ஆதிமூலம்: நவீன ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமை!

2008 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, ‘புதிய பார்வை’ இதழில் (பிப்ரவரி 1- 2008) அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நான் (மணா) எழுதியிருந்த தலையங்கம் இது;

*

மகத்தான திறமையின் உள்ளடக்கமாகக் கனிந்த அன்பு நிறைந்திருக்க முடியுமா?

தான் வாழ்ந்த  காலத்தில் இதற்கான அர்த்தமாக வாழ்ந்திருக்கிறார் நவீன ஓவியரான கே.எம். ஆதிமூலம்.

தமிழகத்திற்கே உரித்தான பாரம்பரியமான கிராமியக் கலை மரபுகளும், தொழில்நுட்பங்களும் இவருடைய தூரிகை வழியாக வெளிப்பட்டபோது, அவற்றின் மீது நவீன வெளிச்சத்தின் கீற்று பட்டு ஒளிர்ந்தன.

மண் சிற்பங்கள் கோடுகளாகி மெருகேறின. கூத்துக்கலைஞர்களின்  நிழல் பதிவுகளுக்கு மதிப்பேறியது. சொகுசுத்தனத்துடன் பகட்டான உடைகளுடன் வாழ்ந்த மன்னர்களின் இருளேறிய முகங்கள் வெளிப்பட்டன.

சிறு சிறு கோடுகளில் காந்தி துடிப்புடன் நினைவூட்டப்பட்டார். இங்குள்ள நிலப்பரப்பு வர்ணக்கலவையாய் உருமாறிச் சர்வதேசக் கவனம் கூடியது..

பன்னாட்டுச் சந்தையில் ஆதிமூலத்தின் ஓவியங்களுக்கு மதிப்பு அதிகரித்தது. இணைய தளங்களில் அவருடைய தனித்துவம் உணரப்பட்டது.

கோட்டோவியங்களும் வர்ணச் சேர்க்கையிலுமாக விரிந்திருந்த அவருடைய ஓவிய வெளிக்கான ஊற்றுக்கண் நம் மண் சார்ந்திருந்து உலகத் தரத்தைத் தொட்டது.

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னைப் பாதித்த நோயுடன் போராடிய வாழ்க்கை அவருடையதாக இருந்தாலும், வாழ்க்கையின் மீதும், சுற்றியுள்ள மனிதர்களின் மீதும் எந்தக் கசப்பின் சாயலோ, சலிப்பின் புகைச்சலோ அவரிடம் இல்லை. உருக்குலைக்கும் நோய் அவருடைய உள்ளத்தின் இயல்பை மாற்றிவிட வில்லை.

எழுபதாண்டு கால வாழ்க்கையில் உயிர் பிரியும் காலம் வரை தளராமல் இயங்கின அந்தக் கலைஞனின் விரல்களும், துடிப்பான மனமும்.

ஆதிமூலம் என்கிற கலைஞனின் ஓவியங்களிலிருந்து மட்டுமல்ல, அவருடைய வாழ்க்கையிலிருந்தும் கலைத்துறை சார்ந்த ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள எவ்வளவோ உயிர்ப்பான விஷயங்கள் இருப்பது தான்- அவருடைய வாழ்க்கையின் ஈரத்தைப் புலப்படுத்தி இருக்கிறது.

அந்த ஈரத்தை உள்வாங்கி அந்தக் கலைஞனுக்கு எளிய அஞ்சலி!

நினைவில் தங்கிய அந்தக் கரகரத்த குரல்

பூப்போல நேசிக்கும் ஓவியர் ஆதிமூலம்!

– கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ‘மணாவின் ஆதிமூலம் – அழியாக்கோடுகள் நூலில் இருந்து..

நெரிசல் அடர்ந்த முச்சந்தி மாதிரி எத்தனையோ மனிதர்களின் சந்திப்புகளை நாம் சுடந்து போகிறோம். அதேசமயம் நம்மைக் கடந்தபடி எவ்வளவோ மனிதர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதில் சந்திப்புகளைப் பழக்கமாகவும் பிறகு நெருக்கமாகவும் கொண்டுபோவது எது? எதனால் குறிப்பிட்ட சில மனிதர்களுடன் வாஞ்சை கூடி மனது உரிமை பாராட்டுகிறது? எத்தனையோ பேரைச் சலித்துச் சிலரை நமக்குச் சமீபத்திய உறவுகளாகக் கனிய வைக்கிற மனதின் சூட்சுமம்தான் என்ன?

ஆதிமூலம் என்கிற அற்புதமான கலைஞருடனான உறவுகூட அப்படி அமைந்ததுதான்.

