்ளது. என் மீது மட்டும் 73-க்கு மேற்பட்ட வழக்குகள் போட்டார்கள். எல்லா வழக்குகளும் பொய் வழக்கு என்பதை நிரூபித்துவிட்டேன். இன்னும் ஆறு வழக்குகள் பெண்டிங் உள்ளது.
*இந்த போராட்டங்களின் விளைவு எந்த அளவுக்கு ஆதிவாசி மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
முத்தங்கா போராட்டத்தின் விளைவு கேரளா முழுவதும் ஏன் அகில இந்திய அளவில் எல்லோரது கவனத்தையும் பெற்றதோடு கேரள அரசுக்கு பெரிய நிர்பந்தத்தைக் கொடுத்தது. பல மாவட்டங்களில் நிலம் கேட்டு எங்களது போராட்டம் தொடர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக நிலமற்ற ஆதிவாசி குடும்பங்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் நிலம் கொடுத்தது கேரள அரசு. ஒரு ஏக்கரில் இருந்து 5 ஏக்கர் வரை நிலம் கொடுத்தார்கள்.
இதில் மிக முக்கியமானது கண்ணூர் மாவட்டம் ஆரளாபாம், கள்ளிக்கோட்டை மாவட்டம் வைத்திரி அருகில் சுகந்தகிரி திட்டம். ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை ஆதிவாசி குடும்பங்களுக்கு நிலம் கொடுத்தார்.
இதே இடத்தில் சுமார் 20 லட்சம் ரூபாயில் அரசு வீடு கட்டி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் காட்டு மரங்கள் இயற்கையாக உள்ளது.
இதை நாங்கள் பாதுகாப்பதோடு அந்த இடத்தில், குருமிளகு, காப்பி, மரவள்ளிக் கிழங்கு, காய்கறிகள், பழ மரங்கள் என விவசாயம் செய்து வாழ்கிறோம்.
இடுக்கி குண்டலக்குடி என்ற இடத்தில் 99 குடும்பத்திற்கு நிலம் கொடுத்தார்கள். கேரளாவில் பல மாவட்டங்களில் இதேபோல் நிலம் கொடுத்திருக்கிறார்கள்.
எங்களது தொடர் போராட்டத்தின் மூலம் இன்று கேரளாவில் சுமார் 35 ஆயிரம் ஆதிவாசி குடும்பங்களுக்கு நிலம் கிடைத்து நிம்மதியாக வாழ்கிறார்கள்.
* அந்த இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தார்களா?
நிலம் கொடுத்தால் மட்டும் போதாது குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய விதை, உரம், இடுபொருட்கள், தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் விவசாயம் செய்ய முடியும். இல்லையென்றால் நிலத்தை போட்டு விட்டு கூலி வேலைக்கு போய்விடுவார்கள்.
ஆகவே மேற்கண்ட உதவிகளையும் கேட்டுப் போராடி வருகிறோம். குடிநீர், நடைபாதை, சாலை, மின்சாரம், போக்குவரத்து, பள்ளிக்கூடம், சுகாதார வசதிகளையும் வலியுறுத்தி வருகிறோம். ஒருசில இடங்களில் இதுவும் நடைபெற்று வருகிறது.
*2006-ல் வன உரிமை அங்கீகார சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படுகின்றதா?
ஒரு சில இடங்களில் அமல்படுத்த முயற்சி எடுத்துள்ளனர். ஆறு, குளம், ஏரி, இயற்கையான காடுகள், இயற்கை வளங்களை, மக்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும். தற்போது இதனை வலியுறுத்தி வருகிறோம்.
*தங்களது போராட்டத்தின் விளைவால் நிலம் தொடர்பான கமிஷன் அமைக்கப்பட்டதா?
ஆமாம். ராஜமாணிக்கம் கமிஷன், ரெங்கநாத மிஸ்ரா கமிஷன் ஆகியவை அமைக்கப்பட்டு கேரளா முழுவதும் எங்கெங்கெல்லாம் விவசாயம் செய்ய நிலம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலங்கள் நிலமற்ற மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
நிலம் என்பது எமது பிறப்புரிமை. இதை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும்.
எமது போராட்ட வரலாறும் எதிர்கால சந்ததிக்கு முக்கியமானதாகும். ஆகவே, இந்தக் கருத்துக்களை எடுத்துச்செல்லும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார் C.K. ஜானு.
C.K. ஜானு கேரளா ஆதிவாசி மக்களுடைய போராட்ட வரலாற்றை “அடிமைகள்” என்ற தலைப்பில் ஆவணப்படுத்தி மலையாள மொழியில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். இதனை தமிழில் கொண்டு வரவும் முயற்சி எடுத்து வருகிறார்.
சந்திப்பு: M.S. செல்வராஜ்.