பொன் ஒன்று கண்டேன் – ’கெமிஸ்ட்ரி’ எங்கே போச்சு!?

‘படித்தால் மட்டும் போதுமா’ படத்தில் இடம்பெற்ற  பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை, என்னென்று நான் சொல்லாகுமா’” என்ற பாடலைக் கேட்கும்போது துள்ளலுடன் கூடிய அமைதியொன்று மனதுக்குள் நிறையும். அதில் சகோதரர்களாக வரும் சிவாஜியும் பாலாஜியும் தாங்கள் பெண் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தைப் பாடுவதாக இருக்கும்.

அதனை நினைவூட்டும் விதமாகத் தற்போது இயக்குனர் ப்ரியா.வி இயக்கத்தில் ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படம் வெளியானது.

அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, குமாரி சச்சு, மேத்யூ வர்கீஸ் உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு அன்று ஒளிபரப்பான ‘பொன் ஒன்று கண்டேன்’, ஜியோ சினிமா தளத்தில் காணக் கிடைக்கிறது.

சரி, எப்படிப்பட்ட அனுபவத்தை தருகிறது இப்படம்?

முக்கோணக் காதல்!

டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய் மீனாவைக் (குமாரி சச்சு) கவனித்துக் கொள்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கிறார் சாய் (வசந்த் ரவி). அமுதா (தீபா சங்கர்) எனும் செவிலிப் பெண் அவருக்கு உதவிகரமாக இருக்கிறார். இவர்கள் கும்பகோணத்தின் வசிக்கின்றனர்.

சென்னையில் வாழ்ந்துவரும் சிவா (அசோக் செல்வன்) ஒரு மருத்துவர். மகப்பேறு மருத்துவராக இருந்துவரும் அவருக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை.

அதேநேரத்தில் டேட்டிங்கில் மனிதர் பிஸியாக இருக்கிறார். அவருக்கு மூன்று சகோதரிகள். அவர்கள் சிவாவை ஒரு குழந்தை போலப் பார்த்துக் கொள்கின்றனர்.

மும்பையில் பெற்றோர், சகோதரர் சகிதம் வசிக்கிறார் சாண்டி எனும் சுந்தரி (ஐஸ்வர்யா லட்சுமி).

செஃப் ஆக வேலை செய்யும் அவர், ஒரு பணி நிமித்தமாகத் தனியாகச் சென்னையில் தங்க நேரிடுகிறது. அங்கு ஒரு ஹோட்டலை நிர்மாணிக்கும் வேலைகள் முடிந்ததும், கனடா செல்லும் முடிவில் அவர் இருக்கிறார்.

சரி, இந்த மூவரும் எந்தப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றனர்?

கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கையில் சிவாவுக்கும் சாய்க்கும் மோதல் ஏற்படுகிறது. அதற்குக் காரணம், சுந்தரி என்ற மாணவி. அதற்குப் பின், அந்தச் சிறுமி வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறார். ஆனாலும், அவர்களது பகை தீர்ந்தபாடில்லை.

நெடுங்காலம் கழித்து, பள்ளி நண்பர்களின் கூடுகையின்போது சாயும் சிவாவும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். முதலில் வெறுப்பு மிகுந்தாலும், பின்னர் இருவரும் நண்பர்கள் ஆகின்றனர்.

தனக்குத் தலைமையாசிரியராக இருந்த மீனம்மா உடல்நலம் குன்றியிருப்பதைக் காணும் சிவா, சென்னைக்கு வந்தால் அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகச் சாயிடம் சொல்கிறார். அதன்படியே, அவரும் சென்னைக்கு இடம்பெயர்கிறார்.

வந்த இடத்தில், தனது அபார்ட்மெண்டுக்கு குடிவந்த சாண்டியைச் சந்திக்கிறார். காதலில் விழுகிறார். காதல் மன்னனாக வாழும் சிவா, சாய்க்குப் பல ஐடியாக்கள் தருகிறார்.

ஒருநாள், சாண்டி – சாய் இருவரையும் சிவா நேரில் சந்திக்க நேரிடுகிறது. அந்த ஜோடியைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைகிறார். காரணம், சாண்டி எனும் சுந்தரி தான் சிவாவின் முன்னாள் மனைவி. இருவருக்கும் விவாகரத்தாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன.

அது மட்டுமல்லாமல் சிவாவைப் பார்க்கும் சாண்டி, அவரை சாய்க்கு அறிமுகம் செய்து வைக்கிறார். சிவாவும் சாயும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் போன்று கைகுலுக்குகின்றனர்.

சாய் – சுந்தரி காதல் தொடர்ந்ததா? முன்னாள் மனைவி மீது சிவாவுக்கு ஈர்ப்பு உண்டானதா? மோதலில் தொடங்கி நட்பில் மலர்ந்த சிவா – சாய் உறவு அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்தக் கதையில், சிறுமி சுந்தரி தான் வளர்ந்தபிறகு சிவா, சாய் வாழ்வில் குறுக்கிடுகிறாரா என்ற குறுகுறுப்பு நமக்குள் எழும். அதனைத் தக்கவைக்க இயக்குனர் ப்ரியா.வி முயற்சிக்கவே இல்லை.