ஈஞ்சம்பாக்கத்து வீட்டின் முன்னறையில் ஆதிமூலம் அவர்களை குமுதம் இதழுக்காகச் சந்தித்தபோது அந்தச் சந்திப்பு பத்திரிகையின் நிமித்தமானதாக இருந்தாலும் _ சந்திப்பின் நிறைவில் அவருடைய விசாரிப்புகள் ஆத்மார்த்தமாக இருந்தன.

விடைபெறும்போது ஓவிய கேன்வாஸ்கள் இருக்கிற பின்னணியில் அவர் சொன்னார் “பத்திரிகைகாக நீங்க இப்போ வந்தாலும் இனி நீங்க விரும்புறப்போ இங்கே வாங்க.”

இது நிகழ்ந்து பன்னிரண்டு ஆண்டுகளாகிவிட்டன. அதற்குப் பிந்தைய சந்திப்புகள் அவருடன் நெருக்கமாக உணரவைத்தன.

சுந்தர ராமசாமி அவர்களுடனான நட்பில் உருவான நெருக்கத்தைப் போலவே ஆதிமூலமும் நான் பங்கேற்ற பல ஊடகங்களில் நட்புணர்வின் காரணமாகப் பங்கேற்றார்.

புதிய பார்வையில் ஆதிமூலத்துடனான நீண்ட நேர்காணல் வெளிவந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பங்கேற்று – அவருடைய வீட்டின் பின்புறத்துத் தோட்டத்தில் நடந்தபடி_ அதற்காகப் பேசினார்.

‘சிகரம் தொட்ட மனிதர்கள்’ என்கிற அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு ஆயத்தங்களில் இருந்தபோது மென்மையானபடி சொன்னார்.

“இந்த நிகழ்ச்சிக்கு “’சிகரம் தொட்ட மனிதர்கள்’ன்னு பெயர் வைச்சுருக்காங்க. ஆனா. இதுவரை நான் எந்தச் சிகரத்தையும் தொட்டதா உணரலை என்னுடைய ஓவியங்களுக்கு இப்போ மதிப்பு உருவாகியிருக்கலாம்.

இருந்தும் நான் இன்னும் எவ்வளவோ பண்ண வேண்டியதிருக்கு… பண்ணனும்.. ஏதோ நாம் உச்சியைத் தொட்டுட்ட மாதிரியான எண்ணம் வந்துருச்சுன்னா எதுவும் பண்ண முடியாமல் போயிடும். அதனாலே இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றாலும் _ அந்த மாதிரியான எண்ணம் என் மனசில் இல்லை.”

தொலைக்காட்சி காமிராவுக்கு எதிரே பேசுவதில் அவருக்கு ஒருவிதக் கூச்சம் தெரிந்தாலும், அவருக்கே உரித்தான சற்று முறுக்கேறிய குரலில் அழுத்தமாகவே பேசினார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு குமுதம் வெப் டிவிக்காக ஒரு நேர்காணலைப் பதிவு செய்தபோது இன்னும் தளர்ந்திருந்தார். தன்னுடைய வாழ்வில் தனக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் குறித்த நன்றியுணர்வு அவருடைய பேச்சில் வெளிப்பட்டபடி இருந்தது;

காட்சிபூர்வமாக இறுதியாக அவர் அளித்த பேட்டியும் அதுதான் என்பது காலத்தின் துயரம்.

புற்றுநோய் அவருடைய உடம்பை உருக்குலைத்துக் கொண்டிருந்த நிலையில் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் தன்னுடைய நோயின் தாக்கத்தைப் பற்றிச் சற்றும் அனுதாபத்தைக் கோராத குரலில் பேசினார்.

நோய் குறித்துச் சொல்லும்போது எதிரே அமர்ந்திருப்பவரின் முகத்தில் பதற்றம் கூடிக் குரல் மாறுவதைப் பார்க்க விரும்பாதவராய் இருந்தார்.

தன்னைச் சிறுகச் சிறுகச் சிதைத்துக் கொண்டிருந்த நோயைக் கூடக் கனிந்த முகத்துடன் அவர் ஏற்றுக்கொண்டதைப் போலிருந்தது.

அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒரு தருணத்தில் அந்தச் சிகிச்சையின் பக்க விளைவாக அவருடைய தோற்றம் மாறியிருந்தது.

தலையில் முடியெல்லாம் கொட்டி – முகத்திலிருந்த இயல்பான நிறம் மாறிக் கருத்திருந்தது.

அந்தச் சமயத்தில் பலரைச் சந்திப்பதைத் தவிர்த்த நிலையில் ஒரு நாள் போன் மூலம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வரச்சொன்னார்.

