இந்தியா கூட்டணிக்கு பலம் சேர்ப்பாரா கெஜ்ரிவால்?!

2021-ம் ஆண்டு, கெஜ்ரிவால் அரசால் அமல்படுத்தப்பட்ட புதிய டெல்லி மதுபானக் கொள்கை, பல சர்ச்சைகளால் 2022-ம் ஆண்டே திரும்பப் பெறப்பட்டது. டெல்லியின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், ‘புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன’ என்று குற்றச்சாட்டைக் கிளப்பினார்.

டெல்லியின் துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கையும் சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்தது சிபிஐ. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நிகழ்ந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் இணைந்து கொண்டது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஏற்கெனவே, டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், எம்.பி சஞ்சய் சிங் ஆகிய ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதில் சஞ்சய் சிங் மட்டும் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடைக்கால ஜாமீன் கிடைத்திருக்கிறது.

இந்திய வரலாற்றிலேயே முதல்வர் பதவியிலிருக்கும்போது கைதுசெய்யப்பட்ட முதல் நபர் கெஜ்ரிவால்தான். இதற்கு முன்பு கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவருமே, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் கைதாகியிருக்கின்றனர்.

சமீபத்தில், அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னரே கைதுசெய்யப்பட்டார். 

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில், `அமலாக்கத்துறை தன்னைக் கைதுசெய்ததைச் சட்டவிரோதமென அறிவிக்க வேண்டும். தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கோரியிருந்தது கெஜ்ரிவால் தரப்பு.

இந்த வழக்கு விசாரணையில், `ஆறு மாதங்களாக விசாரணைக்கு ஒத்துழைக்காத கெஜ்ரிவால், தற்போது தேர்தல் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமீன் கேட்கிறார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட வேண்டும்’ என வாதிட்டது அமலாக்கத்துறை தரப்பு.

உச்ச நீதிமன்றமோ, `சரியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஏன்… அவர் வாடிக்கையாகக் குற்றம் செய்பவர் அல்ல… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அவருக்கு ஏன் நாங்கள் ஜாமீன் வழங்கக்கூடாது?’ என்றது.

ஆனால், ‘தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமீன் வழங்கினால், அரசியல்வாதிகள் யாரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க முடியாது. தேர்தல் பிரசார அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும்’ என்றது அமலாக்கத்துறை.

அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி, இன்று கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. `தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட அனுமதி வழங்கியிருந்தாலும், முதல்வராக அலுவல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது’ என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது.

இதனிடையே இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அரசியல் நோக்கர்கள், “எளிய மக்களிடம் சுலபமாகச் சென்று சேரக்கூடிய வகையில் பிரசாரம் செய்யக்கூடியவர் கெஜ்ரிவால். அதனால்தான், கட்சி தொடங்கி 12 ஆண்டுகளிலேயே தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி.

டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சியையும் பிடித்திருக்கிறது. ராஜஸ்தான், குஜராத், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் கணிசமான நிர்வாகிகளைப் பெற்றிருக்கிறது.

மீதமுள்ள நான்கு கட்டத் தேர்தலில், `பா.ஜ.க தன்னைத் திட்டமிட்டுக் கைதுசெய்தது’ எனச் சொல்லி கெஜ்ரிவால் மேற்கொள்ளவிருக்கும் பிரசாரங்கள் இந்தியா கூட்டணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும். இந்தியா கூட்டணிக்கு அனுதாப வாக்குகள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கின்றன” என்கின்றனர்.

-வருண்.நா

நன்றி: விகடன்

You might also like