பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 86.
அதானியும், அம்பானியும் 10 ஆண்டுகளாகத்தான் நமக்கு அறிமுகம். ஆனால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புறங்களிலும் தனது இருப்பைப் பதிவு செய்து வைத்துள்ளவர், இந்தியாவின் தொழில் முகமான டாடா.
மும்பையில் மிகுந்த செல்வாக்கும், பேரும், புகழும், வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. டாடா குழும நிறுவனரான ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன்.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் பி.எஸ்சி. பட்டமும், ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.
இந்தியாவில் மிகப்பெரிய தொழில் புரட்சியை ஏற்படுத்திய ரத்தன் டாடா, ஹார்வர்டு கல்லூரியில் படிப்பை முடித்ததும், அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது.

அதனை உதறி விட்டு, இந்தியா வந்த அவர், மோட்டார் துறையில், ஆரம்பித்து பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டினார்.
1962-ம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ம் ஆண்டு நிதி நெருக்கடியில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்த, ‘தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி’ நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
இவரது ஆலோசனைகளால் நெல்கோ பெரும் சிக்கலில் இருந்து மீண்டு, உயிர்ப் பெற்றது. 1991-ம் ஆண்டு மார்ச் மாதம் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.
கோரஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.
மலிவு விலை காருக்கு முன்னோடி:
நடுத்தரக் குடும்பத்தினர் ஒரே மோட்டார் சைக்கிளில் நாலைந்து பேராகச் செல்வதைப் பார்த்து வேதனை அடைந்தார். மலிவு விலையில் சிறிய கார் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் அப்போதுதான் இவரிடம் ஏற்பட்டது.
அவரின் பல ஆண்டு கனவு, ‘டாடா இண்டிகா கார்’ வடிவில் 1998-ம் ஆண்டு பலித்தது. உலகிலேயே மலிவாக 1 லட்சம் ரூபாய்க்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார்.
‘டாடா நானோ’ கார் 2008-ம் ஆண்டு உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்து இருந்தது. ஆனாலும், தனது லட்சியத்தில் உறுதியாக இருந்த டாடா விலையை உயர்த்தவில்லை.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய டாடா, பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளின் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர்.
பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர்.
பத்ம பூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் இவரைத்தேடி வந்தன. டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியலில் இடம்பெற்றார் டாடா.
2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற இவர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வந்தார்.
மும்பையில் மரணம்

முதுமைப் பிரச்சினைகள் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரத்தன் டாடா, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட டாடாவுக்கு மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்கமாமல் இரவு 11 மணியளவில் காலமானார்.
டாடா, இளைஞர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் ஏகப்பட்ட நம்பிக்கை விதைகளை விதைத்து விட்டுச் சென்றுள்ளார்.
“இரும்பை யாராலும் அழிக்க முடியாது. ஆனால், அதன் சொந்த துருவே அதனை அழிக்கும். அதேபோல், யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது. ஆனால், அவர்களின் சொந்த மனநிலையால் முடியும்” என்பது அவரது பிரபலமான பொன்மொழி.
“வேகமாக நடக்க வேண்டும் என்றால், தனியாக நடக்க வேண்டும். ஆனால், வெகுதூரம் நடக்க வேண்டும் என்றால் ஒன்றாக நடக்க வேண்டும்”, “மக்கள் உங்கள் மீது எறியும் கற்களை எடுத்து ஒரு கோட்டையைக் கட்ட அவற்றைப் பயன்படுத்துங்கள்” போன்றவை அவர் நமக்காக விட்டுச்சென்ற வாசகங்கள்.
– மு.மாடக்கண்ணு