புத்தகம் – தோட்டாக்களைவிட வீரியமான ஆயுதம்!

அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி – பதிப்பாளர் – வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு, பராமரிப்பு, தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதன் ஓர் உலகளாவிய இயக்கமாகவே 1996-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உலக புத்தக தின கொண்டாட்டம் தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தொடங்கிய உலக புத்தக தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் தொடர்கிறது.

வரலாற்றின் தொடர்ச்சியை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அறிவியல் கண்ணோட்டத்தைப் பரவலாக்கவும் புத்தக வாசிப்பே நமக்கு பெரிதும் உதவும்.

இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.

எனவே உலக புத்தக தினத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் முயற்சியை தொடர்வோம்.

புத்தகங்கள், முத்தலைமுறைகளின் வீரியமான விழுமியங்களையும் வீழ்ந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள்.

படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகமாக விளங்கும் இவை, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டுசெல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள்.

‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங்.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம்.

விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்து வைத்துள்ளன.

அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.

உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது.

புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன்.

நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை.

அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நீங்களும் தயார்தானே!

புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், வாசிப்பை சுவாசமாகக் கருதி நேசிப்போம். மடைமைச் சுமைகளைச் சுட்டெரிப்போம்!

படைப்பாளிகள், வாசகர்கள் அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like