இதனை முக்கோணக் காதல் என்று சொல்வதை விடவும், ஒரு பெண் மீது இரண்டு ஆண்கள் கொள்ளும் காதல் என்பதே மிகச்சரியானது. ஆனால், அந்தப் பெண் இரண்டு ஆண்களையும் ஏன் சமமாகப் பாவிக்கிறார் என்பதற்கான பதிலைத் திரைக்கதையில் சொல்லாதது இப்படத்தைப் ‘பழைய கள்’ ஆக்குகிறது.

வித்தியாசமான ‘காஸ்ட்டிங்’!

சிவா ஆக அசோக் செல்வன், சாய் ஆக வசந்த் ரவி, சுந்தரியாக ஐஸ்வர்யா லட்சுமி என்று முதன்மை பாத்திரங்களில் நடித்த மூவரையும் இதற்கு முன் நாம் ஒரே படத்தில் பார்த்ததில்லை. அதற்கேற்ப, திரையில் அவர்களது தோற்றம் ‘ப்ரெஷ்’ ஆக உள்ளது.

ஆனால், அந்த ’கெமிஸ்ட்ரி’ எனும் வஸ்து மட்டும் திரையில் தென்படவே இல்லை. அந்த கோளாறு எதனால் உண்டானது என்று அறிய முயற்சித்திருந்தால், இந்தப் படத்தைக் காப்பாற்றியிருக்கலாம்.

வசந்த் ரவி தோற்றத்தில் நிகழும் மாற்றம் திரையில் நன்றாக வெளிப்பட்டுள்ளது.

அசோக் செல்வனின் ‘காமெடி டைமிங்’ சில காட்சிகளில் நன்றாக அமைந்துள்ளது.

கொஞ்சம் பூசினாற் போலத் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, கிளைமேக்ஸ் காட்சியில் எப்படி நடிப்பதென்று திணறியிருக்கிறார்.

குமாரி சச்சு, தீபா வெங்கட் வரும் காட்சிகள் நகைச்சுவையாக இல்லை; ரொம்பவும் ‘பீல்குட்’ ஆகவும் இல்லை.

ஆனால், இரண்டுமே திரையில் மலர வேண்டும் என்ற நோக்கில்தான் அக்காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

ஐஸ்வர்யாவின் தந்தையாக வரும் மேத்யூ வர்கீஸ், அவரது மனைவியாக வருபவர், மகனாக நடித்தவர் அனைவரும் சரியாக வசனம் பேசி ‘பெர்பார்ம்’ செய்துள்ளனர். போலவே, அசோக் செல்வனின் சகோதரிகளாக வருபவர்களும் குறை சொல்லும் அளவுக்குத் திரையில் தோன்றவில்லை.

இவர்கள் தவிர்த்து பள்ளி நண்பர்களாகச் சிலர் வருகின்றனர். நிச்சயமாக, இப்படத்தின் ‘காஸ்ட்டிங்’ வித்தியாசமானது. ஆனால், அது நம்மை வசீகரிக்கவில்லை.

இத்தனை பேர் இருந்தாலும், பெரும்பாலான பிரேம்களில் ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், வசந்த் ரவி மட்டுமே இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அதற்குக் காரணம் ரீமா ரவிச்சந்தர் உடன் இணைந்து இயக்குனர் ப்ரியா.வி அமைத்துள்ள திரைக்கதை.

’கண்ட நாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ படங்கள் கூடக் கொஞ்சம் ‘அப்பர் மிடில்கிளாஸ்’ வாழ்க்கை முறையைச் சொன்ன படங்கள் தான்.

ஆனாலும், அவற்றில் சில விஷயங்கள் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும். இதில் அப்படி ஒரு காட்சி கூட இல்லை. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

அது மட்டுமல்லாமல், படம் முழுக்கச் செயற்கைத்தனம் நிரம்பி வழிகிறது.

ஏ.டி.பகத்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் பளிச்சென்று இருக்கிறது. நல்லதொரு யூடியூப் வீடியோ போல, குறைந்த பட்ஜெட் விளம்பரப் படம் போல உள்ளது.

ஆனால் கதையில் நிகழும் மாற்றங்களை, கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இல்லை.

சூர்யா ராஜீவனின் கலை வடிவமைப்பு, ஒளிப்பதிவாளருக்குத் தேவையான அழகியல் அம்சங்களை வழங்கியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, ஒவ்வொரு காட்சியையும் சரியாக ‘கட்’ செய்து வைத்தால் போதும் என்று இருந்திருக்கிறார்.

இன்னும் ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு என்று பல பிரிவுகளை உற்றுநோக்கினாலும், இதே போன்று ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்ற எண்ணத்தைக் காண முடியும்.

