“தமிழ்நாடு என்று பெயர் வைக்கும்போது, ராஜாஜியைச் சந்தித்துப் பேசுமாறு அண்ணா என்னிடம் பணித்தார்.
‘தமிழ்நாடு’ என்பதற்குப் பதிலாக ‘தமிழ்நாட்’ என்று வைக்க வேண்டும் என்று ராஜாஜி சொன்னார்.
அதை ஏற்க முடியாது என்று ராஜாஜியிடம் கூறினேன்.
ராஜாஜியின் கருத்தை அண்ணாவும் ஏற்க மறுத்துவிட்டார்.
சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக, அதன் சட்டவரைவை பெரியாரிடம் காண்பிக்குமாறு என்னிடம் அண்ணா கூறினார். பெரியாரைச் சந்தித்துச் சட்டவரைவைக் காண்பித்தேன்.
அதில் தமிழ்முறைப்படியான திருமணம் என்பது முக்கியமானது. மேலும் அதில் தாலிகட்டுவது மற்றும் மாலை மாற்றுவது என்று ஒரு வரி இருந்தது.
அதைத் தாலி கட்டுவது அல்லது மாலை மாற்றுவது என்று ஒரு திருத்தம் கொண்டு வாருங்கள் என்று பெரியார் சொன்னார். அதை அண்ணா ஏற்றுக் கொண்டார்.
திடீரென ஒரு நாள் கோட்டையில் தனது அலுவலகத்திற்கு அண்ணா வரச் சொன்னார். அவரது அறையில் இருந்து பார்த்தால் கடல் நன்றாகத் தெரியும். கடலை உற்று நோக்கியபடி அமர்ந்திருந்தார். அவரது எதிரில் போய் அமர்ந்தேன்.
என்னைப் பார்க்காமல் கடலையே பார்த்துக் கொண்டு தீவிர சிந்தனையில் இருந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு பேச ஆரம்பித்தார்.
“நாம் மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஜனநாயக ரீதியில் ஆட்சியதிகாரத்தை விட்டு விலக வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துச் சொல்” என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. நான் பதில் எதுவும் பேசவில்லை.
கிடைத்த பதவியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் இந்தக் காலத்தில், கிடைத்த பதவியை எப்படித் துறப்பது என்று யோசித்தவர் அண்ணா. இது அவரது ஜனநாயக மரபுக்கு உதாரணம்.”
(2008 – செப்டம்பர் 21 – அன்று “அண்ணா நூற்றாண்டு சிறப்பிதழாக வெளிவந்த “சன்டே இந்தியன்” வார இதழில் தி.மு.க. அமைச்சரையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த செ.மாதவன் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.)