அதே வரவேற்பறையில் அவரைப் பார்த்தபோது முக மாற்றங்களை நுட்பமாகக் கவனித்தபடி ‘நோய் வந்தால் அதை எதிர்கொண்டுதான் ஆகணும்” என்றவர் சட்டென்று பேச்சை மாற்றிச் சிறுபுன்னகையை முகத்தில் வரவழைத்து,

“உங்களுக்குன்னு ஒரு படம் வரைஞ்சு வைச்சுருக்கேன் ப்ரேம் போட்டு இருக்கு என் நினைவா இருக்கட்டும்” என்றவர் தானே அந்த ஓவியத்தைக் காகிதத்தால் சுட்டிக் கையில் கொடுத்தார்.

சுந்தரராமசாமியின் மறைவு அவரைப் பாதித்ததின் விளைவாக _ அவரைச் சிறு கோட்டோவியங்களாக வரைந்து சுந்தரராமசாமிக்கு நெருக்கமான நண்பர்களுக்கு அனுப்பினார்.

இரண்டு ஓவியங்களை என்னை வரவழைத்துக் கொடுத்தபோது “நண்பர்களின் மரணத்தை அவ்வளவு கலபமாகத் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார்.

அவருடைய வாழ்க்கையின் பெரும் தூண்டுதலாக இருந்த பி.எஸ். செட்டியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது _ உற்சாகத்துடன் தொலைபேசியில் பேசினார். அதற்காக நடந்த விழாவிலும் கலந்துகொண்டார்.

விழா முடிந்த இரு தினங்களில் போனில் அழைத்து, “பி.எஸ். செட்டியார் பற்றி நான் ஒரு சின்னக்கட்டுரை எழுதலாம்னு இருக்கேன்” சொன்னதும் உடனே ஆளை அனுப்பி வாங்கிக் கொள்வதாகச் சொன்னதை மீறி _ இவரே காரில் மறுநாள் காலை பதினொரு மணிக்கு புதிய பார்வை அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.

”ஏன் இப்படி வந்துட்டீங்க?” என்றதும் ‘ஆஸ்பத்திரி தவிர அதிகம் வெளியே போறதில்லை. இங்கே வந்தா நேராப் பாத்துட்டு அரைமணி நேரம் பேசிட்டுப் போகலாம்லே.” உதட்டில் சிறு புன்னகை,

நேர்காணல் தொகுப்பான ‘ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் வெளிவந்தபோது அதற்கு அட்டைப்பட எழுத்துகளை அவரே எழுதி அனுப்பினார்.

‘அகிலா நியூஸ்’ என்கிற நிறுவனத்தை நான் மறுபடி சென்னையில் துவக்கியபோதும் அதற்கு முப்பது விதமாக எழுத்துகள் எழுதி எடுத்துக்கொண்டு _ அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.

“நான் என்கிற அகந்தையில்லாமப் பழகிறவங்ககிட்ட, தான் செய்ற வேலையிலே மனம் ஒன்றிச் செய்றவங்ககிட்டே மனசு நெருக்கமாயிடுது” என்றார் அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது.

போகும்போது தோளைத் தட்டிச் சொன்னார் “எங்கே இருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நமக்கு அடிப்படையா இருக்கிற விஷயங்களை இழந்துடக் கூடாது. உங்க இயல்புப்படி இருங்க. ஏதாவது பிரச்சினை வந்தா அவசியம் என்னைத் தொடர்பு கொள்ளாம இருக்காதீங்க.” குரலில் நெருங்கிய உறவைப்போல் நேசம் தொனித்தது.

சிலசமயம் மனம் விட்டுப் பேசிய சந்தர்ப்பங்களில் எதிலும் தரம் சார்ந்த மதிப்பீடுகளில் நிகழும் சீர்குலைவுகள் குறித்த வருத்தமும், அதிருப்தியும் அவரிடமிருந்து வெளிப்பட்டாலும் அவநம்பிக்கையின் சாயல் அவரிடமில்லை. ஓவிய நண்பர்கள் குறித்து பெரும் பாராட்டுணர்வு அவரிடம் தொடர்ந்து இருந்திருக்கிறது.

ஓவியர் மருதுவைப் பற்றிப் பேசும்போது குரல் நெகிழ்ச்சியுடன் “அவர் அவருக்குன்னு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர்லே பலவிஷயங்களை இணைத்துப் பண்றார் நான் அப்படியில்வை ஓரிடத்தில் நின்னுட்டேன் இருந்தாலும் இந்த மாதிரி நிறையப்பேர் செய்யணும்.” என்றார்.