படம் பிடித்துவிட்டால் பின்னணி இசையில் பிரித்து மேய்ந்துவிடுவார் யுவன்சங்கர் ராஜா. இதில் காட்சிகளின் மீது இசையை நிரப்பியிருக்கிறார். ‘சுந்தரி’ பாடல் தவிர அவரது குரலில் அமைந்துள்ள மற்ற இரு பாடல்கள் மனதைத் தொடவில்லை.

‘பொன் ஒன்று கண்டேன்’ கதையை இயக்குனர் ப்ரியா.வி யோசித்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கு அவர் தந்திருக்கும் திரையுருவம் தான் நம்மை ரொம்பவே சோதனைக்கு உள்ளாக்குகிறது.

எடுபடாத திரைக்கதை!

திரைக்கதையின் தொடக்கத்திலேயே முதன்மை பாத்திரங்கள் சாய், சிவா, சுந்தரியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். அவ்வளவு அவசரமாக அவற்றைக் காண்பித்த உடனேயே, இது இரண்டு ஆண்கள் ஒரு பெண் இடையிலான நட்பும் காதலும் கலந்த ஒரு ‘குழப்பமான’ கதை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

அதன்பிறகு, ஒவ்வொருவரும் ஒரு புள்ளி நோக்கி நகரச் சில நிமிடங்களாவது ஆக வேண்டும். ஆனால், சொல்லிவைத்தாற்போல இரண்டு காட்சிகளில் அவர்கள் அந்த புள்ளியை அடைந்துவிடுகின்றனர்.

இரண்டு சிறுவர்களுக்கு ஒரு சிறுமி மீது பருவ ஈர்ப்பு என்பதில் கதை தொடங்கினாலும், அதே இடத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ‘ரீ கிரியேட்’ செய்யும் இடம் திரைக்கதையில் சரியாக வெளிப்படவில்லை.

சாய், சிவா இருவரையும் சிறுவர்களாகக் காட்டும் காட்சிகள் குறும்பட பாணியில் இருக்கின்றன. அவை ‘விளையாட்டுத்தனமாக’ நம் மனதில் படுவதால், முழுக்கதையும் அப்படியே தெரிகிறது.

ஸ்பாய்லர் என்றபோதும் இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. முன்னாள் கணவன் சிவாவோடு சுந்தரி பழகுகிறார் என்பதை அவரது தாயும் சகோதரரும் அறிந்தபிறகு, இருவருமே பெரிதாக அதிர்ச்சி அடைவதில்லை. ’அதனால் என்ன’ என்பது போன்று இருக்கின்றனர்.

தந்தையும் கூட, ‘என்னதிது’ என்பது போல ‘ஜெர்க்’ ஆகிவிட்டு நொடியில் சாதாரணமாகி விடுகிறார்.

எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள் என்றபோதும், மண முறிவுக்குப் பிறகான சந்திப்புகள் எதற்கு என்ற யோசனையே அவர்களுக்குள் எழாததை யதார்த்தமாகக் கருத முடியவில்லை.

போலவே, சாய் மற்றும் சிவா இருவரும் சுந்தரியைச் சந்திக்கும்போது ஏற்படும் தவிப்பைச் சரியாகத் திரையில் பிரதிபலிக்கவில்லை.

விவாகரத்துக்குப் பிறகு நட்புடன் பழகுவோம் என்று சொல்வது, இன்றுவரை பரவலான வழக்கம் இல்லை. மனத்தெளிவு கொண்ட சிலர் மட்டுமே அந்த வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியிருக்க, அதனை ஒரு ‘பொதுப்படையான விஷயம்’ போல இயக்குனர் ப்ரியா.வி கையாண்டிருக்கிறார். அதேநேரத்தில், கிளைமேக்ஸ் காட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற அவரது குழப்பம், அக்காட்சியில் நடித்தவர்களையும் தொற்றியிருக்கிறது.

அது போன்ற சில விஷயங்களை ‘பட்டி டிங்கரிங்’ செய்திருந்தால் கூட, குறைந்தபட்சமாக ரசிக்கக்கூடிய படமாக ‘பொன் ஒன்று கண்டேன்’ அமைந்திருக்கும்.

இப்படத்தைப் பார்த்து முடித்தபிறகு ‘கண்டநாள் முதல்’ படத்தில் லைலா உடன் சேர்ந்து பிரசன்னா அதகளம் செய்யும் காட்சிகள் கண் முன்னே வந்து போனது; கூடவே, ‘கண்ணாமூச்சி ஏனடா’வில் சத்யராஜை கலாட்டா செய்யும் பிருத்விராஜும் ராதிகாவும் வந்து போயினர்.

‘அதுக்கெல்லாம் சில்லறைய சிதற விட்டோமே’ என்ற எண்ணம் மேலெழுந்தபோது, ‘எப்படியிருந்த ப்ரியா.வி இப்படி ஆயிட்டாரே’ என்ற வருத்தத்தைத் தவிர்க்க முடியவில்லை..!

  • உதய் பாடகலிங்கம்
You might also like