தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு.
பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள் மிகச் சில. இந்நூல்கள் ’பெண்’ என்ற பாலினத்தின் அடிப்படையில் சமூகம் இழைக்கும் ஒடுக்குமுறைகளையும், பாகுபாடுகளையும் சுட்டிக்காட்டி விவாதிக்கின்றன. இவ்வாறான நூல்கள் வரவேற்கத்தக்கதே.
ஆனால், பெண், தொழிலாளி, பெண் விவசாயி போன்ற பதங்களை தமிழ் எழுத்துலகில் பார்ப்பது அரிதினும் அரிதாக உள்ளது. அவ்வகையில் நர்மதா தேவி எழுதிய ’பெண் அன்றும் இன்றும்’ புத்தகம் பெண்ணிய வரலாற்றில் முக்கியமானது.
இப்புத்தகம் ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் முதல் தற்போதைய முதலாளித்துவ சமூகம் வரையிலான பெண்களின் வாழ்நிலையை வரலாற்றுபூர்வமாக விளக்குகிறது.
ஆதிப் பொதுவுடைமைச் சமூகமானது தாய்வழி சமூகம். தாய்வழி சமூகத்தில் பெண்களே குலத்தின் தலைவியாக இருந்துள்ளனர்.
இப்போது உள்ளது போல கலாச்சரக் கட்டுப்பாடுகள் அப்போதைய பெண்களுக்கு இல்லை, மாறாக தன்னுடைய குலத்தை பாதுகாத்து வழிநடத்தும் தலைமைப் பொறுப்பே பெண்களிடம் இருந்தது.
ஒருவனுக்கு ஒருத்தி (monogamous marriage) என்பதெல்லாம் சொத்துடைய சமூகத்தை கட்டமைப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.
பண்டைய சமூகத்தில் குழு மணமும் (group marriage) இணை மணமும் (pairing marriage) இருந்ததாக நர்மதா தேவி பதிவு செய்துள்ளார்.
பெண்ணடிமைத்தனம் வெறுமனே சனாதானத்தால் மட்டுமே கட்டமைக்கப்படவில்லை. பெண்களின் உழைப்பை உறிஞ்சுவதற்கு வர்க்க சமுதாயம் (பொருளாதார ஏற்றத்தாழ்வுடைய சமூகம்) பெண் அடிமைத் தனத்துக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது என்பது மறைக்கப்படும் உண்மை.
பெண்கள் மீதான உழைப்பு சுரண்டலை வலுப்படுத்தவே சாதி, மதம், சாமி, பாரம்பரியம் போன்றவை உருவாக்கப்பட்டது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த சமுதாயத்தில் பெண்கள் உடல் அளவில் மட்டுமல்லாமல், உழைப்பு, உணர்வு, சிந்தனை என மனிதன் வாழ்வதற்கு அர்த்தமான அனைத்திலும் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள்.
மாட்டை விட அதிகமான உழைப்பை, பெண்கள் முதலாளியின் லாபத்திற்காகவும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் அனுதினமும் செலுத்துகிறார்கள். பல நேரங்களில் அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.
வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு கூலி என்பதே கிடையாது. இவையெல்லாம் பெண்களின் தியாகமாகவும், கடமையாகவும் சித்தரிக்கப்படுகிறது.
தொழிற்சாலையில் நேரடியாக உழைப்பை செலுத்துவதால் ஏற்படும் லாபத்தைப் போல பெண்கள் வீட்டு வேலை செய்வதாலும் தொழிற்சாலை உரிமையாளருக்கு லாபமே கிட்டுகிறது.
ஒரு ஆண் தொழிலாளி வெளியில் வேலை செய்து வீடு திரும்புகையில் அவருக்கான உணவை, ஆரோக்கியமான சூழலை தொழிற்சாலை நிறுவனர் ஏற்படுத்தித் தர வேண்டியதில்லை.
அவற்றிற்கு தானே குடும்பங்கள் பெண்களை வைத்திருக்கின்றன. தொழிலாளியின் வயது முதிர்ந்த பெற்றோரையும், அவர் பெற்ற குழந்தைகளையும் தொழிற்சாலை நிறுவனம் பராமரிக்க வேண்டியதில்லை.
அதற்கும் பெண்கள் இருக்கிறார்களே. இவ்வேலையெல்லாம் பராமரிப்பு பொருளாதாரத்திற்குள் அடங்கும்.