“ஏன் உங்க உடல்நிலை பற்றிய விபரத்தைச் சிலரைத்தவிர வெளியே சொல்லாம் இருக்கீங்க?”

மென்மையாக ஒரு முறை கேட்டபோது அவருடைய முகத்தில் உணர்வு கூடியிருந்தது. யாரும் என்கிட்டே நோய் குறித்து அனுதாபமாப் பேசுறதை நான் விரும்பலை.

அதுதான் என்னைக் கஷ்டப்படுத்தும். அதனாலே குறிப்பிட்ட சிலரைத் தவிர யார்கிட்டேயும் இது பத்திப் பேசலை.. என் பையன்களுக்கு இது பத்தி நல்லாத் தெரியும்.

ஆனா, என் ஒய்ஃப் தாங்கமாட்டாங்க மரணம்ங்கிறது. எப்பவோ வரத்தான் போகுது… ஆனா என் பேரப் பிள்ளைகளுக்காகவாவது இரண்டு வருஷம் நான் இருக்கணும்.” சொல்லும்போது அவருடைய பார்வை வேறு பக்கம் மாறியிருந்தது. குரல் தடுமாறியது.

உரையாடலைச் சட்டென்று கனத்த மௌனத்தில் சரித்துவிட்ட இந்த அனுபவம்_ஆறு மாதங்களுக்கு முன்.

சென்ற டிசம்பர் மாதத்தில் டெல்லியில் நடந்த அவருடைய புத்தக வெளியீட்டு விழாவுக்குப் போகும்போது அதற்கான அழைப்பிதழை அனுப்பிப் போனில் பேசும்போது உடல் நலிவாக இருந்தாலும் டாக்டரின் ஆலோசனைப்படி _ போய்விட்டு வந்துவிடுவதாகச் சொன்னார்.

சென்னைக்கு வந்தபிறகும் அது குறித்துச் சொல்லிவிட்டு அவருடைய ஓவியப் புத்தகத்தைக் கையெழுத்தும், புத்தாண்டு வாழ்த்துகளுமாக அனுப்பினார்.

சென்னையில் புத்தகத்திருவிழா துவங்கியதை ஒட்டி வெளியிடப்பட்ட எம்ஆர்.ராதா பற்றிய நூலை அவருக்குக் கூரியரில் அனுப்பியிருந்தேன். ராஜு மூலமாக தெடுமாறனின் நேர்காணல் புத்தகத்தையும் அனுப்பியிருந்தேன்.

மறைவதற்கு இரண்டு நாட்கள் முன்பு போனில் பேசினார். “இப்போ உங்க புத்தகத்தைப் படிச்சுக்கிட்டிருக்கேன் எம்.ஆர்.ராதா புத்தகத்தைப் படிச்சு வியப்பா இருந்துச்சு_ நெடுமாறன் _ தமிழக அரசியல்வாதிகளில் அபூர்வமான மனிதர். அவரை மாதிரியான தலைவர்கள் அங்கீகரிக்கப்படுற சூழ்நிலை வரணும் நீங்க என்கிட்டே கேட்டிருந்தா அதுக்கு ஒரு படம் அவரை வரைஞ்சு தந்திருப்பேன்.

நீங்க புத்தகத்திற்குப் பயன்படுத்திட்டு அவர்கிட்டே கொடுத்திருக்கலாம் சரி.. புக் ஃபேர் முடிஞ்சதும் வீட்டுக்கு வாங்க வாயிலே துணி கட்டிக்கிட்டுத்தான் என்னுடைய அறைக்கு வரணும் பையன்க அப்படி கவனமா ஏற்பாடு பண்ணியிருக்காங்க ஒரு பத்து நிமிஷம் வந்து பார்த்துட்டுப் போங்க.”

இப்போது நினைவுகளில் மட்டுமே பிரியங்கலந்த அந்த கரகரப்பான குரல் தங்கியிருக்கிறது.

இழப்பு ஏற்படுத்தியிருக்கும் இடைவெளி நினைவுகளுக்கும் நிகழ்காலத்திற்குமான இடைவெளி என்றாலும் அந்த வெளிக்குள் பெருமூச்சின் சுதகதப்பும், துக்கத்தின் மௌனமும் நிரம்பிய எவ்வளவு வலிகள்?

– மணா

****

மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்!
ஆசிரியர் : மணா
பக்கங்கள் – 232
விலை: ரூ. 250/-
வெளியீடு: பரிதி பதிப்பகம்,
56சி|128 பாரத கோவில் அருகில்,
ஜோலார்ப் பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம்-635 851.
செல் : 72006 93200

 

You might also like