பராமரிப்பு பொருளாதாரத்தில் பெண்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். வேலைக்கு செல்லாத பெண்களுக்கு இந்நிலை என்றால் வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் சுரண்டப்படுகின்றனர்.
தொழிற்புரட்சிக்கு பின் பெண் தொழிலாளர்கள் கடுமையான வேலை சூழலால் உடல் அளவிலும் மனதளவிலும் நலிவுற்றனர்.
சுரங்கத்தின் பணியில் இருக்கையிலேயே பிரசவித்த பெண், வேலையிடத்தில் காற்றும் ஓய்வுமில்லாமல் இறந்த பெண் போன்ற ஏராளமான பெண்கள் முதலாளித்துவ லாப வெறிக்கு பலியானதை ’பெண் அன்றும் இன்றும்’ புத்தகம் எடுத்துரைக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உரிமைகள், சட்டங்கள் வரையறுக்கையில் பெண்களை கவனத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை. பெண்களையும் கவனப்படுத்த அமைப்புக்குள் இருக்கும் பெண்கள் போராட வேண்டியுள்ளது.
இதற்கு ஐக்கிய நாட்டு சபையும் விதிவிலக்கல்ல அப்படித்தான் ஐநாவின் மனித உரிமை ஆணையத்தில் இடம்பெற்றிருந்த ஹன்ஷா மேத்தாவும் முக்கியமானவர்.
மனித உரிமை பிரகடனத்தில் All men are equal என்ற பதத்தை All human beings are equal beings என்று மாற்ற காரணமாக இருந்தவர். இவரைப் போன்ற பல பெண் ஆளுமைகளையும் இப்புத்தகம் அடையாளப்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு எதிரி பெண்கள் தான் என்ற சமூகத்தின் குருட்டு நம்பிக்கையை தகர்த்தெரிந்து ஒரே வர்க்கத்தை, ஒரே சாதியை சேர்ந்த பெண்களுக்கு இடையில் மோதல் என்றால் அங்கு பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு எதிராக ஆணாதிக்கம் உள்ளது என்றும்,
அதுவே பணக்காரப் பெண் பெண் தொழிலாளர்களுக்குமிடையில் உள்ள பிளவிற்கு காரணம் வர்க்கம் என்றும் ஆதிக்க சாதிப் பெண் ஒடுக்கப்பட்ட பெண்ணிற்கு எதிராக செயல்பட்டால் அங்கு சாதியும் காரணமாக இருக்கிறதே தவிற பெண் என்ற பாலினம் தன் பாலினத்துக்கே எதிரியாக இருப்பதில்லை.
இவ்வாறாக பெண்கள் சாதியாக, வர்க்கமாக பிரிந்திருப்பதால் பெண்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது கடினமானதே. இருப்பினும் பெண்கள் அரசியல்படுத்தப்பட்டால் அவர்களின் எழுச்சி தீரமானதாக இருக்கும்.
ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் விடுதலையே பெண்களின் விடுதலை என்ற புரிதலுடன் ஏராளமான பெண் தோழர்கள் இம்மண்ணில் போராடியுள்ளனர்.
குழந்தையைப் பிறருக்கு கொடுத்துவிட்டு போராட்டக்களம் கண்ட கமலம்மா (தெலுங்கானா புரட்சி), போருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் போது வன்புணர்வால் பாதிக்கப்படுவாய் என்று அரற்றிய ஆணிடம், நான் வன்புனர்வு செய்யப்பட்டாலும் பிறக்கும் குழந்தையும் செங்கொடி பிடிக்கும் என்று பதிலடி கொடுத்த கேரளத்து சிறுமி போன்ற பல வீரமிக்க பெண்களின் கதைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
காலந்தோறும் பெண்களின் உழைப்பும் வரலாறும் மறைக்கப்பட்டு வரும் சூழலில் ”பெண் அன்றும் இன்றும்” புத்தகம் பெண் தொழிலாளியாக, பெண் விவசாயியாக, பெண் ஆளுமையாக, குடிமகளாக, தாயாக, தலைவியாக பெண் என்ற பாலினத்தை பதிவு செய்திருப்பது சாலச்சிறந்த செயல்.
– கு.சௌமியா
நூல்: பெண் அன்றும் இன்றும்
ஆசிரியர்: நர்மதா தேவி
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 512
விலை : 494/-